பொய் சொல்லப் போறோம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பொய் சொல்லப் போறோம் (திரைப்படம்)
கதைஜெய்தீப் சஹ்னி
திரைக்கதைஜெய்தீப் சஹ்னி
(மூலம்)
ஏ. எல். விஜய்
இசைஎம். ஜி. ஸ்ரீகுமார் (பாடல்கள்),
கோபி சுந்தர் (பின்னணி இசை)
ஒளிப்பதிவுஅரவிந்த் கிருஷ்ணா
படத்தொகுப்புஆண்டோனி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கார்த்திக் குமார், பியா பஜ்பை, நாசர், நெடுமுடி வேணு, மௌலி, கொச்சி ஹனிபா, டெல்லி கணேஷ் போன்ற நடிகர்களின் நடிப்பில் 2008 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான முழுநீள நகைச்சுவை திரைப்படம் பொய் சொல்லப் போறோம் ஆகும். இத்திரைப்படம் Khosla Ka Ghosla என்ற இந்தி திரைப்படத்தின் தழுவலாகும்.

கதை

நடுத்தர வசதி படைத்த சத்தியநாதன் (நெடுமுடி வேணு) தனது பணி ஓய்வு பணம் கிட்டத்தட்ட இருபத்தைந்து இலட்சம் முழுவதையும் கொடுத்து அவரது நெடுநாள் கனவான சொந்த வீடு கட்டுவதற்காக நகருக்கு வெளியே வீட்டு புரோக்கரான விஜயகுமார் (கொச்சின் ஹனிபா) மூலமாக இடம் வாங்குகிறார். அங்கே தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளான உப்பிலிநாதன் (கார்த்திக் குமார்), விஸ்வநாதன் மற்றும் மகள் சிந்து உடன் வீடு கட்டி குடியிருக்க வேண்டும் என்பதே அவரது ஒரே ஆசையாகும். ஆனால் மென்பொறியாளரான மூத்த மகன் உப்பிலிக்கோ இந்தியாவை விட்டே வெளியேறி நியூயார்க் நகரத்திற்கு சென்று வாழ வேண்டுமென்று அவா. அதற்காக விசா நடைமுறைகள் முடித்து விசாவிற்காக காத்திருக்கிறார். இவ்வாறிருக்க தான் வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கு முதற்படியாக பூமி பூஜை நடத்துவதற்காக தனது குடும்பத்தார் அனைவரையும் அழைத்துக் கொன்டு வரும் சத்தியநாதனுக்கு அதிர்ச்சி தரும் விதமாக அவருக்கு விற்கபட்ட இடத்தில் "பேபி பிராப்பர்டீஸ்" என்ற பெயருடன் சுற்றுச்சுவர் ஒன்று இருக்க அதைக்கேட்கும் அவர் ஒரு ரவுடியால் தனது குடும்பத்தார் முன்னிலையில் அவமானப்படுகிறார். தனக்கு இடத்தை விற்றவரான விஜயகுமாரிடம் நியாயத்தை கேட்கச்செல்கிறார் சத்தியநாதன். விஜயகுமாரோ பேபியை எதிர்த்து தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்றும் வேண்டுமானால் அந்த பேபி என்பவரை சந்திக்க அனுமதி வாங்கித்தருவதாகவும் சமாதானப்படுத்துகிறார். வேறு வழியில்லாமல் பேபியை (நாசர்) சந்திக்க செல்லும் அவர்களிடம் மேலும் பன்னிரெண்டு இலட்சம் பணம் கொடுத்தால் அந்த இடத்தைக் காலி பண்ணுவதாக பேரம் பேசி மிரட்டுகிறார். பல வழிகளை யோசிக்கும் சத்தியநாதன் வேறுவழியின்றி ரவுடிகளை வைத்து பேபியை மிரட்டி காலி பண்ணலாம் என நினைத்து அவர்களைக் கூலிக்கு அமர்த்துகிறார். ஆனால் மறுநாள் அவரையே காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இதையெல்லாம் மௌனமாக வேடிக்கை பார்க்கும் உப்பிலி தனது தந்தையார் அந்த இடத்தின் மீது வைத்துள்ள பற்றையும் அங்கு குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையையும் புரிந்து கொன்டு உதவ எண்ணுகிறார். பேபியின் முன்னாள் உதவியாளரும் அவரால் ஏமாற்றப்பட்டவருமான ஆசிப் பாய் (பாஸ்கி) என்ற பிரயாண தரகர் ஒருவரின் தொடர்பு கிடைக்கும் உப்பிலி, அவரது அறிவுறுத்தலின் படி தனது காதலியான அம்ருதா (பியா பாஜ்பாய்) உடன் இணைந்து நாடக நடிகரும் நூற்று முப்பத்தாறு விருதுகள் பெற்றவருமான டாடி (மௌலி) என்பவரை துபாயில் இருந்து வரும் தொழிலதிபராக நடிக்க வைத்து பேபியை ஏமாற்ற திட்டமிடுகின்றான். அதன்படி அரசாங்கத்தின் மீன் வளத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை தனக்கு சொந்தமென்றும் அதை பேபிக்கு குறைந்த விலைக்கு விற்பதாகவும் டாடியும் குழுவினரும் நடிக்கின்றனர். அதை நம்பி ஏமாறும் பேபி பணம் கொடுக்கின்றார். அந்தப் பணத்தையே சத்தியநாதன் திரும்பக் கொடுத்து தனது நிலத்தை மீட்கிறார். இறுதியில் மகிழ்ச்சியாகத் தனது இடத்தில் தனது வீட்டில் தனது குடும்பத்தாருடன் வாழ்கின்றார். ஆனால் தனது உதவியாளர் ஜானியின் மூலம் தான் ஏமாற்றப்ட்டதை அறியும் பேபி சமுதாயத்தில் தனது மதிப்பும் மரியாதையும் பயமும் குறைந்துவிடும் என்பதால் இதை அப்படியே மறைக்க முடிவு செய்கிறார்.

நடிகர் குழுவினர்

  • நெடுமுடி வேணு K.R.சத்தியநாதனாக, (குரல் கொடுத்தவர் ராஜேஸ்
  • நாசர், பேபியாக
  • கார்த்திக் குமார் உப்பிலி என்ற உப்பிலிநாதனாக
  • ஜஸ்டினா சிந்துவாக
  • லெட்சுமி ராமகிருஷ்ணன் சத்தியநாதனின் மனைவியாக
  • டெல்லி கணேஷ் முதல்வராக
  • அரவிந்த் கிருஷ்ணா, காவல்துறை அதிகாரியாக
  • பியா பாஜ்பாய், அம்ருதாவாக (குரல் கொடுத்தவர் சுசித்ரா)
  • மௌலி, நாடக நடிகர் டாடியாக
  • பாலாஜி வேணுகோபால், நாடக இயக்குனராக
  • பாஸ்கி, ஆசிப் பாயாக
  • ஜான் விஜய், ஜானியாக
  • கொச்சி ஹனிபா, வீட்டுத்தரகர் விஜயகுமாராக

சில குறிப்புகள்

பூஜை இல்லாமல், சுவரொட்டி இல்லாமல், படத்துக்குப் பெயர் கூட வைக்காமல், படப்பிடிப்புக்குக் கிளம்பிச் சென்று முப்பதே நாளில் மொத்தப் படத்தையும் முடித்துள்ளார். "கிரீடம்" திரைப்பட இயக்குனர் விஜய். இயக்குனர் பிரியதர்ஷன், யு.டி.வி. நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது இப்படமாகும்.[1] முப்பத்து நான்கு நாட்களில் முடித்தாலும் நாசர், நெடுமுடி வேணு, மௌலி போன்ற பல முக்கிய நடிகர்களுடன் பல புதுமுக நடிகர்களும் நடித்துள்ள இப்படத்தில்தான் தமிழ் திரை உலகில் முதன்முதலாக படக்குறிப்புகள் அடங்கிய பாடல் (தீம் பாடல்) வெளியிடப்பட்டது.[2][3]

வெளியிணைப்புகள்

  1. "Directing Madhrasapattinam -". Rediff Movies. 2010-07-06. http://movies.rediff.com/slide-show/2010/jul/06/slide-show-1-south-interview-with-vijay.htm. பார்த்த நாள்: 2013-05-15. 
  2. "Promotional song for 'Poi Solla Porom'". Indiaglitz.com. 2008-06-20 இம் மூலத்தில் இருந்து 2013-01-26 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130126063319/http://www.indiaglitz.com/channels/tamil/article/39460.html. பார்த்த நாள்: 2013-05-15. 
  3. "Stargazing". The Hindu (Chennai, India). 1 August 2008 இம் மூலத்தில் இருந்து 11 அக்டோபர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081011131616/http://www.hindu.com/thehindu/fr/2008/08/01/stories/2008080150790400.htm.