லெவன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 02:59, 16 மே 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
லெவன்
சுவரொட்டி
இயக்கம்லோக்கேஷ் அஜ்ல்ஸ்
தயாரிப்பு
கதைலோக்கேஷ் அஜ்ல்ஸ்
இசைடி. இமான்
நடிப்பு
ஒளிப்பதிவுகார்த்திக் அசோகன்
படத்தொகுப்புஎன். பி. சிறீகாந்த்
கலையகம்ஏ. ஆர் எண்டர்டெயின்மெண்ட்
விநியோகம்ருச்சிரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்
வெளியீடு16 மே 2025 (2025-05-16)
ஓட்டம்135 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு
ஆக்கச்செலவு4 கோடி
மொத்த வருவாய்₹6.8 கோடி

லெவன் (Eleven) என்பது 2025 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்தியத் திரைப்படம் ஆகும். இதை லோக்கேஷ் அஜ்ல்ஸ் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. இதில் நவீன் சந்திரா, ரேயா ஹரி, அபிராமி, ரவி வர்மா, திலீபன், ரித்விகா, ஷஷாங்க், ஆடுகளம் நரேன் , அர்ஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[2] இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார், கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார், என். பி. சிறீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். [2]

லெவன் திரைப்படம் 2025 மே 16 அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் விமர்சகர்களிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் பாதியில் கதைக்களம் யூகிக்கக்கூடியதாக இருப்பதாகச் சிலர் கருதினாலும், இதன் இரண்டாம் பாதியில் திருப்பங்களும், விறுவிறுப்பான கதைப்போக்கும் கொண்டதற்காகவும், நவீன் சந்திராவின் சிறந்த நடிப்புக்காகவும் பாரட்டபட்டது. மேலும், டி. இமானின் பின்னணி இசை, கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு ஆகியவை நேர்மறையான அம்சங்களாக பார்க்கப்பட்டன.

கதை

ஒரு தொடர் கொலைகாரன், ஆள் நடமாற்றமில்லாத தெருவில் ஒரு பிணத்தை எரிப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. கொலைகள் தொடர, இறப்பு எண்ணிக்கை 6-ஐ எட்டுகிறது. மேலும் துவக்கத்தில் காவல் துணை ஆணையர் (ஏசிபி) இரஞ்சித் குமார் இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்படுகிறார். ஆனால் ஒரு சாலை விபத்தில் இரஞ்சித் கோமா நிலைக்குச் செல்கிறார். இதனால் தீரன் தலைமையிலான ஒரு கொள்ளைக் கும்பலை அண்மையில் கைது செய்தற்காக திறமையான அதிகாரி என பாராட்டபட்ட ஏசிபி அரவிந்தனிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. அரவிந்தன், இதய நோயாளியும் தனித்து வாழும் தந்தையான உதவி ஆய்வாளர் மனோகரனுடன் சேர்ந்து, தொடர் கொலைகளைப் பற்றி விசாரிக்கத் தொடங்குகிறார். இதற்கிடையில், அரவிந்தனைத் தன் வருங்கால மணமகன் என்று தவறாக நினைத்துச் சந்தித்த சஞ்சனா, அவர் மீது காதல் கொள்கிறாள், ஆனால் அரவிந்தன் அவளது உணர்வுகளை ஏற்கவில்லை. பாதிக்கபட்டவர்களில் ஒருவரின் கணுக்காலில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தபட்ட ஒரு உலோகத் தகட்டை ஒரு முக்கிய ஆதாரமாக அரவிந்தன் கண்டுபிடிக்கிறார். இத்தடையத்தின் உதவியுடன், வயதின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய ஏழுபேரை அவர்களால் பட்டியலிட முடிகிறது. அந்த சந்தேக நபர்களில் ஒருவரான சுதாகருக்கு, ஏற்கனவே கணுக்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறான். அடுத்து, பாதிக்கப்பட்டவர்களில் ஒருத்தியின் இரட்டைச் சகோதரியான மீராவை அரவிந்தன் சந்திக்கிறார். சுதாகரின் வீட்டில் கண்டெடுக்கபட்ட ஒளிப்படத்தைப் போன்றே 'ட்வின் பேர்ட்ஸ்' பள்ளியிலும் காணப்படுவதும், அப்பள்ளியுடனான மீராவின் தொடர்பும், சந்தேக மனிதர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பை உணர்த்துகின்றன.

விசாரணையின் போது, சுதாகரும் மீராவும் ஒரு அதிர்ச்சிகரமான உண்மையைக் கூறுகின்றனர். அவர்கள் சுரேந்தர் மற்றும் தாரா ஆவர். அவர்கள் முறையே தங்கள் ஒத்த இரட்டையர்களான சுதாகர் மற்றும் மீராவாக நடித்திருக்கிறனர். தங்கள் இரட்டையர்கள் காணாமல் போனதாகவும், முகமூடி அணிந்த ஒரு மரும மனிதரிடமிருந்து தங்களுக்கு ஒரு காணொளி அழைப்பு வந்ததாகவும், அவன் தங்களைக் கடத்திச் சென்று, முகத்தை மூடிய ஒருவரைக் கொல்லும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவர்கள் விளக்குகிறனர். கொலை செய்ய மறுத்தால், அவர்களின் உடன்பிறப்புகள் கொல்லப்படுவார்கள் என்று அந்த இரட்டையர்கள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். தங்கள் உடன்பிறப்புகளைக் காப்பாற்றுவதற்காக, அவர்கள் அந்தக் கொலைகளைச் செய்திருக்கிறார்கள். இருப்பினும், பின்னர் அவர்கள், அப்போது முகத்தை மூடியிருந்தது தங்கள் சொந்த இரட்டையர்கள் என்பதை அறியாமல் தங்கள் கையாலே கொன்றுவிட்டதை அறிந்திருக்கின்றனர். காவல்துறையின் விசாரணையிலிருந்து தப்பிக்க, சுரேந்தரும் தாராவும் சுதாகர் மற்றும் மீரா என்ற அடையாளங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்த இரட்டையர்களுக்கு இடையேயான ஒரே தொடர்பு, அவர்கள் 'டிவின் பேர்ட்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி'யில் படித்ததுதான் என்பதை அரவிந்தன் அறிந்துகொள்கிறான். தங்கள் வகுப்புத் தோழனான பெஞ்சமின்தான் இந்தக் கொடூரமான சதித்திட்டத்தின் பின்னணியில் இருக்கக்கூடும் என்றும், அவனே தங்கள் உடன்பிறப்பை தாங்கள் கொல்ல காரணமாக இருக்கலாம் என்றும் சுரேந்தரும் தாராவும் சந்தேகிக்கிறனர்.

இரட்டையர்களின் கடந்த காலம் மற்றும் பெஞ்சமினுடனான அவர்களின் தொடர்புகள் குறித்த கூடுதல் தகவல்களை அறிய, அரவிந்தன் பள்ளியின் தாளாளரான சாந்தியைச் சந்திக்க முடிவு செய்கிறார். பெஞ்சமினின் சதுரங்கத் திறமையால் ஈர்க்கப்பட்ட சாந்தியும் அவரின் கணவர் இரவியும், பெஞ்சமின், பிரான்சிஸ் ஆகிய இரட்டைச் சகோதரர்களைத் தத்தெடுத்தனர். அந்தச் சகோதரர்கள் டிவின் பேர்ட்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் வளர்க்கப்பட்டனர். பெஞ்சமின் ஒரு சதுரங்க மேதையாக மாறி, பள்ளிக்குப் பெருமை சேர்க்கிறான். பிரான்சிஸ் படிப்பில் முதலிடம் பிடித்து, சக மாணவர்களைப் பொறாமை கொள்ளச் செய்கிறான். பிரான்சிஸ் இருளச்சம் என்னும் நோயால் பாதிக்கப்பட்டவன். அவனை அவன் வகுப்புத் தோழர்கள் ஒரு இருளான வேதியியல் ஆய்வகத்தில் வைத்து பூட்டிவிட்டு கேலி செய்கின்றனர். இதனால் பிரான்சிசுக்கு ஒரு கொடிய வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இயற்பியல் ஆய்வகத்தில் இருந்த பெஞ்சமினால் தன் சகோதரனைக் காப்பாற்ற முடியவில்லை. பிரான்சிசின் மரணத்திற்குப் பிறகு, பெஞ்சமின் மதர் ஹெலனால் பராமரிக்கப்பட்டு, பின்னர் ஒரு அறியப்படாத குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டான். பள்ளியின் நற்பெயரைக் காப்பதற்காகத் தன் கணவர் பிரான்சிசின் மரணத்தை இரகசியமாக வைத்திருந்ததாக சாந்தி கூறுகிறார். இருப்பினும், பின்னர் அந்தப் பள்ளி தீ விபத்தில் அழிந்தது, மேலும் ரவி அளவுக்கு அதிகமாகக் குடித்ததால் இறந்து போனார்.

அரவிந்தன் சக மாணவர்களின் பதிவுகளைப் பெற்று, பெஞ்சமின் இரட்டையர்களை அவர்களின் பிறந்தநாட்களில் குறிவைப்பதைக் கண்டுபிடிக்கிறார். எஞ்சியுள்ள இரட்டையர்களான சஞ்சனா, அஞ்சனா, மற்றும் தீரன், தீராஜ் ஆகியோர் சாத்தியமான இலக்குகள் என்பதைக் கண்டறிகிறார். குறிப்பாக, தீரன், தீராஜ் ஆகியோரைத் தொடர்புகொள்ள முடியாததால், சஞ்சனாவையும் அஞ்சனாவையும் பாதுகாக்க அரவிந்தன் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். அரவிந்தன் மீது காதல் கொண்ட சஞ்சனா, தன்னைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை அறியாமல் இருக்கிறாள். அரவிந்தன் தீரனின் எரிந்த உடலைக் கண்டுபிடிக்கும்போது விசாரணை ஒரு திருப்பத்தை அடைகிறது. இதற்கிடையில், முதலில் இந்த வழக்கை விசாரித்து வந்த ரஞ்சித் குமார், தனது கோமா நிலைக்குக் காரணம் திட்டமிடப்பட்ட ஒரு கொலை முயற்சிதான் என்று கூறுகிறார். கொலையாளி தன்னைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அருகில் வைத்ததாகவும் அவர் கூறுகிறார். பிரான்சிசின் நினைவு நாளில் பெஞ்சமின் ஒவ்வொரு ஆண்டும் அவனது கல்லறைக்குச் செல்வதாக சாந்தியிடமிருந்து அரவிந்தன் அறிகிறான். பெஞ்சமினைப் பிடிக்க அரவிந்தன் கல்லறைக்கு விரைந்து செல்கிறார். அவரால் பெஞ்சமினைப் பிடிக்க முடிந்ததா. எஞ்சியவர்களின் உயிரைக் காக்க முடிந்ததா என்பதே படத்தின் முடிவாகும்.

வெளியீடு

திரையரங்கில்

லெவன் 2025 மே 16 அன்று வெளியானது.[3] முன்னதாக, இப்படம் 2024 நவம்பர் 15 அன்று வெளியிடத் திட்டமிடபட்டிருந்தது.[4] ஆனால் பின்னர் வெளியீடு 2024 நவம்பர் 22 இக்கு ஒத்திவைக்கப்பட்டது.[5]

வீட்டு ஊடகம்

திரையரங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய மேலதிக ஊடக உரிமைகள் அமேசான் பிரைம் வீடியோ, பிளாக்சீப் வேல்யூ, ஆஹா, மனோரமாமேக்ஸ், லியோன்ஸ்கேட் பிளே ஆகியவற்றால் பெறப்பட்டன.[6][7] மேலும், செயற்கைக்கோள் உரிமைகள் விஜய் தொலைக்காட்சி மற்றும் கலர்சு தமிழ் ஆகியவற்றுக்கு விற்கப்பட்டுள்ளன.[8]

மேற்கோள்கள்

  1. "Eleven (15)". British Board of Film Classification (in ஆங்கிலம்). 2025-05-08. Retrieved 2025-05-09.
  2. 2.0 2.1 மலர், மாலை (2023-08-17). "விறுவிறுப்பான புலனாய்வு த்ரில்லராக உருவாகும் 'லெவன்'". www.maalaimalar.com. Archived from the original on 24 August 2023. Retrieved 2024-10-18.
  3. Features, C. E. (2025-04-05). "Naveen Chandra's Eleven gets new release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-04-05.
  4. "Naveen Chandra's bilingual mystery thriller 'Eleven' gets a release date" (in en-IN). The Hindu. 2024-10-13. https://www.thehindu.com/entertainment/movies/naveen-chandras-bilingual-mystery-thriller-eleven-gets-a-release-date/article68748278.ece. 
  5. Kumar, Akshay (2024-11-05). "Promo of Eleven's 'Azhagaana Arakkana' out". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2024-11-05.
  6. "Blacksheep Value". bsvalue.com (in ஆங்கிலம்). Retrieved 2026-02-12.
  7. "Ahead of Eleven's OTT release, here's how much Naveen Chandra's film made in theaters". OTTPlay (in ஆங்கிலம்). Retrieved 2025-07-02.
  8. 6K views · 77 reactions | Don’t miss it! #vijaysuper #supercinema #eleven | Vijay Super (in ஆங்கிலம்). Retrieved 2026-02-12 – via www.facebook.com.
"https://tamilar.wiki/w/index.php?title=லெவன்&oldid=488966" இலிருந்து மீள்விக்கப்பட்டது