ஸ்ரீ முருகன் நிலையம்
நிறுவனர்கள் | டான் ஸ்ரீ எம். தம்பிராஜா |
---|---|
வகை | இலாப நோக்கம் இல்லாத அமைப்பு |
நிறுவப்பட்டது | 1982 செப்டம்பர் 22ஆம் தேதி |
தலைமையகம் | கோலாலம்பூர் மலேசியா |
தோற்றம் | மலாயா பல்கலைக்கழகம், கோலாலம்பூர் |
வேலைசெய்வோர் | டத்தோ ஆ. தெய்வீகன் எல். கிருஷ்ணன் டத்தோ எஸ். கே. தேவமணி டாக்டர் பிரகாஷ் ராவ் கே. சுரேந்திரன் பி. சுப்பிரமணியம் டாக்டர் சேகர் நாராயணன் என். கோவிந்தன் வி. பாஸ்கரன் ஆர். முனியாண்டி டி. பாலசந்திரன் என். சத்தியா கே. நாச்சிமுத்து ஜி. மாணிக்கராஜ் மற்றும் சிலர் |
சேவை புரியும் பகுதி | மலேசிய மாநிலங்கள் |
Focus | மலேசிய இந்தியர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது |
வழிமுறை | நேரடிப் பயிற்சிகள் கல்விப் பயிலரங்குகள் விழிப்புணர்வு பயிற்சிகள் |
வருமானம் | மலேசிய அரசு வரிவிலக்கு |
சொந்தக்காரர் | ஸ்ரீ முருகன் நிலையம் |
Motto | கல்வியின் வழி சமுதாய மேம்பாடு |
இணையத்தளம் | http://www.smc.com.my/ |
ஸ்ரீ முருகன் நிலையம் என்பது மலேசியாவில் இயங்கி வரும் ஒரு கல்வி மையம் ஆகும். 1982 செப்டம்பர் 24ஆம் தேதி கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இந்தக் கல்வி மையம் உருவாவதற்கு மூலகர்த்தாவாக இருந்தவர் டான் ஸ்ரீ எம். தம்பிராஜா. இவருடன், மலாயா பல்கலைக்கழகத்தின் மேலும் 42 தமிழ்மொழிக் கழகப் பட்டதாரி மாணவர்கள் இணைந்து, அந்த மையத்தை உருவாக்கினார்கள்.[1] இந்த மையம், மலேசியாவில் இதுவரை 16,000 இந்தியப் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.
ஓர் ஆண்டிற்கு ஏறக்குறைய 800 பட்டதாரிகளை, ஸ்ரீ முருகன் நிலையம் உருவாக்கி வருகிறது. மலேசிய இந்தியர்களின் கல்வித் தரத்தை உலகளாவிய நிலையில் அறியச் செய்யும் சாதனை.[2] இது தவிர, ஆண்டுதோறும் ஒரு சிறந்த தாயாரைத் தேர்ந்து எடுத்து அவரைக் கௌரவிப்பும் செய்கிறது.[3] மலேசிய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் ஸ்ரீ முருகன் நிலையத்திற்கு, பல வகைகளில் நிதியுதவிகள் செய்து வருகின்றன.[4][5]
வரலாறு
மலேசிய இந்தியச் சமுதாயம் கல்வித் துறையில் முன்னேறவில்லை என்றால், எதிர்காலத்தில் அந்தச் சமுதாயம் பின் தள்ளப்பட்டு விடும் என்பதை மலேசிய இந்தியக் கல்வியாளர்கள் புரிந்து கொண்டனர். அதனால் கல்வியின் அவசியம் வலியுறுத்தப்பட்டு வந்தது. அரசியல் தலைவர்களும் அதையே வலியுறுத்தி வந்தனர்.
1970 - 1980களில் இந்திய சமுதாயம் பொருளாதாரத் துறையில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது. இந்தக் கட்டத்தில், மலேசிய இந்திய சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு, மாற்று வழிமுறைகளை உருவாக்க வேண்டும் எனும் எண்ணம் எம். தம்பிராஜாவிற்கு ஏற்பட்டது. அப்போது அவர், மலாயா பல்கலைக்கழகத்தில் வரலாறுப் பாட விரிவுரையாளராக இருந்தார்.
சமுதாய விழிப்புணர்வு
தன்னிடம் பயின்ற இந்திய மாணவர்களிடம் அதைப் பற்றி நிறைய பேசினார். அவர்களிடம் விவாதமும் செய்தார். இந்திய மாணவர்களிடம் சமுதாய விழிப்புணர்வுகள் ஏற்பட்டன. மலாயா பல்கலைக்கழகத்தின் 42 மாணவர்கள் ஒன்று கூடினர். மாணவர்கள் அனைவரும் மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அப்போது தமிழ் மொழிக் கழகத்தின் தலைவராக டத்தோ ஆ. தெய்வீகன் இருந்தார். இவர் இப்போது, சிலாங்கூர் மாநில காவல் துறையின் துணைத் தலைவராக இருக்கிறார். மாணவர்கள் அனைவரும் டாக்டர் தம்பிராஜாவிடம் சென்று பேசினர். தம்பிராஜாவிற்கு உதவியாக மற்றும் ஒரு விரிவுரையாளர் டாக்டர் எம். இராஜேந்திரன் என்பவர் இருந்தார். அவரும் மலாயா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை விரிவுரையாளர் ஆகும்.
42 மாணவர்கள்
அந்த 42 மாணவர்களின் பட்டியலில் டத்தோ எஸ்.கே. தேவமணி, டாக்டர் அருள்செல்வன், திருமதி. கோமதி தெய்வீகன், டாக்டர் பிரேமளா, பேராசிரியர் எம்.கிருஷ்ணன், பேராசிரியர் புவனேஸ்வரி, எஸ். ரகுநாதன், பரம் எட்டிக்கன், குப்பு ரெட்டி, மோகன், செல்லதுரை, ரத்னேஸ்வரி, மோகன கிருஷ்ணன், எஸ்.சேகரன் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். மேலும் பலர் உள்ளனர்.
இந்திய சமுதாயத்தைக் கல்வியின் வழி, எப்படி உயர்த்திக் காட்டுவது என்று கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள். அந்தச் சந்திப்பு நிகழ்ச்சியின் உறைகலனாக அமைந்ததுதான் ஸ்ரீ முருகன் நிலையம். இந்து தெய்வத்தின் பெயரிலேயே ஒரு கல்வி மையம் உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
முதல் இலக்கு
அவர்களின் முதல் இலக்கு STPM தேர்வு எழுதும் மாணவர்கள்தான். எஸ்.டி.பி.எம். பயிற்சி மையத்தைத் தொடங்குவதற்கு காரணங்கள் உள்ளன. 1970, 1980களில் எஸ்.டி.பி.எம். மாணவர்களின் அடைவு நிலைகள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தன.[6] உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில், இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிறைவு செய்யவே மாணவர்கள் போதாமல் போய்விட்டனர்.[7]
தொடர்ந்து ஆறு மாதங்களில் விரிவுரைக் கூறுகள், தேர்வு வழிகாட்டிகள், பயிற்சி உபகரணங்கள் தயாரிக்கப்பட்டன. அவர்களின் முதல் இலக்காக STPM தேர்வு எழுதும் மாணவர்கள்தான் இருந்தனர். STPM என்றால் Sijil Tinggi Pelajaran Malaysia. மலேசிய உயர்க்கல்விச் சான்றிதழ் என்று பொருள்படும்.
எஸ்.டி.பி.எம். தேர்வு
ஒரு மாணவர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு முன்னால் இரு ஆண்டுகள் உயர்க்கல்வி பயில வேண்டும். பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான தயார்நிலைக் கல்வி. அதைத்தான் எஸ்.டி.பி.எம். என்று மலேசியாவில் அழைக்கிறார்கள்.
ஒவ்வொரு எஸ்.டி.பி.எம். பாடத்திற்கும் 25 பாடம் கற்பித்தல் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பாடத் திட்டங்களைப் பல்கலைக்கழக மாணவர்களும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும், விரிவுரையாளர்களும் ஒன்றாக இணைந்து தயாரித்தார்கள். அந்தப் பாடத் தயாரிப்புகளுக்கு, தம்பிராஜா தலைமை ஆலோசகராக இருந்தார்.
முதல் வகுப்பு
பாடத் திட்டங்களில் பயிற்சிகள், பயிலரங்குகள், முன்மாதிரி விடைகள், பழைய தேர்வுத் தாட்கள், பதில் நுட்பக் கூறுகள், உத்திகள், குறிப்புகள், சுயமாகப் பயிலும் திட்டங்கள், ஊக்குவிப்பு உரைகள் போன்றவை அடங்கும்.
முதல் எஸ்.டி.பி.எம். வகுப்பு செப்டம்பர் 1982 லிருந்து 1983 ஏப்ரல் வரை நடைபெற்றது. பெட்டாலிங் ஜெயா ஜாலான் 12/19இல், ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு வகுப்பு நடத்தப்பட்டது.
மூன்று கோட்பாடுகள்
அதே 1983ஆம் ஆண்டில், பெட்டாலிங் ஜெயா, செந்தூல், கிள்ளான், சிரம்பான் ஆகிய நகரங்களில், மேலும் எஸ்.டி.பி.எம். வகுப்புகள் திறக்கப்பட்டன. அப்படியே படிப்படியாக ஸ்ரீ முருகன் நிலையம் வளர்ந்து வந்தது. ஸ்ரீ முருகன் நிலையத்தின் மூன்று கோட்பாடுகள்.
- முதலாவது: ஆண்டவர் அனைவருக்கும் சம அறிவைக் கொடுத்துள்ளார்.
- இரண்டாவது: கல்வியும் சமயமும் சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படை.
- மூன்றாவது: கல்விக் கட்டுப்பாடு சமயக் கட்டுப்பாட்டுக்குச் சமம்.
பல வெளிநாட்டுக் கல்வி மையங்களும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்விக் கோட்பாட்டைப் பின்பற்றி, அவர்கள் நாட்டிலும் அதைச் செயல்படுத்தி வருகின்றன.
ஸ்ரீ முருகன் நிலைய பட்டதாரிகள்
அதன்பின்னர், தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் திறக்கப்பட்டன. ஸ்ரீ முருகன் நிலையத்திற்கு இப்போது 200க்கு மேற்பட்ட கல்வி மையங்கள் உள்ளன. அவற்றில் ஏறக்குறைய 20,000 மாணவர்கள் பயில்கின்றனர். ஸ்ரீ முருகன் நிலையத்தில் படித்து, இதுவரையில் 16,000 பேர் பட்டதாரிகளாக வெளி வந்துள்ளனர்.[8]
அந்தப் பட்டதாரிகளில் பலர் மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக, விரிவுரையாளர்களாக, தொழில்துறை வல்லுநர்களாக, விமானிகளாக, அரசதந்திரிகளாக, நிபுணத்துவ ஆலோசகர்களாக, ஆசிரியர்களாக, கணினி நிபுணர்களாகப் புகழ்பெற்று விளங்குகின்றனர். நூற்றுக் கணக்கானோர் அரசாங்க உயர்மட்டப் பணிகளில் இருக்கின்றனர். சிலர், சொந்தமாகத் தகவல் தொழிநுட்ப நிறுவனங்களையும் நடத்த வருகின்றனர்.[9]
கல்வி யாத்திரை
ஒவ்வோர் ஆண்டும் பல இலட்சம் மாணவர்கள் கல்வி யாத்திரை எனும் புனிதப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.[10] மலேசியாவின் எல்லாப் பகுதியில் இருந்தும் மாணவர்களும் பெற்றோர்களும் ஒன்று திரண்டு கல்விப் பிரார்த்தனை செய்கின்றனர். கோலாலம்பூர் பத்துமலை, ஈப்போ கல்லுமலைக் கோயில், பினாங்கு பாலதண்டாயுதபாணி ஆலயம், காஜாங் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம், பந்திங் ஸ்ரீ மகா மாரியம்மன ஆலயம், மூவார் நாகமலை ஆலயம், தம்பின் வைதீஸ்வரர் ஆலயம் போன்ற சன்னிதானங்களில், கல்வி யாத்திரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த யாத்திரைகள் பெரும்பாலும் ஆகஸ்டு மாதங்களில் நடைபெறுகின்றன.[11] அதிகாலை ஏழு மணிக்கு மாணவர்கள் கூடத் தொடங்கிவிடுகின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ The Sri Murugan Centre was founded in 1982 by academics and undergraduates from Universiti Malaya.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Parent's Day at Sri Murugan Centre". Archived from the original on 2014-08-20. பார்க்கப்பட்ட நாள் 2012-11-10.
- ↑ Sitha, 69, was named “Mother of the Year” by the Perak Sri Murugan Centre (SMC).[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ RM1mil grant for Sri Murugan tuition centre.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Prime Minister Datuk Seri Najib Tun Razak presented academic grants to 50 deserving students from the Sri Murugan Centre.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ The SMC was initially set up to address the issue of insufficient Indian students with STPM qualification.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Some 25,000 students and youths had taken part in the competition organised by education-based Sri Murugan Centre (SMC).[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Dr Saravanan, 28, Dr Sudhagar, 28, Dr Sotheenathan, 26, Jedgiswary, 22, and Kasthoori Thilaka, 20.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ THE Government has allocated RM1 million to the Sri Murugan Centre to help poor and deserving Indian students excel in their education.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ The annual Kalvi Yathrai (education pilgrimage) organised by the Sri Murugan Centre (SMC) once again drew a massive crowd to the Batu Caves Sri Subramaniamswami temple.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Datuk Dr M. Thambirajah, SMC has emerged as a premier centre for self-development.[தொடர்பிழந்த இணைப்பு]