வர்ண ராமேஸ்வரன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
வர்ண இராமேசுவரன் |
---|---|
பிறந்ததிகதி | 5 நவம்பர் 1968 |
பிறந்தஇடம் | சிறுவிளான், யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | செப்டம்பர் 25, 2021 | (அகவை 52)
பணி | பாடகர் |
தேசியம் | இலங்கைத் தமிழர், கனடியர் |
கல்வி | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி |
அறியப்படுவது | கருநாடக இசைப் பாடகர், இசைக்கலைஞர் |
பெற்றோர் | முருகேசு வர்ணகுலசிங்கம் |
வர்ண இராமேஸ்வரன் (5 நவம்பர் 1968 – 25 செப்டம்பர் 2021) ஈழத்துக் கருநாடக இசைப் பாடகரும் மிருதங்கக் கலைஞரும் ஆவார். ஈழத்து எழுச்சிப்பாடல்கள் பலவற்றைப் பாடியவர். இவற்றுள் மாவீரர் துயிலுமில்லப் பாடலும், தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா என்ற பாடலும் மற்றும் அப்புகாமி பெற்றெடுத்த லொக்குபண்டா மல்லி என்னும் துள்ளிசைப் பாடலும் குறிப்பிடத்தக்கவை.[1] அது மட்டுமல்லாமல், பக்திப் பாடல்களையும் பாடியவர். இவர் மெட்டமைத்துப் பாடிய பக்திப்பாடல் இறுவெட்டுக்களில் நல்லை முருகன் பாடல்கள் மற்றும் திசையெங்கும் இசைவெள்ளம் மிகவும் பிரசித்திபெற்றவை.
1996ம் ஆண்டளவில் நோர்வேக்கும் புலம்பெயர்ந்து, தொடர்ந்து 1998ம் ஆண்டு கனடாவுக்கும் பெயர்ந்து மொன்றியலில் குடியேறினார்.[2]
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம், வடக்கு அளவெட்டியின் எல்லையில் உள்ள சிறுவிளான் என்ற சிற்றூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இராமேஸ்வரன். தந்தையார் கலாபூசணம், சங்கீதரத்தினம் முருகேசு வர்ணகுலசிங்கம் ஒரு சிறந்த இசைப் பாரம்பரியத்திலே தோன்றியவர். இவரது தந்தை வழிப்பேரனார், தாய் வழிப்பேரனாரும் இசை நாடகக் கலைஞர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார்.[3] இராமேசுவரன் பண்ணிசை மூலமும், பின்னர் மிருதங்கம் வாசிப்பது மற்றும் ஆர்மோனியம் வாசிப்பதன் மூலமும் தந்தையின் பயிற்சியில் கருநாடக இசையைக் கற்றார்.[3] வட இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்பட்ட வாய்ப்பாட்டு, மிருதங்கம் ஆகியவற்றுக்கான சோதனைகளில் ஆசிரியர் தரம் வரை தேறி, மிருதங்கக் கலாவித்தகர் என்ற பட்டம் பெற்றார்.[4] பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பிரிவில் மாணவனாக இணைந்து கொண்டார். அதன் வாயிலாக நான்கு ஆண்டுகள் இசைக்கலாமணி என்னும் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்று, அங்கேயே தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இசை விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.[4] சென்னைப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை மேற்கொண்டு டி. எம். தியாகராஜன், டி. வி. கோபாலகிருட்டிணன் போன்றோரிடம் இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேறினார்.[4]
இலங்கை வானொலி, தொலைக்காட்சி சேவைகளில் பல நிகழ்ச்சிகளை இசையமைத்து நடத்தியுள்ளார். தமிழ்த் தேசியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் பல தமிழ் எழுச்சிப் பாடல்களைப் பாடி இறுவட்டுகளாகவும், ஒலிநாடாக்களாகவும் வெளியிட்டுள்ளார்.[4]
கனடாவிற்குப் புலம் பெயர்ந்த இவர் தொராண்டோவில் 'வர்ணம் இசைக் கல்லூரி' என்ற பெயரில் இசைப் பாடசாலை ஒன்றை அமைத்து இசை வகுப்புக்களை நடத்தி வந்தார்.[4] அத்துடன் தனது தந்தையார் நினைவாக "வர்ணம் கிரியேஷன்ஸ்" (Varnam Creations) என்னும் ஆக்க வெளியீட்டகம் ஒன்றை 2015-ஆம் ஆண்டில் ஆரம்பித்து, அதன்மூலம் பிரபலமான தாயகக் கலைஞர்களின் படைப்புக்களை வெளியிட்டவர்.
2016-ஆம் ஆண்டில் கனடாவின் தமிழர் தகவல் மையம் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் தங்கப் பதக்கமும் அளித்து சிறப்புச் செய்தது.[4]
அத்துடன், 2017 ஏப்ரலில் இலண்டன் 'வெம்பிளி அரீனா'வில் IBC-தமிழ் நடாத்திய 'IBC தமிழா 2017' நிகழ்ச்சியில் பிரபல தென்னிந்திய இசைக்கலைஞர்களான மால்குடி சுபா, ஸ்ரீநிவாஸ், டி. இமான் ஆகியோருடன் சிறப்பு நடுவராக கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது, தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய "வாசலிலே அந்த ஒற்றைப் பனைமரம்" என்ற பாடலையும் மற்றும் கவிஞர் கலைவாணி இராஜகுமாரனின் "மறந்து போகுமோ மண்ணின் வாசனை" என்ற பாடலையும் பாடியுள்ளார்.
இவர் பாடிய எழுச்சிப் பாடல்களில் சில
- தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய...
- தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா
- எதிரியின் குருதியில் குளிப்போம்
- புறமொன்று தினம் பாடும் பெண்புலிகள் கூட்டம்
- அப்புகாமி பெற்றெடுத்த லொக்குபண்டா மல்லி
- ஊரெழுவில் பூத்தகொடி வேரிழந்தது
- வாயிலொரு நீர்த்துளியும்
- வேர்கள் வெளியில் தெரிவதில்லை
- கடற்கரும்புலிகள் மதனுடன் நிலவன்
- ஆர்ப்பரித்து எழுந்த அலை பாட்டிசைத்தது
- பெண்ணவள் கரும்புலி ஆகியே போயினள்
- புதிய உதயம் புலர்ந்திடும்
- எங்கே சென்றீர் தேசத்தின் குரலே
- அண்ணா அண்ணா தமிழ்ச்செல்வன் அண்ணா
- மறந்து போகுமோ மண்ணின் வாசனை
- வாசலிலே அந்த ஒற்றைப் பனைமரம்
- உயிரை விளக்காக்கி உதிரத்தால்...
மறைவு
கொரோனா வைரசுத் தொற்றால் பீடிக்கப்பட்ட வர்ண இராமேசுவரன் 2021 செப்டம்பர் 25 அன்று தனது 52-வது அகவையில் தொராண்டோவில் காலமானார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "ஈழப்பாடல்கள்: அப்புகாமி பெற்றெடுத்த - துள்ளிசைப்பாடல்". http://eelapadalhal.blogspot.com/2006/11/blog-post_116373836766801804.html.
- ↑ வர்ண இராமேஸ்வரன் - தணியாத தாயகப்பற்று I தாய்வீடு I நவம்பர் 2021
- ↑ 3.0 3.1 “ஈழமண் தந்த குயில்” வர்ணராமேஸ்வரன், நேர்காணல்
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 சங்கீத, மிருதங்க கலாவித்தகர் வர்ண ராமேஸ்வரன், தமிழர் தகவல் பெப்ரவரி 2016 (25ஆவது ஆண்டு மலர்), தொராண்டோ
- ↑ இசை அத்தியாயம் சரிந்ததுவே – வர்ண ராமேஸ்வரன்!, Toronto Tamil, செப்டெம்பர் 29, 2021