தம்பையா ராஜகோபால்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரி. ராஜகோபால்

ரி. ராஜகோபால் என அழைக்கப்படும் தம்பையா ராஜகோபால் (பிறப்பு: 4 அக்டோபர் 1942), இலங்கையின் புகழ்பெற்ற மேடை, வானொலி நடிகர். ஐநூறுக்கும் அதிகமான நாடகங்களில் நடித்துள்ளார். அப்புக்குட்டி ராஜகோபால் எனவும் இவர் அழைக்கப்பட்டார்.

வாழ்க்கைச் சுருக்கம்

யாழ்ப்பாணத்தில், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தன் ஆரம்பக் கல்வியை மானிப்பாய் அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும், பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். 1959 ஆம் ஆண்டில் குறிப்பாகக் கல்லூரிக் காலங்களில் இல்லப்போட்டிகளின் கலைவிழாக்களில் நடிகனாக கால் பதித்தார். 1960களில் கலையரசு சொர்ணலிங்கத்தின் வழிந‌டத்தலில் ‘தேரோட்டி மகன்’ நாடகத்தின் மூலம் நாடக உலகில் காலடி எடுத்து வைத்தவர். "கோமாளிகள்" நாடகக் குழுவில் யாழ்ப்பாணத் தமிழில் பேசும் 'அப்புக்குட்டி' பாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றவர். தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் இவரது குடும்பம் ஒரு கலைக்குடும்பமாகும். மூத்த சகோதரர்களான அரியரட்னம், மெய்கண்டதேவன், இளைய சகோதரர் தயாநிதி ('நையாண்டி மேளம்' நடிகர்) ஆகிய அனைவரும் நாடகக் கலைஞர்களே.

வெள்ளிவிழாக் கலைஞர்

1990ல் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் தன் கலையுலக நண்பர்களான எஸ். ராம்தாஸ், எஸ். செல்வசேகரன், பி. எச். அப்துல் ஹமீட், கே. எஸ். பாலச்சந்திரன் ஆகியோருடன் வெள்ளிவிழாவைக் கொண்டாடியவர்.

வானொலியில்

இலங்கை வானொலியில் வர்த்தக சேவை, தேசிய சேவை இரண்டிலும் ஏராளமான நாடகங்களில் நடித்த்வர். எஸ்.ராம்தாஸின் 'கோமாளிகள் கும்மாளம்', கே. எஸ். பாலச்சந்திரனின்' கிராமத்துக் கனவுகள்' போன்ற பல தொடர் நாடகங்களில் நகைச்சுவை பாத்திரங்களிலும், குணசித்திர பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

திரைப்படங்களில்

கோமாளிகள், ஏமாளிகள் போன்ற ஈழத்துத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மேடையில்

கே. எம். வாசகர் (புரோக்கர் கந்தையா, பார்வதி பரமசிவம்), எஸ். ராம்தாஸ் (காதல் ஜாக்கிரதை, கலாட்டா காதல்), எஸ். எஸ். கணேசபிள்ளை (கறுப்பும் சிவப்பும்) ஆகியோரின் மேடை நாடகங்கள் பலவற்றில் நடித்தவர்.

விருதுகள்

  • கலாவினோதன் பட்டம் (கொழும்புக் கலையகம், 1968)
  • கலாவித்தகன் பட்டம் (கொழும்புக் கலையகம், 1969)
  • நகைச்சுவை மன்னன் பட்டம் (இலங்கைக் கலாச்சார அமைச்சு 1978)
  • மண்வாசனைக் கலைஞன் (கொழும்புக் கலைவட்டம் 1978)
  • ஈழத் தமிழ் விழிகள் விருது (பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம்)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தம்பையா_ராஜகோபால்&oldid=20700" இருந்து மீள்விக்கப்பட்டது