நடுநாடு
நடுநாடு என்பது சோழநாட்டுக்கும் தொண்டைநாட்டுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியாகும். பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய இடைக்காலச் சோழர் ஆட்சியின்போது ஆட்சி அமைப்பில் வளநாடு, நாடு, கூற்றம், என்னும் நாட்டுப் பிரிவுகள் தோன்றின. அப்போது சோழநாட்டுக்கும், தொண்டைநாட்டுக்கும் இடைப்பட்டுக் கிடந்த நிலப்பகுதியை நடுநாடு எனப் பெயரிட்டு வழங்கினர். தேவாரத் திருத்தலங்களும், திவ்விய தேசங்களும் நடுநாட்டிலுள்ள கோயில்கள் எனச் சில கோயில்களைப் பகுத்துக் காட்டுகின்றன. இந்த நடுநாட்டை மகதம் எனவும் வழங்குவர். மகதை என்பது தமிழ்நாட்டிலுள்ள மகதம். இதனை நடுநாடு என்றும் கூறுவர். சங்ககாலத்தில் இது அருவாளர் வாழ்ந்த அருவாள் நாடு, ஓய்மான் நல்லியாதன் முதலானோர் ஆண்ட ஓய்மானாடு ஆகிய பெயர்களுடன் விளங்கியது. வடநாட்டிலுள்ள மகதம் தமிழ் அல்லாத மொழி பேசப்படும் 17 நிலங்களில் ஒன்று.
நடுநாடு பெயர்க்காரணம்
நடுநாடு என்னும் பெயர் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவையாவன:
- தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கும் நடுவே இருப்பதால் நடுநாடு எனப்பட்டது. அஃதாவது, தென்பெண்ணையாற்றுக்கு வடக்கேயிருப்பது தொண்டை நாடு; வடவெள்ளாற்றிற்குத் தெற்கே யிருப்பது சோழநாடு; இந்த இரண்டிற்கும் நடுவேயிருப்பது நடுநாடு.
- மலையமான், தான் புரிந்த உதவிகளுக்காகச் சேர சோழ பாண்டிய மன்னர்கள் தனக்கு அளித்த நிலப்பகுதிகளை இணைத்து, மூவர் நாடுகட்கும் எல்லை உடையதாக - மூவர் நாடுகட்கும் நடுவே அமைத்துக் கொண்ட நிலப்பகுதி யாதலின் நடுநாடு எனப்பட்டது.
- முடியுடை மூவேந்தர்க்கும் பொதுவுடைமை உள்ளதாக நடுநிலைமையில் இருந்ததால் நடுநாடு எனப்பட்டது.
- மலையமான் மரபினர் மூவேந்தரிடத்தும் நட்பு உடையவராக மூவேந்தரும் உதவி வேண்டிய போதெல்லாம் புரிந்தவராக - மூவேந்தர்க்கும் நடுநிலை உடையவராக இருந்தமையால் அவர்கள் ஆண்ட நாடு நடுநாடு எனப்பட்டது.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005