கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை Wesley High School, Kalmunai | |
---|---|
அமைவிடம் | |
கல்முனை, இலங்கை | |
தகவல் | |
வகை | இரு பாலர் பயிலும் பள்ளி |
குறிக்கோள் | Utmost for the Highest அதி உயர்ச்சிக்கான முயற்சி |
தொடக்கம் | 1883 |
பள்ளி மாவட்டம் | அம்பாறை மாவட்டம் |
கல்வி ஆணையம் | இலங்கை கல்வி அமைச்சு |
அதிபர் | வி. பிரபாகரன் |
தரங்கள் | 1 முதல் 13 வரை |
மாணவர்கள் | 1,900 |
இணையம் | kalmunaiwesley.com/ |
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகரில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும்.
வரலாறு
1882 ஆம் ஆண்டில் கல்முனையில் மெதடிஸ்த ஆலயம் அமைக்கப்பட்டதை அடுத்த[1] கல்முனை மெதடிஸ்த மதப்பரப்புனர்களில் ஒருவரான அருட்திரு ஜோர்ஜ் ஜே. ட்ரிம்மரின் காலத்தில் 1883 நவம்பர் 30 இல் பெண்கள் விடுதியுடன் கூடிய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. கல்முனையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பாடசாலை இதுவாகும். 18 மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் செல்வி ஜேன் வீரக்குட்டி ஆசிரியராகவும் விடுதிக் காப்பாளராகவும் இருந்துள்ளார். இங்கு தமிழ்மொழி மூலமான கல்வியே பிரதானமாக கற்பிக்கப்பட்டாலும் ஆங்கில மொழிக் கற்பித்தலுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. இவ்வேளையில் 1930 இல் இப்பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 80 ஆகவும் விடுதியில் தங்கியிருந்து கற்போர் தொகை 100 ஆகவும், ஆசிரியர்களின் தொகை 10 ஆகவும் காணப்பட்டன.[2]
1901 ஆம் ஆண்டு அருட்திரு கேப்ரியல் லீஸ் என்பவர் கல்முனை மெதடிஸ்த ஆண்கள் பாடசாலையை ஆரம்பித்தார். 1906 ஆம் ஆண்டில் லீஸ் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய போது காலமானதை அடுத்து ஆண்கள் பாடசாலைக்கு அவரது நினைவாக லீஸ் உயர்தரப் பாடசாலை (Leese High School) எனப் பெயர் சூட்டப்பட்டது. இப் பாடசாலையின் அதிபராக இருந்த அருட்திரு. எம். ஜோர்ஜ் நல்லதம்பியின் காலத்தில்[1] 1953 மே மாதத்தில் பெண்கள் விடுதிப் பாடசாலையும் ஆண்கள் பாடசாலையும் ஒன்றிணைக்கப்பட்டு மெதடிஸ்த திருச்சபையின் நிறுவனர் ஜோன் உவெஸ்லியின் நினைவாக உவெஸ்லி உயர்தரப் பாடசாலையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2]
உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் முதலாவது அதிபராக லீஸ் பாடசாலையின் ஆங்கில ஆசிரியர் ஜோர்ஜ் நல்லதம்பி 1954 வரை பணியாற்றினார். அவருக்குப் பின்னர் சாம் ஜே. வில்சன், திருமதி ஆர். சின்னையா, யோகம் வேலுப்பிள்ளை, கே. சுப்பிரமணியம், எஸ். மகாலிங்கம், பி. வெங்கடாசலம் (1988), பொன் முருகையா ஆகியோர் அதிபர்களாகப் பணியாற்றினர். தற்போது வி. பிரபாகரன் அதிபராகப் பணியாற்றுகிறார்.[2]
இப்பாடசாலையில் 2009 ஆம் ஆண்டிலிருந்து மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான சிறப்புக் கற்கைப் பிரிவு ஒன்று இயங்கி வருகின்றது.[1]
இங்கு படித்த பெரியவர்கள்
- சுவாமி விபுலானந்தர்
- ஏ. பெரியதம்பிப்பிள்ளை, புலவர்மணி
- எம். ஏ. நுஃமான், பேராசிரியர்
- எம். எம். முஸ்தபா, அரசியல்வாதி
- ஏ. ஆர். மன்சூர், அரசியல்வாதி
- எம். எச். எம். அஷ்ரப், அரசியல்வாதி