ஸ்கேர்பேஸ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஸ்கேர்பேஸ்
படிமம்:Scarface - 1983 film.jpg
சுவரொட்டி
இயக்கம்பிரையன் டி பால்மா
தயாரிப்புமார்ட்டின் பிரெக்மேன்
திரைக்கதைஆலிவர் ஸ்டோன்
இசைஜார்ஜியோ மொரோடர்
நடிப்பு
ஒளிப்பதிவுஜான் ஏ. அலோன்சோ
படத்தொகுப்பு
  • ஜெர்ரி கிரீன்பெர்க்
  • டேவிட் ரே
கலையகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்[1]
மார்ட்டின் பிரெக்மேன்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்[1]
வெளியீடுடிசம்பர் 1, 1983 (1983-12-01)(நியூயார்க்கு நகரம் premiere)
திசம்பர் 9, 1983 (அமெரிக்கா)
ஓட்டம்170 நிமிடங்கள்[1]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$23.5–37 மில்லியன்[2][3][4]
மொத்த வருவாய்$66.4 மில்லியன்[5]

ஸ்கேர்ஃபேஸ் (Scarface) என்பது 1983-ஆம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்கக் குற்றவியல் நாடகத் திரைப்படமாகும். இதை பிரையன் டி பால்மா இயக்கி, ஆலிவர் ஸ்டோன் எழுதியுள்ளார். இப்படம் 1932-ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். இதில் கியூப அகதியான டோனி மொன்டானா எனும் கதாபாத்திரத்தில் அல் பசீனோ நடித்துள்ளார். இவர் மரியல் படகுப் பயணத்தின் போது மயாமிக்கு வந்து சேரும் இவர், ஒரு சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னனாக மாறுகிறார்.

பசீனோ, தயாரிப்பாளர் மார்ட்டின் பிரெக்மேனுடன் இணைந்து இந்த படத்திட்டத்தை உருவாக்கினார். படகுப் பயணத்தின் போது கதையை அமைக்கும் யோசனையை பிரெக்மேனும் சிட்னி லூமெட்டும் உருவாக்கினர். முதலில் இப்படத்தை இயக்க லூமெட் நியமிக்கப்பட்டார், ஆனால் படம் மிகவும் வன்முறை மிக்கதாக இருப்பதாக உணர்ந்ததாலும், அதை ஒரு அரசியல் படமாக மாற்ற விரும்பியதாலும் அவர் படத்திலிருந்து விலகினார். லூமெட்டிற்குப் பதிலாக டி பால்மா இயக்குநராகப் பொறுப்பேற்றார், மேலும் பிரெக்மேன் திரைக்கதையை எழுத ஸ்டோனை நியமித்தார். அந்த நேரத்தில் கோகைன் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக போராடிக்கொண்டிருந்த ஸ்டோன், பாரிசில் திரைக்கதையை எழுதினார். ஆரம்பத்தில் இப்படம் முழுவதும் மியாமியில் படமாக்கப்படவிருந்தது, ஆனால் திரைக்கதை தங்களைத் தவறாகச் சித்தரிப்பதாக உணர்ந்த கியூப சமூகம், அங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கான கோரிக்கைகளை நிராகரித்தது. 1982 நவம்பர் முதல் 1983 மே வரை லாஸ் ஏஞ்சல்சிலும், இரண்டு வாரங்கள் மியாமியிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்திற்கு ஜார்ஜியோ மொரோடர் இசையமைத்தார்.

ஸ்கேர்ஃபேஸ் திரைப்படம் 1983 திசம்பர் 1 அன்று நியூயார்க் நகரில் திரையிடப்பட்டு, திசம்பர் 9 அன்று யுனிவர்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்று, 66 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இப்படத்தின் அதீத வன்முறை மற்றும் ஒரே மாதிரியான சித்தரிப்புகள் காரணமாக துவக்கத்தில் விமர்சனங்கள் எதிர்மறையாக இருந்தன. இருப்பினும், அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், சில விமர்சகர்கள் அதை மறுமதிப்பீடு செய்தனர், மேலும் இது இப்போதுவரை உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. [6] மார்ட்டின் ஸ்கோர்செசி போன்ற திரைக்கதை எழுத்தாளர்களும் இயக்குநர்களும் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர், மேலும் இது பாப் கலாச்சாரத்தில், குறிப்பாக ஹிப்-ஹாப் கலாச்சாரத்தில், [7] [8] அத்துடன் வரைகதை புத்தகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், காணொளி விளையாட்டுகளிலும் பரவலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு கல்ட் கிளாசிக் ஆகக் கருதப்படுகிறது. [9] [10]

இப்படத்தை தழுவி 2012 ஆம் ஆண்டு தமிழில் பில்லா 2 திரைப்படம் எடுக்கப்பட்டது.[11]

கதை

1980-இல், முன்னாள் குற்றவாளியும் கியூப அகதியுமான டோனி மொன்டானா, தன் நண்பர் மேனி ரிபெரா மற்றும் அவர்களது தோழர்களான ஏஞ்சல், சி-சி ஆகியோருடன் மயாமிக்கு வந்து இறங்குகின்றனர். அப்போது டோனி மொன்டானாவைச் சந்திக்கும் போதைப்பொருள் மன்னனான ஃபிராங்க் லோபஸ், பிடல் காஸ்ட்ரோவின் முன்னாள் அடியாள் ஒருவரைக் கொலை செய்யுமாறு கூறுகிறான். அதற்கு பிரதி உபகாரமாக அமெரிக்காவில் தங்குவதற்கான அனைத்து ஆவணங்களையும் தருகிறான். உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலைகளில் அதிருப்தியடைந்த டோனியும் மேனியும், ஃபிராங்கின் வலது கையான ஓமர் சுவாரஸைச் சந்திக்கின்றனர். ஓமர், கொலம்பிய வணிகர்களிடமிருந்து கொக்கைன் வாங்குவதற்காக அந்த நால்வரையும் அனுப்புகிறான். டோனியும் ஏஞ்சலும் துப்பாக்கி முனையில் கடத்தப்படுகின்றனர்; மேனியும் சி-சியும் ஏஞ்சலைக் காப்பாற்றுவதற்கு முன்பு, அவன் ஒரு சங்கிலி அறுக்கும் கருவியால் கொடூரமாக வெட்டப்படுவதை டோனி பார்க்கும்படி செய்யப்படுகிறான். அவர்கள் வணிகர்களில் மூன்று பேரைக் கொன்று, ஓமர் தங்களைச் சிக்க வைத்ததாகச் சந்தேகப்பட்டு, போதைப்பொருளையும் பணத்தையும் ஃபிராங்கிடம் நேரடியாக ஒப்படைக்கின்றனர்.

டோனியும் மேனியும் ஃபிராங்கிற்காக வேலை செய்யத் தொடங்குகிறனர். அதே நேரத்தில் டோனி ஃபிராங்கின் மனைவி எல்விரா ஹான்காக்கை விரும்பத் தொடங்குகிறான். டோனி தன் தாயையும், சகோதரி ஜினாவையும் சந்திக்கச் செல்கிறான். தான் ஒரு அரசியல் அமைப்பாளராக பணி செய்து பணம் சம்பாதிப்பதாகக் கூறி, டோனி தன் தாயிடம் 1,000 டாலர் கொடுக்கிறான். அவனது பொய்யால் கோபமடைந்த டோனியின் தாய், அவனது குற்ற வாழ்க்கைக்காக கடுமையாகச் சாடி, அவனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறாள். இருப்பினும், ஜினா அந்தப் பணத்தைத் தன்னிடமே வைத்துக்கொள்கிறாள். கொக்கைன் மன்னன் அலெஜான்ட்ரோ சோசாவைச் சந்திப்பதற்காக ஃபிராங்க், டோனியையும் ஓமரையும் பொலிவியாவிற்கு அனுப்புகிறான். ஃபிராங்கின் ஒப்புதல் இல்லாமல் ஒரு பெரிய ஒப்பந்தத்தைப் பேரம் பேச டோனி முயலும்போது ஓமர் கோபமடைகிறான். சோசா ஓமரை அனுப்பிவிடுகிறான், ஆனால் ஒமர் காவல் துறையின் உளவாளி என்று சொல்லி, சோசா அவனை உலங்கு வானூர்தியில் இருந்து தூக்கிலிட்டுக் கொல்கிறான். தான் ஓமரை எப்போதும் நம்பியதில்லை என்று டோனி கூறுகிறான். டோனியின் நேர்மையால் சோசாவுக்கு அவனைப் பிடித்துப் போய் விடுகிறது. மேலும் அந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்கிறான். ஆனால், அதற்கு முன், தன்னை எப்போதும் ஏமாற்றக் கூடாது என்று டோனியை கடுமையான எச்சரிக்கிறான்.

மியாமிக்குத் டோனி திரும்புகிறான். ஃபிராங்க்கின் அனுமதியின்றி சோசாவுடன் டோனி செய்த ஒப்பந்தமும், ஓமரின் மரணத்திற்காகவும் அவன் டோனிமீது கடும் கோபம் கொள்கிறான். அதன் பிறகு ஃபிராங்குடனான வணிக உறவைத் துண்டித்துக்கொண்டு, டோனி தானே சொந்தமாக கோக்கைன் கடத்தல் வேலையைத் தொடங்குகிறான். மேலும், எல்விராவுடன் டோனி தொடர்பு கொண்டுள்ளது ஃபிராங்கிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஃபிராங்கின் கூட்டாளியாக இருக்கும் ஊழல்வாதியான துப்பறிவாளன் மெல் பெர்ன்ஸ்டீன், டோனியை மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறான். ஒரு கிளப்பின் கழிப்பறையில் ஜினா ஒருவனுடன் உடலுறவு கொள்ளுவதை டோனி பார்க்க நேர்கிறது. கிளப்பில், கூலிப்படையினர் டோனியைக் கொல்ல முயல்கின்றனர், ஆனால் அவன் சிறு காயங்களுடன் தப்பிக்கிறான். இதன் விளைவாக டோனியின் நண்பன் மேன்னியால் ஃபிராங்க் கொல்லப்படுகினான். டோனி எல்விராவை மணக்கிறான். அவன் சோசாவின் கோகைனின் விநியோகத்தராகி, பலத்த பாதுகாப்புள்ள ஒரு பெரிய தோட்டத்தில் இருந்து வேகமாக வளர்ந்து வரும் போதைப்பொருள் வணிகராக மாறுகிறான்.

1983-ல், அமெரிக்க கூட்டாட்சி முகவர்கள் நடத்திய ஒரு இரகசிய நடவடிக்கையின் விளைவாக, டோனி மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவன் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறான். தன்னை அம்பலப்படுத்தவிருந்த ஒரு பத்திரிகையாளரை டோனி கொன்றால், தனக்கு உள்ள அரசாங்கத் தொடர்புகள் மூலம் அவனைச் சிறையிலிருந்து காப்பாற்றுவதாக சோசா உறுதியளிக்கிறான். ஒரு உணவகத்தில் இரவு உணவு அருந்திக்கொண்டிருக்கும்போது, குடிபோதையில் இருந்த டோனி, தனது கைதுக்கு மேனிதான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறான். மேலும் எல்விராவை மலடு, போதை அடிமை என்று அழைக்கிறான். இதனால் எல்விரா மற்ற வாடிக்கையாளர்களிடம் டோனியின் குற்றச்செயல்களைக் கூறிவிட்டு அவனை விட்டு நீங்குகிறாள். சோசாவின் அடியாள் ஆல்பர்டோ, அந்தப் பத்திரிகையாளரின் காருக்கு அடியில் தொலைவில் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு குண்டை பொருத்துகிறான். ஆனால் அந்தப் பத்திரிகையாளருடன் அவரின் மனைவியும் குழந்தைகளும் இருப்பதைக் கண்ட டோனி, அந்தத் தாக்குதல் முயற்சியை நிறுத்த முயற்சிக்கிறான். ஆல்பர்டோ அதற்கு மறுக்க, அவன் குண்டை வெடிக்கச் செய்வதற்குள் டோனி அவனைக் கொன்றுவிடுகிறான். கோபமடைந்த சோசா, அந்தப் பத்திரிகையாளர் தன்னை அம்பலப்படுத்தவிட்ட டோனியைப் பழிவாங்குவதாகச் சபதம் செய்கிறான்.

தன் தாயின் வேண்டுகோளுக்கு இணங்கி, கோக்கைன் போதையில் இருந்த டோனி, ஜினாவைத் தேடிச் செல்கிறான். அவள் மேனியுடன் இருப்பதைக் காண்கிறான். ஜினா தன்னை மணந்துகொண்டாள் என்பதை தெரிவிப்பதற்கு முன்பே, டோனி மேனியைச் சுட்டுக் கொல்கிறான். டோனி ஜினாவைத் தனது தோட்டத்துக்கு அழைத்துச் சென்று, தனது அலுவலகத்தில் கோகைன் போதையில் மூழ்குகிறான். அங்கே ஜினாவுக்கும் டோனிக்கும் வாக்ககுவாதம் ஏற்படுகிறது. அவள் அவனைச் சுடுகிறாள். அதனால் டோனி காயமடைகிறான். பின்னர் சோசாவின் ஆட்களில் ஒருவனால் அவள் கொல்லப்படுகிறாள். பதிலுக்கு டோனியும் அவனைக் கொல்கிறான். சோசாவின் ஆட்கள் அந்த வளாகத்திற்குள் நுழைந்து, சி-சி உட்பட டோனியின் காவலர்களைக் கொல்கின்றனர். அதே நேரத்தில், டோனி கையெறி குண்டு ஏவுகலத்துடன் கூடிய ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கொல்ல வந்தவர்களைத் தாக்கி, பலரைக் கொல்கிறான், அதேசமயம் அவனுக்கும் துப்பாக்கிக் காயங்கள் ஏற்படுகின்றன. அவன் தன்னைத் தாக்கியவர்களை ஏளனம் செய்கிறான். ஒருவன் அவனைப் பின்புறத்தில் வேட்டைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான். "இந்த உலகம் உன்னுடையது" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஒரு பூகோளத்தின் அடிப்பகுதிக்கு அருகில், டோனியின் உடல் பால்கனியிலிருந்து நீச்சல் குளத்தில் விழுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Scarface (1983)". AFI Catalog of Feature Films. Archived from the original on July 17, 2019. Retrieved July 17, 2019.
  2. Harmetz, Aljean (October 30, 1983). "MOVIE 'SCARFACE' RECEIVES X RATING". த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on June 3, 2020. Retrieved April 13, 2020.
  3. "Inside 'Scarface's' Sometimes Rocky Road to Becoming a Classic". Variety. December 7, 2018. Archived from the original on December 7, 2018. Retrieved July 17, 2019.
  4. Bailey, Jason (April 20, 2018). "Revisiting the Controversy Surrounding Scarface". Vulture இம் மூலத்தில் இருந்து June 3, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200603213216/https://www.vulture.com/2018/04/revisiting-the-controversy-surrounding-scarface.html. 
  5. "Scarface (1983)". பாக்சு ஆபிசு மோசோ. ஐ. எம். டி. பி இணையத்தளம். Archived from the original on May 18, 2020. Retrieved July 17, 2019.
  6. Sharp, Nathan (May 29, 2021). "10 Best Gangster Movies, According to American Film Institute". Screen Rant. Archived from the original on August 16, 2021. Retrieved August 16, 2021.
  7. "Why the hip-hop community still worships 'Scarface'". August 26, 2011. Archived from the original on October 13, 2017. Retrieved October 13, 2017.
  8. "Scarface's impact on hip-hop culture". April 26, 2017. Archived from the original on October 13, 2017. Retrieved October 13, 2017.
  9. GROBEL, LAWRENCE (May 9, 2011). "Reflections On Scarface". Empire. Archived from the original on September 17, 2017. Retrieved October 13, 2017.
  10. ராஜேஷ், கருந்தேள் (2026-03-06). "கடத்தி வரப்பட்ட கதை! | சுட்ட கதை 20". Hindu Tamil Thisai. Retrieved 2026-04-12.
"https://tamilar.wiki/w/index.php?title=ஸ்கேர்பேஸ்&oldid=505678" இலிருந்து மீள்விக்கப்பட்டது