சோமலெ
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சோமலெ |
---|---|
பிறப்புபெயர் | சோம. லெட்சுமணன் |
பிறந்ததிகதி | 11 பெப்ரவரி 1921 |
பிறந்தஇடம் | நெற்குப்பை, சிவகங்கை மாவட்டம், இந்தியா |
இறப்பு | நவம்பர் 4, 1986 | (அகவை 65)
அறியப்படுவது | தமிழறிஞர், எழுத்தாளர், ஆய்வாளர் |
பெற்றோர் | சோமசுந்தரம், நாச்சம்மை |
துணைவர் | நாச்சம்மை |
பிள்ளைகள் | திருவத்தாள், மீனாட்சி, மல்லிகா, சீதா, சோமசுந்தரம் |
எழுத்துலகில் சோமலெ என்று அறியப்படும் சோம. லெட்சுமணன் (S. M. L. Lakshmanan, 11 பிப்ரவரி 1921 – 4 நவம்பர் 1986) படைப்பாளராகவும் ஆய்வாளராகவும் சமுதாயச் சிந்தனையாளராகவும் திகழ்ந்து தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பொதுவாழ்க்கையில் செலவிட்டு இலக்கியப் பணியோடு பல சமுதாய நற்பணிகளையும் செய்துள்ளார். ஏ.கே. செட்டியாரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு தனது அறுபத்தைந்து ஆண்டுகால வாழ்வில் பல்துறை நூல்களைப் படைத்து இலக்கிய உலகில் தனக்கான இடத்தினை உருவாக்கியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சோமலெ 1921 பிப்ரவரி பதினோராம் நாள் இன்றைய சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்திற்குள் அமைந்திருக்கக்கூடிய நெற்குப்பைப் பேரூராட்சியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபைச் சேர்ந்த சோமசுந்தரம், நாச்சம்மை ஆகியோருக்கு இரண்டு ஆண் மற்றும் மூன்று பெண் பிள்ளைகளுக்குப் பிறகு ஆறாவது மகனாகப் பிறந்தார். 1941 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், 1947 இல் பம்பாயிலுள்ள ஹாரிமன் இதழியல் கல்லூரியில் பத்திரிகைத் துறையில் நிறைசான்றிதழ் பட்டமும் பெற்றார். சோமலெ பதினாறாம் வயதில் நாச்சம்மை என்பவரை மணம்முடித்து இல்வாழ்க்கையைத் தொடங்கினார். திருவத்தாள், மீனாட்சி, மல்லிகா, சீதா மற்றும் சோமசுந்தரம் ஆகிய ஐவர் சோமலெவின் பிள்ளைகள் ஆவர்.
எழுத்துலக அறிமுகம்
- நூல்களுக்கும், நூலகத்திற்கும் பெரும் முக்கியத்துவம் அளிப்பவர் சோமலெ. எப்போதும் கையில் சிறிய கையேடும் எழுதுகோலும் வைத்துக்கொண்டு செய்திகளைக் குறிப்பு எடுக்கும் வழக்கம் கொண்டவர். வாசிப்பும் செய்தி சேகரிப்பும் சோமலெ நாளும் செய்த சோர்விலாப் பணிகள்.
- அவர்தம் எழுத்துப்பயணம் பதின்மூன்று அகவையில் தொடங்கியது. படிப்பை நிறைவு செய்தபின் ஆரம்பக்காலத்தில் சோமலெ வேளாண்மை செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். சூழ்நிலைகள் காரணமாக அம்முயற்சிகளில் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டாலும் சோமலெ மனம் தளரவில்லை. தொடர்ந்து தமது குடும்பத்தினர் நடத்தி வந்த வணிகத்தைக் கையிலெடுத்து அயராது உழைத்தார்.
- வணிகத்தில் ஏற்றுமதி - இறக்குமதி சேவையை முன்னேற்றம் பெறச் செய்ய கடல் கடந்து பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
- 1947-1948 இல் பர்மா, 1948 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல தேசங்களுக்குச் சென்றுவந்தார் .
- ஏ.கே. செட்டியாரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட சோமலெ தனது பயண அனுபவங்களை ஏட்டில் தர முனைந்தார் . அதன் நீட்சியாகவே சோமலெ எனும் பன்முக ஆளுமையாக பல்வேறு படைப்புகளுடன் இலக்கிய உலகில் அழியாத் தடம் பதித்துச் சென்றுள்ளார் .
அறிஞர்கள் கூற்று
“சொல்லால் அமுதை வென்றிடுவான் சோம லக்குமணன் வாழ்க!”[1]என்று கவிமணி சோமலெவின் மொழித்திறனை அமுதோடு ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் “உரைநடைக் கம்பன் சோமலெ”[2] என்றும் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் “நெற்குப்பை பெற்றுத்தந்த நிறைகுடம்”[3] என்றும் கவிஞர் அ.சொ.சிவப்பிரகாசம் “தூய நூற்சுவடி தந்த தூயவர்”[4] என்றும் சோமலெவைப் புகழ்ந்துரைத்துள்ளனர்.
சோமலெவின் பயணச் சிறப்பினை எடுத்துரைக்குமாறு கவிஞர் தாராபாரதி “உலகம் சுற்றிச் சிறப்படைந்த தென்னாட்டு மார்க்கோ போலோ!”[5] என்று குறிப்பிட்டுள்ளார்.
“தேனீயும் பின்னடையும் சுறுசுறுப்பு!
சிற்றெறும்பும் அறியாத விறுவிறுப்பு!
வானீயும் மாமழையும் பிற்பட்டேங்க!
வளர்தமிழுக் கவரளித்த புலத்தொகுப்பு!”[6]
என்று ‘தொல்காப்பியச் செம்மல்’ தமிழண்ணல் சோமலெ இயற்றிய பல்துறை சார்ந்த இலக்கியங்களின் அளவில்லாத் தன்மையையும் அவ்விலக்கியப் பணியில் அவரின் ஈடுபாட்டினையும் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
“அறிவுக் கடல் சோமலெ உழைப்பின் வடிவம். அவரே ஒரு பெரிய நிறுவனம்… இந்நூற்றாண்டில் தமிழுக்குப் புதுமைப் பொலிவு செய்தவர்”[7] என்று அறிஞர் வ.சுப. மாணிக்கம் குறிப்பிட்டுள்ளார்.
படைப்புகள்
பயணநூல்கள் - பொது
- நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் (1949)
- அமெரிக்காவைப் பார் (1950)
- ஆஸ்திரேலியாவில் ஒருமாதம் (1950)
- என் பிரயாண நினைவுகள் (1950)
- நமது தலைநகரம் (1952)
- பிரயாணம் ஒருகலை (1955)
- பிரயாண இலக்கியம் (1958)
- பர்மா (1968)
- அலைகடலுக்கு அப்பாலும் நகரத்தார்களின் ஆலயப்பணிகள் (1979)
- உலகநாடுகள் (1987)
- வட மாநிலங்களில் தமிழர் (1988)
- இமயம் முதல் குமரிவரை (1998)
தமிழ்நாடு வரிசை
- சேலம் மாவட்டம் (1961)
- தஞ்சாவூர் மாவட்டம் (1961)
- வட ஆர்க்காடு மாவட்டம் (1961)
- கோவை மாவட்டம் (1961)
- கன்னியாகுமரி மாவட்டம் (1961)
- தென் ஆர்க்காடு மாவட்டம் (1963)
- செங்கற்பட்டு மாவட்டம் (1963)
- திருநெல்வேலி மாவட்டம் (1963)
- இராமநாதபுரம் மாவட்டம் (1972)
- மதுரை மாவட்டம் (1980)
ஆப்பிரிக்க நாடுகள் வரிசை
- ஆப்பிரிக்கா (1964)
- ஐக்கிய அரபுக் குடியரசு(1964)
- கானா(1964)
- நைஜீரியா(1964)
- எத்தியோப்பியா(1965)
- கிழக்கு ஆப்பிரிக்கா(1968)
- மேற்கு ஆப்பிரிக்கா(1968)
- தென்ஆப்பிரிக்கா(1968)
- நடுஆப்பிரிக்கா(1968)
- வடமேற்கு ஆப்பிரிக்கா(1969)
- சூடானும் காங்கோவும்(1969)
- சஹாரா(1969)
உலகநாடுகள் வரிசை
- கனடா (1960)
- சுவீடன் (1960)
- ஜப்பான் (1960)
- குவாயிட் (1960)
- தாய்லாந்து (1960)
- பிரான்ஸ் (1960)
- வாட்டிகன் (1960)
- மொரீசியஸ் (1960)
- இந்தோனேசியா (1960)
- பீஜித் தீவுகள் (1960)
வாழ்க்கை வரலாறு
- பண்டிதமணி வாழ்க்கை வரலாறு (1971)
- பண்டிதமணி:மதுரை பல்கலைக் கழகத்து 1978 ஆம் ஆண்டு புதுமுக வகுப்புத் தேர்வுக்குரிய பகுதி துணைப்பாடநூல் (1977)
- விவசாய முதலமைச்சர் ஓமந்தூரார் வாழ்க்கை வரலாறு (1979)
- சர்தார் வேதரத்தினம் (2002)
இதழியல்
- தமிழ் இதழ்கள் (1975)
நாட்டுப்புறவியல்
- தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் (1981)
மொழி ஆராய்ச்சி
- வளரும் தமிழ் (1956)
நகரத்தார் இயல் ஆய்வுகள்
- செட்டிநாட்டுத் தாலாட்டு (1960)
- செட்டிநாடும் செந்தமிழும் (1984)
அரசியல்
- நீங்களும் தூதுவர் ஆகலாம் (1958)
தொழில்
- நெய்வேலி (1960)
பல்துறை நூல்கள்
- இலண்டனில் “லக்கி” Dr.SM.Lakshmanan (1958)
- நான் கண்ட விழாக்கள் (1960)
- பல்சுவைக் கட்டுரைகள் (1961)
- சிறுவர்களுக்கு ஒரு சில கதைகள் (1972)
- பழனி திருக்கோயில் வழிகாட்டி (1975)
- வேளாண்மைப் பல்கலைக்கழகம் (1985) (சோமலெ ரூ சோமலெ சோமசுந்தரம்)
- தமிழ்நாடு மாவட்ட விவரச் சுவடிகள்: இராமநாதபுரம் - டாக்டர் அ. ராமசாமி (மொழிபெயர்ப்பு சோமலெ)
- பதிப்புத்துறை முன்னோடி மூவர்
கோவில் குடமுழுக்கு நீராட்டு மற்றும் சிறப்பு மலர்கள்
- ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் நூற்றாண்டு மலர் (1963)
- நெற்குப்பை இளையாத்தக்குடி – கழனிவாசல் நகரத்தார் வைகாசி விசாகப் பொன்விழா மலர் (1971)
- காசி விசாலாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு மலர் (1971)
- நாசிக் பஞ்சவடி கார்த்திக் சுவாமி கோவில் குடமுழுக்கு மலர் (1972)
- இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக சிறப்புமலர் (1975)
- அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் கோவில், முறையூர், கும்பாபிஷேக மலர் (1975)
- அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் கும்பாபிஷேக மலர் (1976)
- கோவிலூர் அருள்மிகு திருநெல்லை நாயகி உடனாய அருள்மிகு கொற்றவன் ஈசுவரன் கோவில் திருக்குட நீராட்டு மலர் (1978)
- நெற்குப்பை நகரத்தார் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா (1978)
- தில்லை மூலட்டான ஈசுவரர் கோவில் குடமுழுக்கு விழா மலர் (1979)
- காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோவில் திருக்குட நீராட்டு மலர் (1979)
- பெங்களூர் கெஞ்சனஹள்ளி அருள்மிகு அன்னை இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் திருக்குட நீராட்டு முதலாண்டு நிறைவு விழாச் சிறப்பு மலர் (1979)
- கோவில்: சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேக மலர் (1979)
- கோட்டையூர் அருள்மிகு மீனாட்சி அம்மை உடனாய அருள்மிகு சோமசுந்தரேசுவரர் திருக்கோவில் திருக்குட நீராட்டு மலர் (1980)
- சென்னை நகரத்தார் மாணவர் சங்கம் மலர் (1964)
- முறையூர் R.M. தெய்வராயன் செட்டியார் நினைவு மலர் (1970)
- தமிழ்நாடு மாநில சிமெண்ட் வணிகர்கள் சங்கம் - முதல் மாநில மாநாட்டு மலர் (1976)
- நகரத்தார் மாநில மாநாட்டு மலர் (1975)
ஆங்கில நூல்கள் மற்றும் சிறப்பு மலர்கள்
83. Travel Literature in Tamil (1969)
84. Folklore of Tamil Nadu (1973)
85. Palani Arulmigu Thandayuthapani Swamy Temple (1975)
86. European Impact on Modern Tamil Writing and Literature (1976)
87. AVM’s Guide to South India (1981)
88. Coast to Coast Kaleidascope
89. Chettiars and Hinduism in South East Asia (1972)
90. Compilation of Tamil Books Published from 1901 to 1953 (for Sahitya Academy)
91. The Annamalai University, Silver Jubliee Record (1955)
92. Annamalai University Polytechnic Magazine (1957 - 1958)
93. Annamalai University (1979)
94. Annamalai University Golden Jubilee Souvenir (1979)
95. Neyveli Lignite Project and the Annamalai University (1964)
96. Welcome to the Annamalai University (1958)
97. Indian Bank Golden Jubliee Souvenir (1958)
98. 32 Facts About Annie Besant (1974)
99. Swedish Mission Hospital Golden Jubilee Souvenir (1959)
100. Lions International District 304 – South Kodaikanal Convention Souvenir (1961)
101. Address to The Inter – Polytechnic Athletic Association – (1961)
102. Proceedings of Fifth International Conference - Seminar on Tamil Studies, Madurai (1981)
தமிழில் மொழிபெயர்த்த நூல்கள்
103. Meet the U.S.A., Institute of International Education (1965)
104. Aspects of Political Ideas and Institutions in Ancient India
சிறப்புகள்
- 1953 - 1955 சென்னை Y.M.C.A. பட்டிமன்றம் - தலைவர்.
- 1955 - 1958 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலர்.
- 1958 - 1960 அண்ணாமலைத் தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளர்.
- 1955 - 1961 சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை உறுப்பினர்.
- 1965 - 1971 மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினர்.
- 1965 - தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்.
- கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் இவர்தம் நூல்களை ஆய்வுப் பொருண்மையாக்கியுள்ளது.
- லெனின்கிரேடு பல்கலைக்கழகம் சோமலெவின் ‘வளரும் தமிழ்’ நூலைப் பாடநூலாக்கியுள்ளது.
- அமெரிக்காவின் பென்சில்வேனியா மற்றும் வடக்கு அயோவா பல்கலைக்கழகங்கள் தெற்காசிய நாடுகளின் உற்ற ஆலோசகராக சோமலெவினைப் பெருமைப்படுத்தியுள்ளன.
இலக்கியப்பணி
- சோமலெவின் மாவட்ட வரிசை நூல்கள் தமிழ்நாட்டு மாவட்டங்களின் பழமை, சிறப்புகள்,நிலவமைப்பு, மக்கள்தொகை எனப் பல்வேறு கோணங்களிலும் தகவல்களைக் கொண்டுள்ள தகவல் களஞ்சியங்களாகத் திகழ்கின்றன.
- இவர்தம் வெளிநாட்டுப் பயணநூல்கள் ஒவ்வொரு நாட்டிற்குமான தனிச்சிறப்புகளையும் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் ஒப்பிட்டுக்கூறித் தெளிவுறுத்துகின்றன.
- ‘வளரும் தமிழ்’ என்னும் மொழி ஆராய்ச்சி நூல் தமிழ் மொழியின் வளமை, தமிழ் அறிஞர்கள் மற்றும் அவர்களது தமிழ்ப்பணிகள் பற்றி எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
- ‘செட்டிநாடும் செந்தமிழும்' என்னும் நூல் நகரத்தார்கள் செய்த தமிழ்ப்பணிகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
- தமிழரின் வாழ்வியல், பண்பாடு, பழக்கவழக்கம், விழாக்கள் உள்ளிட்டவற்றை தெளிவுற எடுத்துரைக்குமாறு ‘தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்’ என்னும் நூலினைப் படைத்துள்ளார். இந்நூலை இந்திய மொழிகள் பலவற்றிலும் நேஷனல் புக் டிரஸ்ட் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
- ‘ஒரு சில கதைகள்’ என்னும் சிறுவர்களுக்கான நூலினையும் அரசுத் தூதுவர்களிடம் இருக்கவேண்டிய குணநலன்கள், ஆளுமைகள் பற்றிய ‘நீங்களும் தூதுவர் ஆகலாம்’ எனும் நூலினையும் எழுதியுள்ளார்.
- தமிழ்மொழி மட்டுமின்றி ஆங்கிலத்திலும் நூல்கள் மற்றும் மலர்கள் வெளியிட்டுள்ளார். Meet The U.S.A., Aspects of Politcal Ideas and Institutions in Ancient India எனும் இருநூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.
- சோமலெ கடிதங்கள் எழுதும் பழக்கம் கொண்டவர். குறிப்பாகத் தன் மகன் சோமசுந்தரத்திற்குப் பல்வேறு கடிதங்கள் எழுதியுள்ளார். அவை குடும்பம், சமுதாயம், பொதுவாழ்வு, உலகநடப்பு, வாழ்வியலுக்குத் தேவையான சிந்தனைகள் உள்ளிட்ட நீண்ட கடிதங்களாக இருக்கும். திரு. சோமசுந்தரம் தன் தந்தையாரின் கடிதங்கள் பற்றித் தெரிவிக்கும்போது “சுருக்கமாக இவை நேருஜி இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் போன்றவை”[8] என்று கூறியுள்ளார்.
- சோமலெவின் படைப்புகள் அவர் மிகச்சிறந்த கள ஆய்வாளர் என்பதனை உணர்த்துகின்றன.
சமுதாயப்பணி
- இலக்கியப் பணிகளோடு இவர் ஆற்றிய சமூகப் பணிகளும் எண்ணற்றவை. “இலக்குமணக் கோபமது ஊர்க்கு லாபம்”[9] என்று கவிஞர் தாராபாரதி சோமலெ பற்றிக் குறிப்பிட்டிருப்பது அவரின் எண்ணங்களும் செயல்பாடுகளும் சமுதாய நலனைப் பேணுவதற்காக அவரளித்த முக்கியத்துவத்தினை உணர்த்துகின்றன.
- சோமலெ, தான் பிறந்த மண்ணுக்கும் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் நெற்குப்பையில் நூலகம், வங்கி, தொலைபேசி நிலையம், காவல் நிலையம், அஞ்சலகம் போன்றவை அமைவதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
- சோமலெ தனது பெற்றோரின் நினைவாக மதுரை மாவட்டம் கொடுக்கம்பட்டி அருகே பேப்பனையம்பட்டியில் சோமசுந்தர விநாயகர் திருக்கோயில் கட்டியுள்ளார்.
- “இல்லை என்றவர்களுக்குக் கொடுத்து உதவுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே”[10] என்று எட்டு ஆண்டுகாலம் (1969-1977) சோமலெவின் உதவியாளராக இருந்த திரு. சரவணன் தெரிவித்துள்ளார்.
சோமலெவின் நினைவாக
- சோமலெவின் நினைவாக அவரின் குடும்பத்தார் நெற்குப்பையில் அமைத்த “சோமலெ நினைவு நூலகம்” அரசின் கிளை நூலகமாக மாணவ மாணவிகளும் பொதுமக்களும் பயனுறும் வகையில் தமிழகத்தின் மிகச் சிறந்த கிராம நூலகங்களில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது.
- நூலகத்தைப் பயன்படுத்தும் வாசகர்களைக், குறிப்பாக மாணவர் களை ஊக்குவிக்கும் விதமாக ‘நல்வாசகர் விருது’ வழங்கிச் சிறப்பிக்கின்றனர்.
- ஆண்டுதோறும் சோமலெவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளன்று சோமலெ நினைவு நூலகத்தில் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- 2021ஆம் ஆண்டு சோமலெ நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து தமிழ்ச் சமூகத்திற்கு சோமலெவின் படைப்புகளைக் கொண்டு செல்லும் நோக்கில் தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தோறும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.
- 25.11.2021 அன்று சாகித்திய அகாதெமி மற்றும் சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசுவாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியும் இணைந்து ‘சோமலெ நூற்றாண்டு விழா’ நிகழ்வாக உரையரங்கத்தை நடத்தினர். இதில் சோமலெவின் நூல்கள் குறித்து வெவ்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பலர் உரை வழங்கினர்.
- 18.03.2022 அன்று மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் சோமலெவினைச் சிறப்பிக்கும் நோக்கிலும் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும், மதுரை மாவட்டம் தொடர்பான திறனறி போட்டிகள் நடத்தப்பட்டன.
- சோமலெ மதுரை மாவட்டம் பேப்பனையம்பட்டியில் தன் தந்தையின் நினைவாகக் கட்டிய அருள்மிகு சோமசுந்தர விநாயகர் கோவில் அப்பகுதி மக்களுக்கு கல்வி மற்றும் சழுதாயப் பணிகளைச் செய்துவருகிறது.
மறைவு
சோமலெ சென்னை அண்ணாசாலையில் உள்ள அஞ்சல் நிலையத்தில் 1986 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் நான்காம் நாளன்று (04.11.1986) தனது உலக வாழ்வை நிறைவு செய்தார்.
சோமலெ பற்றிய நூல்கள்
1. சோமலெ - மெய்யப்பன் ச. (1988)
2. இந்திய இலக்கியச் சிற்பிகள் ‘சோமலெ’ - நிர்மலா மோகன் (2001)
3. செந்தமிழ்த்தேனீ சோமலெ - முனைவர் இரா. மோகன் (2002)
4. அப்பா அப்பப்பா… - சோமலெ சோமசுந்தரம் (2020)
5. உலகம் சுற்றிய தமிழர் சோமலெ - முனைவர் தேவிநாச்சியப்பன் (2021)
சோமலெ நூல்கள் மீதான ஆய்வுகள்'
- 2021-இல் சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ப. தாமரைக்கண்ணன் அவர்களின் மேற்பார்வையில் ஆய்வாளர் திரு. மு. வினோத் சோமலெவின் 'செங்கற்பட்டு மாவட்டம்' என்னும் நூலை ஆய்வுசெய்து ஆய்வியல் நிறைஞர் (M. Phil.) பட்டத்தினைப் பெற்றுள்ளார்.
- மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி தமிழ் உயராய்வு நடுவத்தில் முனைவர் அ. கவிதாராணி அவர்களின் மேற்பார்வையின்கீழ் ஆய்வாளர் ஜா. திக்லா தங்கமயில் ‘சோமலெவின் எழுத்தாளுமை’ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.
நாட்டுடமை
சோமலெயின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதாக தமிழ்நாடு அரசு 2022 திசம்பரில் அறிவித்தது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ 10 இலட்சம் இவரது வாரீசுகளுக்கு வழங்குவதாக தெரிவித்தது.[11]
மேற்கோள்கள்
- ↑ இரா.மோகன், செந்தமிழ்த் தேனீ சோமலெ, ப.10.
- ↑ மேலது, ப.17.
- ↑ மேலது, ப.20.
- ↑ மேலது, ப.20.
- ↑ மேலது, ப.11.
- ↑ மேலது, ப.13.
- ↑ நிர்மலா மோகன், இந்திய இலக்கியச் சிற்பிகள், ப.9.
- ↑ மேலது, ப.14.
- ↑ இரா. மோகன், மு.நூல், ப.11.
- ↑ மேலது, ப.32.
- ↑ "8 தமிழறிஞர்களின் நுால்கள் நாட்டுடைமை" (in ta). 2022-12-20. https://www.dinamalar.com/news_detail.asp?id=3198031.