சாலை இளந்திரையன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சாலை இளந்திரையன் |
---|---|
பிறப்புபெயர் | வ. இரா. மகாலிங்கம் |
பிறந்ததிகதி | செப்டம்பர் 6, 1930 |
பிறந்தஇடம் | சாலை நயினார் பள்ளிவாசல், திருநெல்வேலி மாவட்டம் |
இறப்பு | அக்டோபர் 4, 1998 | (அகவை 68)
பணி | தமிழ்ப் பேராசிரியர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | கலை முதுவர், முனைவர் |
பணியகம் | தில்லி பல்கலைக் கழகம், தில்லி. |
அறியப்படுவது | தமிழாய்வு |
பெற்றோர் | வ. இராமையா, அன்னலட்சுமி |
துணைவர் | முனைவர் சாலினி இளந்திரையன் |
பிள்ளைகள் | இல்லை |
சாலை இளந்திரையன் (6 செப்டம்பர் 1930 – 4 அக்டோபர் 1998) தமிழ்ப் பேராசிரியர்; திறனாய்வாளர்; சொற்பொழிவாளர்; கவிஞர்; எழுத்தாளார்; இதழாளர்; அரசியற் செயற்பாட்டாளர்; பொதுவுடைமைத் தமிழ்த்தேசியச் சிந்தனையாளர்.
பிறப்பு
சாலை இளந்திரையனின் இயற்பெயர் வ. இரா. மகாலிங்கம் ஆகும். இவர் திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிற்கு அருகில் உள்ள சாலை நயினார் பள்ளிவாசல் என்னும் சிற்றூரில் 1930 செப்டம்பர் 6 அன்று வ. இராமையா – அன்னலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரை இவர்தம் பாட்டி சொக்கன் எனச் செல்லப் பெயரிட்டு அழைப்பார்.[1]
கல்வி
பள்ளிக் கல்வி
சாலை இளந்திரையன் என்னும் வ. இரா. மகாலிங்கம் 1936 முதல் 1941 வரை களக்காட்டில் உள்ள தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். பின்னர் 1941 முதல் 1944 வரை டோணாவூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் முதற் படிவம் (ஆறாம் வகுப்பு) முதல் மூன்றாம் படிவம் (எட்டாம் வகுப்பு) வரை பயின்றார். நான்காம் படிவம் (ஒன்பதாம் வகுப்பு) முதல் ஆறாம் படிவம் (பதினொன்றாம் வகுப்பு) வரை பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் உயர்நிலைப் பள்ளியில் 1944 முதல் 1947 வரை பயின்றார்.[1]
கல்லூரிக் கல்வி
1948 முதல் 1950 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் பயின்றார். அங்கு பேராசிரியர் மு. வரதராசன், அ. மு. பரமசிவானந்தம், அ. ச. ஞானசம்பந்தன் உள்ளிட்டவர்களிடம் பயின்றார்.[2]
1950 முதல் 1952 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று கலை இளவர் பட்டமும், அதே கல்லூரியில் 1952 முதல் 1954 வரை பயின்று கலை முதுவர் பட்டமும் பெற்றார். அப்பொழுது புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான சரவண ஆறுமுகன், தெ. பொ. மீனாட்சிசுந்தரம், கொண்டல் சு. மகாதேவன், சு. ந. சொக்கலிங்கம் ஆகியோரிடம் பயின்றார்.[1]
ஆய்வுக் கல்வி
1954 சூலையில் சென்னை மாநிலக் கல்லூரியில் முதன் முறையாக இலக்கிய முதுவர் பட்டத்திற்கான ஆய்வு வகுப்பு தொடங்கப்பட்டது. அவ்வகுப்பில் 1954 – 55ஆம் கல்வி ஆண்டில் முதல் மாணவராகச் சேர்ந்து, பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரை நெறியாளராகக் கொண்டு ஆய்வு செய்து அப்பட்டத்தைப் பெற்றார். பின்னர் 1971ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுப் பழமொழிகள் என்னும் தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில், முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு, மெய்யியல் முனைவர் பட்டம் பெற்றார்.[1]
புனைபெயர்கள்
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற காலத்தில் வ. இரா. மகாலிங்கம் அந்நாளில் புகழ்பெற்ற இதழ்களான பிரசண்ட விகடன், தமிழ்ப் பொழில் உள்ளிட்ட பல இதழ்களில் இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதத் தொடங்கினார். அப்பொழுது மாணவர்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த திராவிட இயக்கக் கருத்தியலுக்கு மகாலிங்கமும் ஆட்பட்டிருந்தார். எனவே அவ்வியக்க மரபின்படி தனக்கென ஒரு புனைபெயரை வைத்துக்கொள்ள விழைந்தார். ஆகவே சங்ககால மன்னனான இளந்திரையன் பெயரைத் தன்னுடைய புனைபெயராகக் கொண்டு இரா. இளந்திரையன் என்னும் பெயரில் படைப்புகளை ஆக்கினார். பின்னாளில் தன்னுடைய ஊர்பெயரின் முதற்பகுதி தனது புனைபெயருக்கு முன்னே இணைத்துச் சாலை இளந்திரையன் ஆனார்.[2]
திருமணம்
சாலை இளந்திரையன் சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றபொழுது அங்கு கலைஇளவர் (சிறப்பு) பட்டத்திற்காக விருதுநகரைச் சேர்ந்த கனகசவுந்தரி பயின்று வந்தார். சாலை இளந்திரையனும் கனகசவுந்தரியும் காதலித்தனர். கல்லூரிக் கல்வி முடிந்ததும் இருவரும் தத்தம் பெற்றோரின் ஒப்புதலோடு 1954 சூலை மாதம் விருதுநகரில் திருமணம் செய்துகொண்டார்.[3]
பணி
கல்லூரியில்
1954 சூலை முதல் 1957 ஏப்ரல் வரை சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறையில் ஆசிரியர் பணியிடம் ஒன்று தற்காலிகமாக ஏற்பட்டது. சாலை இளந்திரையன் அப்பணியில் அமர்த்தப்பட்டார்.
அரசு அலுவலகத்தில்
1957 ஆம் ஆண்டின் நடுவில் இந்திய ஒன்றிய அரசின் விளம்பர, தகவல் ஒலிபரப்புத் துறையில் மொழிபெயர்ப்பாளாரகப் பணியாற்றத் தொடங்கினார்.
பல்கலைக் கழகத்தில்
1959 ஆம் ஆண்டில் தில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கப்பட்டதும் சாலை இளந்திரையன் அத்துறையில் விரிவுரையளராகப் பணியேற்றார். அப்பல்கலைக் கழகத்திலேயே 1972 ஆம் ஆண்டில் பேருரையாளராகவும் (Reader) 1983 ஆம் ஆண்டில் பேராசிரியராகவும் (Professor) பதவி உயர்வுபெற்றார். 1985 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்று தமிழகம் திரும்பினார்.
ஓய்விற்குப் பின்னர்
பின்னர் சென்னையில் சாலை அச்சகத்தை உருவாக்கி நடத்தினார்.[1]
இதழ் பணிகள் [2]
தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சுடர் என்னும் இதழ் வெளியிடப்படுகிறது. இவ்விதழின் ஆசிரியராக 1960 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை சாலை இளந்திரையன் பணியாற்றினார்.
1975 அக்டோபர் முதல் 1987 ஏப்ரல் வரை அறிவியக்கம் என்னும் இதழும் 17 மே முதல் 1993 ஏப்ரல் வரை வீரநடய் அறிவியக்கம் என்னும் இதழும் அறிவியக்கப் பேரவையின் சார்பில் வெளியிடப்பட்டன. சாலை இளந்திரையன் அவ்விதழ்களின் சிறப்பாசிரியராகப் பணியாற்றினார்.
பயணங்கள்
1961 ஆம் ஆண்டில் சாலையர் இருவரும் சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கும்; 1962 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் இலக்கியப் பயணம் மேற்கொண்டனர். 1974 ஆம் ஆண்டில் நான்காவது உலகத் தமிழ்மாநாட்டின் பொழுது இலங்கைக்குச் சென்று வந்தனர். இவை தவிர, 1966 முதல் 1984 வரை ஆண்டுதோறும் கோடைவிடுமுறைக் காலத்தில் தம் தமிழகத் தோழர்களின் உதவியோடு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சமூக – இலக்கிய – அரசியற் பயணம் மேற்கொண்டனர்.[1]
அமைப்பாக்கப் பணிகள்[1]
உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்
1964 ஆம் ஆண்டில் தில்லியில் உள்ள கீழ்க்கலை ஆராய்ச்சி மையம் தனது 26 ஆவது மாநாட்டைக் கூட்டியது. அதிற் கலந்துகொள்வதற்காகத் தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலரும் உலகின் பல பகுதிகளிலிருந்து அம்மாநாட்டிற்கு வருகை தந்தனர். அவர்களோடு சாலை இளந்திரையனும் இணைந்து உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவினர். இக்கழகமே உலகத் தமிழ் மாநாடுகளை நடத்துகிறது.
இந்தியப் பல்கலைக் கழக தமிழாசிரியர் மன்றம்
1968 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் இந்தியத் தமிழ்ப் பேராசிரியர்கள் பலருக்கு அவர்தம் ஆய்வுரைகளை நிகழ்த்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே ஆண்டுதோறும் இந்தியத் தமிழ்ப் பேராசிரியர்கள் தம்முடைய ஆய்வுகளை வெளியிடுவதற்காக இந்தியப் பல்கலைக் கழக தமிழாசிரியர் மன்றம் என்னும் அமைப்பை உருவாக்கச் சாலை இளந்திரையன் உந்துசக்தியாக இருந்தார்.
அறிவியக்கப் பேரவை
1971 ஆம் ஆண்டில் குத்தூசி குருசாமியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த நாத்திக நந்தனார், மணிமார்பன் உள்ளிட்டோரின் உதவியோடு அறிவியக்கப் பேரவை என்னும் அமைப்பைச் சாலை இளந்திரையன் உருவாக்கினார். அவ்வியக்கத்தின் வழியாகவே 1986ஆம் ஆண்டு வரை தம்முடைய சமூக – அரசியற் செயற்பாடுகளை வெளிப்படுத்தினார். அதன் ஒரு பகுதியாகப் பின்வரும் மாநாடுகளை நடத்தினார்:
நாள் | மாநாடு | இடம் |
20. 5. 1979 | எழுத்துச் சீர்மை மாநாடு | |
10. 5. 1980 | அறிவியக்க மாநாடு | சென்னை |
மே 1982 | விழிப்புணர்ச்சி மாநாடு | குடந்தை |
மே 1984 | எழுச்சி நடை மாநாடு | திருப்பூர் |
19. 5. 1985 | அரசுத் திட்டங்களால் நலிந்தோர் வாழ்வு மலர்ந்ததா? கருத்துப் பேரரங்கு மாநாடு | பெருங்களத்தூர் |
மே 1986 | ஓராசிரியர் பள்ளிகள் சீரமைப்பு மாநாடு | குடந்தை |
17. 5. 1987 | இந்தி, ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு மாநாடு | ஈரோடு |
22. 5. 1988 | தமிழ்த் தேசிய இனமக்களின் வாழ்வுரிமை மாநாடு | சென்னை |
மே 1989 | கூடங்குளம் அணுமின் திட்டம், மழலையர் பள்ளிகள் எதிர்ப்பு இரட்டை மாநாடு | சென்னை |
22. 8. 1992 | வளர்தமிழ் மாநாடு | கோயமுத்தூர் |
29. 12. 1993 | மொழிச் சிறுபான்மையினர் உரிமைகள் சீரமைப்பு மாநாடு | சென்னை |
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்
1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காம் உலகத் தமிழ் மாநாட்டின் பொழுது அங்கு கூடிய தமிழறிஞர்கள் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கினர். அப்பணியில் சாலை இளந்திரையன் முக்கியப் பணியாற்றினார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்
1980 ஆம் ஆண்டில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவத் தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காகப் பேராசிரியர் முனைவர் வ. சுப. மாணிக்கம் தலைமையில் சாலை இளந்திரையன் உள்ளிட்ட எண்மரைக்கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வரைவுத் திட்டம் ஒன்றை சாலை இளந்திரையன் சமர்பித்தார். அதனைச் சிற்சில மாற்றங்களுடன் வல்லுநர் குழு ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையிலேயே தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.
சமூக, அரசியற் செயற்பாட்டுப் பணிகள்
விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த 1944-47 ஆம் ஆண்டுகளில் பள்ளி மாணவராக இருந்த சாலை இளந்திரையன் இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவாளராகக் கதராடை அணிந்து இயங்கினார்.[1]
1948 ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றபொழுது திராவிட இயக்கக் கருத்தியலால் ஈர்க்கப்பட்டு இயங்கினார். அதன் பின்னர் தன்னுடைய இறுதிநாள் வரை திராவிடத் தந்தை ஈ. வெ. ராமசாமி பெரியாரின் அரசியற் கொள்கைகளையும் பாவேந்தர் பாரதிதாசனின் இலக்கியக் கொள்கையையும் சாலை இளந்திரையன் பின்பற்றி வந்தார். பொதுவுடைமைத் தமிழ்தேசியத்தை தன்னுடைய சமூக அரசியற் கொள்கையாகக் கொண்டு அறிவியக்கப் பேரவையை உருவாக்கித் தனது செயற்பாடுகளை மேற்கொண்டார். தன்மான வாழ்வியல், இந்திய தேசிய மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஈழவிடுதலை ஆதரவு, தமிழர் தன்னுரிமை ஏற்பு, நக்சலிய ஆதரவு ஆகிய கொள்கைகளை வெளிப்படுத்தும் உரைகளை, படைப்புகளை, அறிக்கைகளை, கடிதங்களைச் சாலை இளந்திரையன் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.[2]
1991 ஆம் ஆண்டில் பழ. நெடுமாறன் தடையை மீறித் தமிழர் தன்னுரிமை பிரகடன மாநாட்டை நடத்தத் திட்டமிட்டார். அம்மாநாட்டில் கலந்துகொள்ள தஞ்சாவூருக்கு வந்தால் கைதாவோமென அறிந்தே அங்கு வந்து சாலையர் இருவரும் கைதாயினர். தமிழ், தமிழன், தமிழ்நாடு என்னும் நூலை எழுதியதற்காக இவர்மீது குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டது.[2]
படைப்புகள்
ஆக்கங்கள்
மாணவப் பருவத்திலேயே கதை, கவிதை, கட்டுரையென எழுத்துப்பணியில் ஈடுபட்ட சாலை இளந்திரையன் பின்வரும் நூல்களை எழுதியிருக்கிறார்.[2]
வ.எண் | ஆண்டு | நூலட்டை | நூல் | பொருள் | பதிப்பகம் | குறிப்பு | |
---|---|---|---|---|---|---|---|
01 | 1962 | சாலை இளந்திரையன் கவிதைகள் | கவிதைகள் | யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் சென்னை. |
|||
02 | 1963 | உலகம் ஒரு குடும்பம் | கட்டுரைகள் | ||||
03 | 1963 | சிந்தனைக்கு | கட்டுரைகள் | ||||
04 | 1964 | அன்னை நீஆட வேண்டும் | கவிதைகள் | ||||
05 | 1964 | இரண்டு குரல்கள் | கட்டுரைகள் | பேராசிரியர் முனைவர் சாலினி இளந்திரையனுடன் இணைந்து எழுதியது | |||
06 | 1965 | சிலம்பின் சிறுநகை | கவிதைகள் | ||||
07 | 1965 | புரட்சிக் கவிஞரின் கவிதை வளம் | திறனாய்வு | பாரதிதாசன் கவிதைகளைப் பற்றிய திறனாய்வு | |||
08 | 1965 | தமிழ்க் கனிகள் | கட்டுரைகள் | பேராசிரியர் முனைவர் சாலினி இளந்திரையனுடன் இணைந்து எழுதியது | |||
09 | 1966 | காலநதி தீரத்திலே | கவிதைகள் | ||||
10 | 1966 | தமிழில் சிறுகதை | திறனாய்வு | ||||
11 | 1966 | புதிய தமிழ்க் கவிதை | திறனாய்வு | ||||
12 | 1966 | சிறுகதைச் செல்வம் | திறனாய்வு | தமிழ்ப் புத்தகாலயம் சென்னை |
|||
13 | 1966 | தமிழனே தலைமகன் | கட்டுரைகள் | பேராசிரியர் முனைவர் சாலினி இளந்திரையனுடன் இணைந்து எழுதியது | |||
14 | 1968 | பூத்தது மானுடம் | கவிதைகள் | இரண்டாம் பதிப்பு 1999இல் பேராசிரியர் சாலய் இளந்திரயன் அறக்கட்டளயால் வெளியிடப்பட்டுள்ளது. | |||
15 | 1968 | கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே | கவிதைகள் | ||||
16 | 1968 | Some Aspects of Modern Tamil Literature | சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் பொழுது வெளியிடப்பட்ட சிற்றேடு | ||||
17 | 1968 | நேயப்பாட்டு | திறனாய்வு | ||||
18 | 1968 | தமிழுக்காக | கட்டுரைகள் | ||||
19 | 1968 | உலகத் தமிழர் – ஓர் நடப்பு வருணனை | |||||
20 | 1968 | எங்கள் காவியம் | |||||
21 | 1968 | தமிழ் தந்த பெண்கள் | பேராசிரியர் முனைவர் சாலினி இளந்திரையனுடன் இணைந்து எழுதியது | ||||
22 | 1969 | புதுத்தமிழ் முன்னோடிகள் | திறனாய்வு | தமிழ்ப்புத்தகாலயம் சென்னை. |
|||
23 | 1970 | வீறுகள் ஆயிரம் | கவிதைகள் | ||||
24 | 1970 | சமுதாய நோக்கு | திறனாய்வு | தமிழ்ப் புத்தகாலயம் சென்னை. |
தமிழிலக்கியத்தில் சமுதாய நோக்கோடு படைக்கப்பட்ட கவிதைகளைப் பற்றிய 13 கட்டுரைகளின் தொகுப்பு. | ||
25 | 1971 | கூட்டின் அமைதி குலைகிறது | கட்டுரைகள் | ||||
26 | 1971 | வெற்றி மலர்கள் | கட்டுரைகள் | ||||
27 | 1971 | எழுச்சி வேண்டும் | கட்டுரைகள் | ||||
28 | 1972 | புதுத்தமிழ் முதல்வர்கள் | திறனாய்வு | தமிழ்ப் புத்தகாலயம் சென்னை. |
கட்டுரையாளர் அட்டாவதானம் வீராசாமியார், நாடகாசிரியர் இராமசாமி ராசு, கலைக்களஞ்சிய ஆக்குநர் சிங்காரவேலர், திறனாய்வாளர் செல்வ கேசவர் ஆகிய நால்வரின் பணிகளைப் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. | ||
29 | 1972 | நஞ்சருக்குப் பஞ்சணையோ? | கவிதைகள் | ||||
30 | 1972 | நம்மைப் பற்றிய சிந்தனைகள் | |||||
31 | 1973 | காலத்தின் கேள்விகள் | |||||
32 | 1973 | திருந்திய திருமணம் | |||||
33 | 1974 | தமிழ் மாநாடு | |||||
34 | 1975 | எங்கள் பயணங்கள்[4] | பயணக் கட்டுரைகள் | தமிழ்ப் புத்தகாலயம் சென்னை. |
|||
35 | 1975 | உரைவீச்சு[4] | உரைவீச்சு | தமிழ்ப் புத்தகாலயம் சென்னை. |
1979ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசு பெற்றது | ||
36 | 1976 | நடைகொண்ட படைவேழம் | கவிதைகள் | ||||
37 | 1976 | ஏன் இந்த மெத்தனம்? | |||||
38 | 1976 | தமிழ்ப் பண்பாட்டுக்கு ஓர் இயக்கம் | |||||
39 | 1977 | மக்கள் நாயக மரபுகள் | அரசியற் கட்டுரைகள் | தமிழ்ப் புத்தகாலயம் சென்னை. |
மக்கள்நாயகம் தொடர்பான 22 கட்டுரைகளின் தொகுப்பு. | ||
40 | 1977 | உள்ளது உள்ளபடி | உரைவீச்சு | ||||
41 | 1978 | கேள்விகள் ஆயிரம் | கட்டுரைகள் | ||||
42 | 1978 | புரட்சி முழக்கம் | திறனாய்வு | 1978ஆம் ஆண்டில் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது. | |||
43 | 1979 | களத்திலே கடிதங்கள் | கடிதங்கள் | எழுத்துச் சீர்திருத்தத்தை ஆதரித்து சாலினியும் சாலை இளந்திரையனும் பலருக்கும் எழுதிய கடிதங்களின் தொகுப்பு | |||
44 | 1980 | தமிழகத்தில் அறிவு இயக்கம் | |||||
45 | 1981 | காவல் துப்பாக்கி | உரைவீச்சு | சாலய் வெளியீடு சென்னய்-86 |
60 உரைவீச்சுகளின் தொகுப்பு | ||
46 | தமிழ்நாட்டுப் பழமொழிகள் | சாலை இளந்திரையனின் முனைவர் பட்ட ஆய்வேடு | |||||
47 | 1981 | ஐந்தாவது தமிழ் மாநாடு | |||||
48 | 1981 | ஒரு புதிய தமிழ் எழுச்சி | |||||
49 | 1981 | வெடிப்புகள் உடைப்புகள் | |||||
50 | 1982 | பொறுத்தது போதாதா? | |||||
51 | 1982 | ஏழாயிரம் எரிமலைகள் | |||||
52 | 1984 | நாளுக்கு நல்லபடி | |||||
53 | 1986 | தமிழுக்காக | |||||
54 | 1986 | ஓராசிரியர் பள்ளிகள் | |||||
55 | 1986 | ஒரு மேல்சாதி நயவஞ்சகம் | |||||
56 | 1986 | புதிய கல்விக்கொள்கை | |||||
57 | 1987 | நெருப்பிலே மலர்ந்த தாய்மொழிப் பூக்கள் | |||||
58 | 1987 | கணீரென்று வாழுங்கள் | |||||
59 | 1988 | உரிமைகொண்ட தேசிய இனங்கள் | |||||
60 | 1989 | இந்தியம் ஈழம் நச்சலியம் | |||||
61 | 1989 | இப்படித்தான் வாழ வேண்டும் | |||||
62 | 1989 | கூடங்குளம் கொதிக்கிறது | |||||
63 | 1990 | அறுபதில் சில வீச்சுகள் | உரைவீச்சு | சாலய் வெளியீடு சென்னய் 86. |
சாலயார் தன்னுடைய 60ஆம் வயதில் எழுதிய 70 உரைவீச்சுகளின் தொகுப்பு. | ||
64 | 1990 | நினய்வூட்டு | |||||
65 | 1990 | மண்டல் குழு அறிக்கை ஒரு சமூகநீதி ஆவணம் | |||||
66 | 1990 | நெருப்பை வளர்க்கிறார்கள் | |||||
67 | 1991 | தமிழின் ஒரே கவிஞன் | திறனாய்வு | சாலை வெளியீடு சென்னை. |
பாரதிதாசனே தமிழின் ஒரே கவிஞன் என நிறுவ முனையும் நூல் | ||
68 | 1991 | சொக்கன் கதை: ஒரு வணங்காமுடியின் கதை | தன்வரலாறு | சாலய் வெளியீடு சென்னை. |
சாலை இளந்திரையனின் தன்வரலாற்று நூல். | ||
69 | 1992 | தமிழ் தமிழன் தமிழ்நாடு | அரசியற் கட்டுரைகள் | இந்நூலை எழுதியதற்காக சாலை இளந்திரையன் மீது குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டது. | |||
70 | 1992 | ஈழத்துப் புலிகளுடன் 28 நாட்கள் | உரைவீச்சு | ||||
71 | 1997 | நாட்டிலும் ஏட்டிலும் தமிழர்கள் | |||||
72 | 1997 | தாய் எழில் தமிழ் | கவிதைகள் | ||||
73 | 2000 | சுடர் ஏந்திய தமிழ் மலர்கள் | வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள் | பேராசிரியர் சாலய் இளந்திரையன் அறக்கட்டளை சென்னை. |
வ.உ.சி., கவிமணி, பாரதிதாசன், கல்கி, திருவள்ளுவர், அறிஞர் அண்ணா ஆகியோரைப் பற்றி தில்லி தமிழ்ச் சங்கத்தின் சுடர் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு |
இந்நூல்களுள் தொகுக்கப்பட்டவை தவிர இன்னும் தொகுக்கப்பட வேண்டிய கட்டுரைகள், கவிதைகள், கதைகள் பல இருக்கின்றன.
தொகுத்துப் பதிப்பித்தவை
சாலை இளந்திரையன் தானே படைத்த நூல்களைத் தவிர, பின்வரும் ஐந்து நூல்களைத் தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார்:
வ.எண் | ஆண்டு | நூலட்டை | நூல் | பொருள் | பதிப்பகம் | குறிப்பு |
---|---|---|---|---|---|---|
01 | 1969 | தில்லி தமிழ்ச் சங்க அண்ணா மலர் | தில்லித் தமிழ்ச் சங்கம் | |||
02 | 1972 | தில்லித் தமிழ்ச்சங்க வெள்ளிவிழா மலர் | தில்லி தமிழ்ச் சங்கம் | |||
03 | 1974 | மஹாகவியின் இரண்டு காவியங்கள் | கவிதைகள் | பாரிநிலையம், சென்னை | ஈழத்துக் கவிஞரான உருத்திரமூர்த்தி என்னும் மஹாகவி (புனைபெயர்) இயற்றிய கந்தப்ப சபதம் என்ற கட்டுக்கதைச் சதகம், சடங்கு ஆகிய இரண்டு காவியங்களின் தொகுப்பு. | |
04 | 1975 | சுதந்திரத்துக்குப்பின் தமிழ்க்கவிதை | ||||
05 | 1982 | எண்ணத்தின் வண்ணங்கள் | கட்டுரைகள் | பாரதியாரின் முன்னோடிகளைப் பற்றி தில்லி வாழ் தமிழாசிரியர்கள் எழுதிய கட்டுரைகள் |
மொழிபெயர்ப்பு
சாலை இளந்திரையன் பின்வரும் நூலை மொழிபெயர்த்திருக்கிறார்:
வ.எண் | ஆண்டு | நூலட்டை | நூல் | பொருள் | பதிப்பகம் | குறிப்பு |
---|---|---|---|---|---|---|
01 | 1974 | சுதந்திரப் போராட்டமும் மத்திய சட்டசபையும் |
சாலை இளந்திரையனைப் பற்றிய நூல்கள்
சாலை இளந்திரையனின் மறைவிற்குப் பின்னர் பின்வரும் நூல்கள் அவர்தம் துணைவியார் சாலினி இளந்திரையனால் தொகுக்கப்பட்டு வெளிவந்தன.
வ.எண் | ஆண்டு | நூலட்டை | நூல் | பொருள் | பதிப்பகம் | குறிப்பு |
---|---|---|---|---|---|---|
01 | 1998 | சாலையார் பிளிறல்கள் | சாலையார் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை | பேராசிரியர் சாலய் இளந்திரயன் அறக்கட்டளை, சென்னை. | ||
02 | 1999 | பேராசிரியர் சாலய் இளந்திரயன் நினைவுமலர் | வாழ்க்கை வரலாறு | பேராசிரியர் சாலய் இளந்திரயன் அறக்கட்டளை, சென்னை. | பேராசிரியர் சாலை இளந்திரையன் பற்றி பலரும் படைத்த ஆக்கங்கள் | |
03 | 1999 | சாலயாரின் கருத்துக் கோவை | சாலையார் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை | பேராசிரியர் சாலய் இளந்திரயன் அறக்கட்டளை, சென்னை. | ||
04 | 2005 சூன் | நடய்கொண்ட படய் வேழம் சாலய் - சாலினி இளந்திரயன் | வாழ்க்கை வரலாறு (எழுதியவர்: சோ. சிவப்பிரகாசம்) | கலைநிலா பதிப்பகம், திருச்சிராப்பள்ளி. | பேராசிரியர் சாலை - சாலினி இளந்திரையன் ஆகிய இருவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு |
விருதுகள்
1991 ஆம் ஆண்டில் பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு விழாவில் இவருக்குப் பாரதிதாசன் விருது வழங்கப்பட்டது.
மறைவு
சாலை இளந்திரையன் நெஞ்சக நோயால் நீண்ட நாள்களாக அவதிப்பட்டு வந்தார். அவர் 4. 10. 1998 ஆம் நாள் மரணமடைந்தார்.[2] அவரது விருப்பப்படியே அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்விற்காக அளிக்கப்பட்டது.[5]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 சாலை இளந்திரையன், சொக்கன் கதை, 1991, சென்னை.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 சிவப்பிரகாசம் சோ, நடய்கொண்ட படய் வேழம் சாலை – சாலினி இளந்திரையன், 2005, கலைநிலா பதிப்பகம் திருச்சி.
- ↑ சாலினி இளந்திரையன், ஆசிரியப் பணியில் நான், 1999 செப், சென்னை
- ↑ 4.0 4.1 தில்லைநாயகம், வே (பதி); நூல்கள் அறிமுகவிழா; தமிழ்நாட்டரசு பொதுநூலகத்துறை, 1976; பக். 18
- ↑ முத்துராமலிங்கன், உயிர் தமிழுக்கு, உடல்…?, குமுதம், 29.10.98, பக்.45