கரோலின் அந்தோனிப்பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கரோலின் அந்தோனிப்பிள்ளை (Caroline Anthonypillai, அக்டோபர் 8, 1908 – சூலை 7, 2009) இலங்கையின் இடதுசாரித் தலைவர் ஆவார். இவருடைய கணவர், இலங்கைத் தொழிற்சங்க அமைப்பாளரும் இந்திய அரசியல்வாதியுமான எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை ஆவார். கரோலின், இடதுசாரி இயக்கத்தின் முன்னணி ஒளி என சில நேரங்களில் அழைக்கப்படுகிறார்.[1]

இளமை

கரோலினின் இயற்பெயர் டொனா கரோலின் ரூபசிங்க குணவர்தனா என்பதாகும். இவர், 1908 அக்டோபர் 8 இல் இலங்கையின் அவிசாவளை எனுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தை டொன் யாக்கோலிசு ரூபசிங்க குணவர்தனா கிராமத் தலைவராகவும், பிரித்தானிய முகவராகவும் இருந்தார். கரோலினின் உடன் பிறந்தவர்கள் எட்டுப் பேர். இவருடைய சகோதரர் புகழ்பெற்ற இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான பிலிப் குணவர்தனா ஆவார். ஓர் இனவாதப் பிரச்சனையில் அவரது தந்தை பிரித்தானியர்களால் கைது செய்யப்பட்டதை அடுத்து, கரோலின் ஒரு பௌத்த பெண்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு இவர் தேசியவாதக் கருத்துகளை அறியும் வாய்ப்புக் கிடைத்தது. படிப்பு முடிந்ததும் தனது கிராமத்திற்குத் திரும்பி புத்தப் பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டார்.[2]

அக்காலத்தில் தொழிலாளர் இயக்கத்தில் சேர விரும்பிய பல தமிழர்களில் ஒருவரான அந்தோனிப்பிள்ளை சிங்களம் கற்க விரும்பினார். அதற்காகக் கரோலினை நாடினார். அந்தோனிப்பிள்ளை தமிழ் கிறித்தவர்; கரோலின் சிங்கள பௌத்தர். அந்தோனிப்பிள்ளையை விட கரோலின் ஆறுவயது மூத்தவர்; ஆயினும் இருவரும் 1939 இல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

போருக்கு முந்தைய செயல்பாடுகள்

கரோலின் 1931 இல், அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அவரது சகோதரருக்கு தேர்தலில் போட்டியிட பெரும் உதவியாகவும் இருந்தார். இது சமூக நீதிக்கான அவரது உறுதிப்பாட்டை ஆழப்படுத்தியது. குடியேற்ர அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் இலங்கைப் போர் வீரர்களுக்கு சமமான உரிமைகளைப் பெறுவதற்காக அவர் பல எதிர்ப்புப் பேரணிகளில் பங்கு கொண்டார். 1935 ஆம் ஆண்டில், இவருடைய சகோதரர்கள் ஹாரி, பிலிப், இராபர்ட் ஆகியோருடன் இணைந்து,[3][4] இலங்கையின் முதல் அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியை நிறுவ உதவியாக இருந்தார்.[5] அந்தோனிப்பிள்ளையைத் திருமணம் செய்த பின்பு இருவரும் இலங்கையின் மலையகத்திற்குச் சென்று அங்குள்ள மலையகத் தமிழர்களின் தொழிலாளர் குழுக்களை ஒழுங்கமைத்தனர்.[2]

போர்க்கால செயற்பாடுகள்

ஒரு தீவிர திரொட்சுக்கியவாதியாக இருந்த கரோலினும், அந்தோனிப்பிள்ளையும் ஏகாதிபத்தியத்தின் ஒரு உதாரணமாகக் போரை எதிர்த்தனர். பிரித்தானிய அரசு லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினர்களைத் தேடி கைது செய்தனர். 1942-இல், கரோலின் த்னாது கணவரை தமிழ்நாடு, மதுரையில் இணைந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். மும்பையில் இவரது சகோதரர் பிலிப் குணவர்தனா கைது செய்யப்பட்டதை அடுத்து, கரோலின் தனது இரு குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி இலங்கை திரும்பினார்.[6]

போருக்குப் பிந்தைய செயற்பாடுகள்

போருக்குப் பின்னர், அந்தோனிப்பிள்ளையும் கரோலினும் மதுரைக்குத் திரும்பிச் சென்று, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மதுரையில், நெசவுத் தொழிலாளர்களின் நலனுக்காகப் பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு, அவர்களுக்காகத் தொழிற்சங்கக் கோரிக்கைகளைப் பெற்றுக் கொடுத்தார்.[2]

மேற்கோள்கள்