வீ. ரேவதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வீரமணி ரேவதி (Veeramani Revathi) இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரை மாநகரத்திற்கு அண்மையில் உள்ள சக்கிமங்கலம் எனும் பகுதியைச் சேர்ந்தவர். தடகள விளையாட்டு வீரகனையான இவர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 23 சூலை 2021 முதல் நடைபெற உள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில்[1] கலப்பு இரட்டையர் 4x400 மீட்டர் ஓட்டயப்பந்தயத்தில் கலந்து கொள்கிறார்.[2][3]இதற்காக அவர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பயிற்சி பெற்று வருகிறார். ஜப்பான் ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை பெற்றுத்தருவதே தனது குறிக்கோள் எனத் தெரிவித்துள்ளார்.[4]

வரலாறு

வீ. ரேவதியின் சொந்த ஊர் மதுரை அருகே உள்ள சக்கிமங்கலம் ஆகும். வீரமணி, இராணி தம்பத்தியருக்கு இவர் மகளாகப் பிறந்தார். நான்காம் வகுப்பு படிக்கும்போது இவரது தந்தை வீரமணி இறந்து விட்டார். 5-ஆம் வகுப்பு படிக்கும்போது தாயை பறி கொடுத்தார். இவரும், இவரது தங்கையும் பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வந்தனர். இவர் 12-ம் வகுப்பு படிக்கும்போது மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டார். கண்ணன் என்ற தடகள பயிற்சியாளர் உதவியுடன் ரேவதி மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் விருதுகள் மற்றும் பதக்கங்களை வென்றுள்ளார்.[5] இதனால் இவருக்கு தென்னக இரயில்வேயில் பயணச்சீட்டு பரிசோதகர் வேலை கிடைத்தது.

2014-15- ஆம் ஆண்டு காலத்தில் மதுரையில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் ரேவதி வீரமணி வெறும் கால்களுடன் ஓடத்தொடங்கினார். போட்டியில் ரேவதி வெற்றி பெறவில்லை. எனினும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கவனத்தை ஈர்த்தார்.

கோவையில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய இளையோர் வெற்றியாளர் கோப்பை போட்டியில் ரேவதி 100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கம் வென்றார். 2019 ஆம் ஆண்டு வரை கண்ணனிடம் பயிற்சி பெற்ற இவர் பின்னர் பாட்டியாலாவில் உள்ள தேசிய பயிற்சி முகாமிற்கு தேர்வானார். அங்கு பயிற்சியாளர் கலினா புகாரினாவின் ஆலோசனையின் பேரில் 400 மீட்டர் ஓட்டபந்தயத்திற்கு மாறி ரேவதி பயிற்சி பெறத் தொடங்கினார்.

2019- ஆம் ஆண்டு 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம், 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் என ரேவதியின் பதக்க வேட்டை தொடர்ந்தது. மாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற வெற்றியாளர் போட்டியில் ரேவதி 53.71 விநாடிகளில் இலக்கை எட்டி மூன்றாம் இடம் பிடித்தார்.[6]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வீ._ரேவதி&oldid=25682" இருந்து மீள்விக்கப்பட்டது