இணுவில் அண்ணமார் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அண்ணமார் கோயில் வேணுகோபால சுவாமி கோயிலாகப் பெயர் மாற்றம் பெற்ற பின்னர், 2010ல் எடுக்கப்பட்ட படம். அண்ணமார் ஏறி விண்ணுலகம் சென்றதாக மக்கள் நம்பும் பனையைச் சுற்றி வளர்ந்த ஆல மரத்தையும், அண்ணமார் சிலையையும் இடப்புறத்திலும், வேலாயுதசுவாமி கோயிலைப் பின்னணியிலும் காண்க.

இணுவில் அண்ணமார் கோயில் இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள இணுவில் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கோயில். இணுவிலில் இருந்து உரும்பிராய் நோக்கிச் செல்லும் கருணாகரப் பிள்ளையார் கோயில் வீதியில் காங்கேசன்துறை வீதியில் இருந்து ஏறத்தாழ அரைக் கிலோமீட்டர் தொலைவில் இக் கோயில் உள்ளது. யாழ்ப்பாணத்தின் பிற இடங்கள் சிலவற்றிலும் காணப்படும் அண்ணமார் கோயில்களைப் போலவே இதுவும் தாழ்த்தப்பட்டவர்களான "பள்ளர்" வகுப்பினருக்கு உரிய கோவிலாக உள்ளது[1]. பனை மரம் ஒன்றைச் சுற்றி வளர்ந்த ஆலமரம் ஒன்றுக்குக் கீழே, கட்டிட அமைப்புக்கள் எதுவும் இன்றி, மரபு வழிச் சின்னங்களுடன் நாட்டார் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி இயங்கிவந்த இக் கோயில் அண்மைக் காலத்தில் கட்டிடங்களுடன் கூடிய கோயிலாக மாறியுள்ளது. அத்துடன், சமசுக்கிருதமயமாக்கத்தின் விளைவாக இது வேணுகோபால சுவாமி கோயில் எனப் பெயர் மாற்றம் அடைந்துள்ளதுடன், விக்கிரகங்களையும் வைத்து வணங்குகின்றனர்.

தோற்றம்

இக் கோயிலின் தோற்றம் குறித்த கதை ஒன்று உள்ளூரில் நிலவுகின்றது. எனினும், இக் கதை பல வேறுபாடுகளுடன் சொல்லப்படுகின்றது. உயர்குடி எனக் கருதப்படும் வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லது இருவர் புளிய மரம் ஒன்றில் ஏறி விண்ணுலகம் சென்றதும், அவர்களின் கீழ் பணிபுரிந்த பள்ளர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் அவர்களைத் தொடர்ந்து அருகில் இருந்த பனை மரம் ஒன்றில் ஏறி விண்ணுலகம் சென்றதும், கதைக்கான அடிப்படை. அவ்வாறு விண்ணுலகம் சென்றவர்களை அவரவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடவுளராக வழிபட்டனராம். வெள்ளாளர் ஏறிய புளிய மரத்தடியில் இளந்தாரி வழிபாடும், பனை மரத்தடியில் அண்ணமார் வழிபாடும் தோன்றின என்கின்றனர். எனினும், சம்பந்தப்பட்டவர்களின் அடையாளம், அவர்களின் எண்ணிக்கை, மரங்களில் ஏறி விண்ணுலகம் சென்றமைக்கான காரணம் என்பவை தொடர்பில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஒல்லாந்தர் காலத்தில் எழுந்த "பஞ்சவன்னத் தூது" என்னும் நூல் வெள்ளாளர் குடிப்பிறந்த இளந்தாரி எனப்படும் கைலாயநாதன் இணுவில் பேரூரின் ஆட்சியாளன் என்றும், அண்ணமார் எனப்படுவோர் அவனுக்குக் கீழே பணிபுரியும் வீரர்கள் என்றும் கூறுகிறது.[2] இதைத் தழுவிப் பிற்காலத்தில் நூல் எழுதியோர் சிலர் அண்ணமார் கைலாயநாதனின் மெய்க்காப்பாளன் எனக் குறிப்பிடுகின்றனர்.[3] கள ஆய்வில் பெற்ற வாய்வழிச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு சண்முகலிங்கன் இன்னொரு வேறுபாடான கதையைக் கூறுகிறார். இக் கதையின் படி புளியில் ஏறிய கைலாயநாதன், காலிங்கராயன் என்னும் இருவர் வெள்ளாள இனத்தைச் சேர்ந்த உடன்பிறந்தோராகவும், பனையில் ஏறிய பள்ளர் வகுப்பைச் சேர்ந்த இளைஞன் அவர்களுடன் குடிமை உறவு கொண்டவனாகவும் கொள்ளப்படுகின்றனர்.[4]

வழிபாட்டு முறை

பழைய மரபு

யாழ்ப்பாணத்தில் அண்ணமார் வழிபாட்டு முறைகளை ஆய்வு செய்த சண்முகலிங்கன், பழைய மரபுப்படி அண்ணமார் கோயில்களில், கல், பொல்லு, சூலம் போன்றவற்றுள் ஒன்றை அல்லது இரண்டை புனிதப் பொருளாகக் கருதி வழிபட்டு வந்ததாகக் கூறுகிறார். இணுவில் அண்ணமார் கோயிலிலும் அண்மைக்காலம் வரை கல்லும் பொல்லும் வைத்து வழிபட்டதாகத் தெரிகிறது. அண்ணமார் கோயில்களின் மரபுக்கு ஏற்ப பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே இக் கோயிலிலும் பூசாரியாக இருப்பது வழக்கம். ஆண்டுக்கு ஒரு முறை அயலில் உள்ள இளந்தாரி கோயிலில் பொங்கல் வைத்துப் படைக்கும்போது அண்ணமாருக்கும் படையல் வைப்பது வழக்கமாக இருந்தது. பள்ளர் சமூகத்தினர் அண்ணமார் கோயிலடியில் பொங்கல் வைத்து, அசைவ உணவு வகைகளையும் படைத்து வழிபடுவர்.

சமசுக்கிருதமயமாக்கமும் வழிபாட்டு முறைகளும்

அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களும், சாதி அடிப்படையிலான சமூக உறவுகள் தளர்ந்து வருவதாலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பொருளாதார அடிப்படையில் உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைத்ததாலும், அண்ணமார் வழிபாட்டிலும் மாற்றங்கள் ஏற்படலாயின. 1998 ஆம் ஆண்டில், கட்டிடம் எதுவும் இல்லாதிருந்த இவ்வழிபாட்டிடத்துக்கு அருகே கட்டிடம் அமைக்கப்பட்டது. வேணுகோபாலசுவாமி கோயில் எனப் பெயர் கொடுத்து விக்கிரகம் ஒன்றும் வைத்ததுடன் குடமுழுக்கும் செய்தனர். அண்ணமார் கோயில் ஆலமரம் புதிய கோயிலின் தலவிருட்சம் ஆனது. ஆல மரத்தைச் சுற்றித் தடுப்புச் சுவர் அமைத்து அதோடு சேர்ந்ததாக ஒழுங்கையை நோக்கியதாக அண்ணமாருக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இக் கோயிலுக்குத் தினமும் இரண்டு காலப் பூசைகளும் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் 15 நாட்கள் அலங்கார உற்சவங்களும் இடம்பெற்று வருகின்றன. 14 ஆம் நாள் தேர்த் திருவிழாவும், 15 ஆவது நாளில் தீர்த்தத் திருவிழாவும், 16 ஆவது நாளில் திருக்கல்யாணமும் இடம்பெறுகின்றன. தேர்த் திருவிழாவுக்காகப் புதிய தேரும், அதற்குப் பாதுகாப்பாக ஒரு தேர்முட்டியும் இக் கோயிலில் அமைந்துள்ளன.

குறிப்புக்கள்

  1. சண்முகலிங்கன், என்., பக்தவச்சல பாரதி, 2004. பக். 22.
  2. கந்தசுவாமி, க. இ. க., 1998. பக். 132.
  3. சிவலிங்கம், மூ., 2004. பக். 125.
  4. சண்முகலிங்கன், என்., பக்தவச்சல பாரதி, 2004. பக். 25.

உசாத்துணைகள்

  • கந்தசுவாமி, க. இ. க. (பதிப்பாசிரியர்), இணுவைச் சின்னத்தம்பிப் புலவர் அருளிய பஞ்சவன்னத் தூது, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1998.
  • சண்முகலிங்கன், என்., பக்தவச்சல பாரதி, இலங்கை இந்திய மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை. 2004.
  • சிவலிங்கம், மூ., சீர் இணுவைத் திருவூர், சைவத் திருநெறிக் கழகம், இணுவில். 2004.

இவற்றையும் பார்க்கவும்

வட இலங்கையில் அண்ணமார் வழிபாடு

"https://tamilar.wiki/index.php?title=இணுவில்_அண்ணமார்_கோயில்&oldid=39669" இருந்து மீள்விக்கப்பட்டது