வை. பொன்னம்பலம்
வை. பொன்னம்பலம் (சனவரி 30, 1904—திசம்பர் 2, 1973) என்பவர் தமிழ் மறவர் என்னும் அடைமொழியால் அறியப்படும் ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். தமிழ் ஆசிரியராகவும் பகுத்தறிவுச் சிந்தனையுடையவராகவும் ஒரு போராளியாகவும் வாழ்ந்தவர். மறைமலையடிகள் தேவநேயப் பாவாணர், பெரியார் ஈ. வெ. ராமசாமி போன்ற அறிஞர்களுடன் நெருக்கமாகப் பழகியவர்.
பிறப்பும் படிப்பும்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் அரியலூருக்கு அருகில் கீழ மாளிகை என்னும் ஊரில் பிறந்தார். இளமைப் பருவத்தில் சைவப் பற்றாளராகவும் வள்ளலார் இராமலிங்க அடிகளின் வழியினராகவும் இருந்தார். எனவே மறைமலையடிகளிடம் தொடர்பும் நெருக்கமும் ஏற்பட்டன. மறைமலையடிகளின் தொடர்பினால் தம் இயற்பெயரான கனகசபை என்பதைத் தூய தமிழில் பொன்னம்பலம் என்று மாற்றிக் கொண்டார். திருவையாறு அரசர் கல்லூரியில் பொன்னம்பலனார் சேர்ந்து 1926 முதல் 1931 வரை பயின்று புலவர் பட்டம் பெற்றார். அவருடன் மறை. திருநாவுக்கரசு, கோ.சி. பெரியசாமிப்புலவர், வீ உலகவூழியர் ஆகியோர் கல்வி பயின்றார்கள்.
ஆசிரியப்பணி
வேலூர் (1931-46), சேலம் (1947-52), முசிறி (19528)-53), செந்துறை (1954-59), அரவக்குறிச்சி (1959-60), பொன்பரப்பி (1960-67), தோகைமலை (1967-68) என முப்பத்தேழு ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்களிடையே தமிழ்ப் பற்றையும், தமிழின உணர்வையும், நல்லொழுக்கத்தையும், பகுத்தறிவுக் கருத்துகளையும் சொல்லிக் கொடுத்தார்.
கொள்கை உறுதி
குடியரசு என்னும் இதழைப் படித்தும் பெரியார் பேச்சைக் கேட்டும் பகுத்தறிவாளரானார். எப்பொழுதும் கருப்புச் சட்டை அணிந்து பள்ளிக்குச் செல்லும் வழக்கம் அவர் கொண்டிருந்தார். தமிழ் மொழிக்குக் களங்கம் ஏற்படுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார். நாட்டு வாழ்த்துப் பாடலைப் பிற மொழியில் பாடுவதை எதிர்த்துத் தமிழில் பாடுவதை நிலை நிறுத்தினார். இதன் காரணமாக அந்தக் காலத்து அரசு பொன்னம்பலனாரை பணி நீக்கம் செய்தது. பெரியார் தலையிட்டதால் அந்தப் பணிநீக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தாம் பணியாற்றிய வேலூர் இந்து செகண்டரி பாடசாலையின் பெயரில் காணப்பட்ட இந்து என்னும் சொல்லை பொன்னம்பலனார் பெரு முயற்சி செய்து நீக்கினார். அந்தப் பள்ளியை நிறுவியவர் பெயரைச் சூட்டி கந்தசாமி கண்டர் உயர்நிலைப் பள்ளி என்று மாற்றம் பெறச் செய்தார்.
ஒரு முறை பாரதிதாசனைச் சந்தித்து உரையாடிய போது பாரதிதாசனின் கவிதைகளில் சில சமற்கிருத சொற்கள் இடம்பெற்றதைச் சுட்டி காட்டினார். அதன் விளைவாக பாரதிதாசன் இனிமேல் வடசொல் கலவாமல் எழுதுவதாக உறுதி கொண்டார். மொழிக் கொள்கையில் தமக்கும் பெரியார் ஈ வெ இரா வுக்கும் கருத்து முரண் உண்டு என்று பெரியாருக்கு முன்னிலையில் துணிச்சலுடன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1957 ஆம் ஆண்டில் சேலம் தமிழ்ப் பேரவை நடத்திய விழாவில் பெரியார் ஈ வே. இராமசாமியால் பொன்னம்பலனாருக்குத் தமிழ்மறவர் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
சான்று
தமிழ்மறவர் பொன்னம்பலனார் வரலாறு-நூல்
காக்கைச் சிறகினிலே இதழ் செப்டம்பர் 2012