தமிழிசைக் கலைக்களஞ்சியம்
தமிழிசைக் கலைக்களஞ்சியம் தமிழிசையின் தொன்மையும் ஆழமும் விளக்கப்பட்டுள்ள ஒரு தமிழ்க் கலைக்களஞ்சியம். இந்தக் களஞ்சியத்தில் இசை (சுரஇயல், பண்ணியல், ஆலாபனை நெறிகள், தாள நெறிமுறைகள்,பாடல் வடிவங்கள், யாப்பியல் நெறிகள்), நடனம், இசைக்கருவிகள், பாடல் இயற்றியோர் வரலாறு, தமிழிசைக்குத் தொண்டு செய்தோர் வரலாறு முதலியன பதிவாகியுள்ளன. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தமிழிசை வரலாற்றை மீட்டெடுக்கும் ஆவணங்களாக மொத்தம் 4 தொகுதிகளாக இவை வெளியிடப்பட்டன.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் முனைவர் வீ. ப. கா. சுந்தரம் தமிழிசைக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கினார். இது நான்கு தொகுதிகளைக்கொண்டது. முதல் தொகுதி (அ-ஔ) 1992 மார்ச்சுத் திங்களில் வெளிவந்தது. இரண்டாம் தொகுதி (க.ஞ) 1994 நவம்பரில் வெளியானது. மூன்றாம் தொகுதி (த-ப) 1997 இல் வெளியானது. நான்காம் தொகுதி (ம-ய-வ) 2000 பிப்ரவரியில் வெளிவந்தது.
இந்த நான்கு தொகுதிகளும் வெளிவர 12 ஆண்டுகள் ஆயின. இதில் மொத்தம் 2,232 தலைப்புச்செய்திகள் அடங்கியுள்ளன. தமிழிசையின் தொன்மையும் ஆழமும் நன்கு விளக்கப்பட்டுள்ளன.
மூன்று தொகுதிகள் எழுதி முடித்த நிலையில் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கிற்கு வந்த அறிஞர் வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் உடல்நலக் குறைவுற்றார். அதன்பிறகு அறிஞரின் விருப்பப்படி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் உதவியாளராகப் பணியமர்த்தப்பட்ட முனைவர் மு. இளங்கோவனால் தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதி எழுதி முடிக்கப்பட்டது.
தொகுதிகள் அட்டவணை
தொகுதி | ஆசிரியர் | வெளியீட்டு ஆண்டு | பக்கங்கள் |
முதல் தொகுதி (அ-ஔ) | வீ. ப. கா. சுந்தரம் | 1992 மார்ச்சு | 36 + 348 |
இரண்டாம் தொகுதி (க-ஞ) | வீ. ப. கா. சுந்தரம் | 1994 நவம்பர் | 28 + 388 |
மூன்றாம் தொகுதி (த-ப) | வீ. ப. கா. சுந்தரம் | 1997 | 24 + 316 |
நான்காம் தொகுதி (ம-ய-வ) | மு. இளங்கோவன் | 2000 | 24 + 150 |
உசாத்துணைகள்
- இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)
- பாரதிதாசன் பல்கலைக்கழகம் இசையியல் வெளியீடுகள் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- தமிழிசைக் கலைக் களஞ்சியம் நான்கு தொகுதிகளும் ஒரே மின்னூலாக.