ஏ. எஸ். பிரான்சிஸ்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஏ. எஸ். பிரான்சிஸ் |
---|---|
பிறந்ததிகதி | செப்டம்பர் 29, 1950 |
பிறந்தஇடம் | ஆர்க்கிராப்ட் எஸ்டேட் ஆயர்தாவார் பேராக் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பெற்றோர் | மரியம்மாள் ஆரோக்கியசாமி |
ஏ. எஸ். பிரான்சிஸ் (பிறப்பு: செப்டம்பர் 29, 1950), மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். மலேசியாவில் பேராக் மாநிலத்தில், ஆயர்தாவார் என்ற சிறு நகரிலிரிந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆர்க்கிராப்ட் எஸ்டேட் என்ற ஒரு இரப்பர் தோட்டத்தில், மரியம்மாள்-ஆரோக்கியசாமி தம்பதியினரின் புதல்வனாக பிறந்த இவர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். பின்பு சித்தியவான் காந்தி கலாசாலையில் ஆங்கிலம் கற்று, அடுத்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு, குடும்பச் சூழ்நிலையால் ஆங்கிலப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பிறந்த தோட்டத்திலேயே, "சொக்கரா' வேலையில் சேர்ந்த்தார்.
சமயத் திருப்பணி
1970-ஆம் ஆண்டு, கத்தோலிக்க கிறிஸ்துவ குருமார்களின் ஆதரவில், தமிழ்நாடு, தெற்கு ஆற்காடு மாவட்ட நகரான திண்டிவனத்தில், சமயப் படிப்புக்குச் சென்று, அங்கு ஈராண்டுகள் படிப்பு முடித்து, பின் பூந்தமல்லி வேதியர் பயிற்சிப் பள்ளியில் ஓராண்டும் படித்து, சமயக் கல்வியில் பட்டயப் படிப்பில் தேர்வு பெற்றார். 1973-ஆம் ஆண்டு, ம்லேசியா திரும்பி, சமயத் திருப்பணி ஆற்றத்தொடங்கினார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
சிறிய வயது முதல் எழுத வேண்டும் என்ற எண்ணம் இவரின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. 1975-ஆம் ஆண்டு, ஈப்போவிலிருந்து வெளிவந்த "ஒளி விளக்கு" என்ற கிறிஸ்த்துவப் பத்திரிகையில் கவிதை-கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். இவரது "நவீன சாக்ரடிஸ்" என்ற முதல் புதுக்கவிதையும், "கையெழுத்து" என்ற முதல் சிறுகதையும், "வானம்பாடி" வார இதழில் 1980-ஆம் ஆண்டு அச்சேறி, மலேசிய வாசகர்களுக்கு இவரை அறிமுகப்படுத்தியது. அன்றிலிருந்து மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் புதுக்கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்ற இவர் வானொலிக்கு இசை சொல்லும் கதைகளும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. இதுவரை, ஆயிரத்துக்கும் அதிகமான புதுக்கவிதைகள், நூற்றுக்கும் குறையாத கட்டுரைகள், நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், வானொலி நாடகங்கள், தொடர் கதைகள் என இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. மலேசியாவில் அதிக புதுக்கவிதை படைப்பாளர், புதுக்கவிதை நூல்களை அதிகம் வெளியிட்டவர் என்ற பெருமைக்குரிய ஏ. எஸ். பிரான்சிஸ் அவர்களின் எழுத்துப்பணி இன்றும் தொடர்கிறது.
இவரது நூல்கள்
- தேடி எடுத்த தெய்வம்
- இயேசு தந்த வரம்
- காணிக்கை
- உணவும் உறவும்
- நட்புறவு
- வேள்விப் பயணம்
- ஓரிரவு மலர்கள்
- இளமையும் இறைவனும்
- கல்வெட்டுகள் காத்துக்கிடக்கின்றன
- வெளிச்சம் விலை போகிறது
- ஊசிப்போன உறவுகள்
- சிகரங்களும் பள்ளத்தாக்குகளும்
- புதுவானம் புலர்ந்தது
- உன்னில் உலகம்
- விழி
- கரை கடந்த கனவு
- பிதா தந்த பூமி
- என்ன தவம் செய்தேன்
- சாசனம்
- மக்கள் சக்தி
பட்டப்படிப்பு ஆய்வுகளில்
இவரது நூல்கள் பட்டப்படிப்பு ஆய்வுகளுக்காக பல மாணவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளன.