அகப்பொருட்கோவை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அகப்பொருட்கோவை என்பது, வடமொழியில் பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். இதன் பெயருக்கு ஒப்ப இது அகப்பொருள் சார்ந்த ஒரு இலக்கிய வகை. இதைக் கோவை அல்லது ஐந்திணைக் கோவை போன்ற பெயர்களாலும் குறிப்பிடுவது உண்டு. கோவை இலக்கியம் அகப்பொருட்கோவை, புறப்பொருட்கோவை இன இரண்டு வகையாக அமையும் என்று சில இலக்கண நூல்கள் கூறுகின்றன. சுவாமிநாதம் என்னும் இலக்கண நூல் புறக்கோவை பற்றிக் கூறுகின்றது. எனினும், புறப்பொருட்கோவை நூல் எதுவும் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே நடைமுறையில் அகப்பொருட்கோவை, கோவை இரண்டுமே அகப்பொருட் கோவை இலக்கியத்தையே குறிப்பது வழக்கு. தலைவன் தலைவி ஆகியோரது காதல் உணர்ச்சிகளையும் நிகழ்ச்சிகளையும் ஒரு வரலாறுபோல் படிப்படியாகக் காட்டி ஒரே வகையான செய்யுள்களால் தொடர்ந்து பாடி அமைக்கும் நூல் இது. தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டு பின் மணம் புரிந்து இல்லறம் நடத்தும் இனிய நிகழ்வுகளைச் சொல்வது இக் கோவை இலக்கியம்.


"இருவகைப்பட்ட முதற்பொருளும், பதினான்கு வகைப்பட்ட கருப்பொருளும் பத்து வகைப்பட்ட உரிப்பொருளும் பொருந்தி, கைக்கிளை முதலுற்ற அன்புடைக் காமப் பகுதியவாம் களவொழுக்கத்தினையும் கற்பொழுக்கத்தினையும் கூறுதலே எல்லையாகக் கொண்டு, நன்மையுற்ற கட்டளைக் கலித்துறை நானூறாகத் திணை முதலாகத் துறை ஈறாகக் கூறப்பட்ட பன்னிரண்டு அகப்பாட்டு உறுப்பும் வழுவின்றித் தோன்றப் பாடுவது அகப்பொருட் கோவை."

என்கிறது இலக்கண விளக்கப் பாட்டியல் உரை[1].


பாண்டிக்கோவை என்னும் கோவை நூலே இன்று கிடைக்கும் கோவை நூல்களுள் காலத்தால் முந்தியது. இது 8 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இதே நூற்றாண்டில் எழுதப்பட்ட இன்னொரு கோவைநூல், மாணிக்கவாசரால் இயற்றப்பட்ட சமயக் கோவை நூலான திருக்கோவையார் ஆகும். பொய்யாமொழிப் புலவர் எழுதிய தஞ்சைவாணன் கோவை 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

கோவை இலக்கியங்கள் சில

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல் பக். 177

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=அகப்பொருட்கோவை&oldid=16775" இருந்து மீள்விக்கப்பட்டது