வி. வி. ரவி
வி.வி. ரவி | |
---|---|
2012 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது வயலின் வாசிக்கிறார் வி.வி. ரவி | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | வி.வி. ரவி |
இசை வடிவங்கள் | வயலின் |
தொழில்(கள்) | வயலின் இசைக் கலைஞர் |
இசைத்துறையில் | 1966–முதல் |
இணையதளம் | Official site |
வடக்கஞ்சேரி வீரராகவ ரவி அல்லது சுருக்கமாக வி. வி. ரவி (Vadakkanchery Veeraraghava Ravi, பிறப்பு: 1957) தமிழ்நாட்டைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர்[1]. சென்னை வானொலி நிலையத்தில் முதல் தர வயலின் கலைஞராகப் பணியாற்றுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
1957-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ரவி ஒரு இசைப் பரம்பரையைச் சேர்ந்தவர். இவரது தகப்பனார் வடக்கஞ்சேரி வீரராகவ ஐயர் பாட்டு, வயலின் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர். இவரது பாட்டனார் சுவாதித் திருநாள் அரசவைக் கலைஞராக இருந்து இசைத் தொண்டாற்றியவர்.
தகப்பனாரிடம் முதலில் வாய்ப்பாட்டும் வயலினும் கற்றுக்கொண்ட வி.வி. ரவி பிறகு திருவாளர்கள் செம்பை வைத்யநாத பாகவதர், செம்மங்குடி, தனது சகோதரர் வி.வி. சுப்ரமணியம், பி.எஸ். நாராயணசுவாமி ஆகியோரிடமும் சிறப்பு பயிற்சி எடுத்துக்கொண்டார்.
தனது 9-ஆம் வயதிலிருந்து பக்கவாத்தியமாகவும், தனி வயலின் கச்சேரிகளாகவும் செய்து வரும் இவர், மறைந்த பிரபல சங்கீத மேதைகளாகிய திருவாளர்கள் செம்பை வைத்யநாத பாகவதர், செம்மங்குடி, எம். எஸ். சுப்புலஷ்மி, டி. கே. பட்டம்மாள், கே.வி. நாராயணசுவாமி, எம்.டி. ராமநாதன், டி. கே. ஜெயராமன், வொலேட்டி வெங்கடேசுவருலு, கல்யாணராமன், எம். எல். வசந்தகுமாரி ஆகிய பல பிரபலங்களுக்கு பக்கவாத்தியம் வாசித்துள்ளார்.
பிரபல சங்கீத வித்வான்கள் பாலமுரளி கிருஷ்ணா, நெடுநேரி கிருஷ்ண மூர்த்தி, பி.எஸ். நாராயணசுவாமி, டி. என். சேஷகோபாலன், டி. வீ. சங்கரநாராயணன், டி.கே. கோவிந்த ராவ், சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், திருச்சூர் ராமசந்திரன் ஆகிய முன்னணி கலைஞர்களுக்கும், மற்றும் இன்று பிரபலமாக இருக்கும் பல இளம் கலைஞர்களுக்கும் பக்கவாத்தியம் வாசித்து அவர்களை ஊக்குவித்து வருகிறார்.
விருதுகளும் பட்டங்களும்
- அகில இந்திய வானொலி நிலையம் ஆண்டுதோறும் நடத்தி வரும் இசைப் போட்டிகளில் 1973-ஆம் ஆண்டுக்கான சிறந்த வயலின் கலைஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சென்னை சங்கீத வித்வத் சபை 1976-ல் இவரை சிறந்த இளம் வயலின் கலைஞராகவும், 1990-ல் சிறந்த வயலின் கலைஞராகவும் தேர்ந்தெடுத்துள்ளது.
- சென்னை இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் சார்பில் 1990-ஆம் ஆண்டின் சிறந்த வயலின் கலைஞர் என்ற வெகுமதியை பெற்றார்.
- 1996-ஆம் ஆண்டு அஹமதாபாத் சங்கீத சபை இவருக்கு நாதமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வானாக 2001-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2014 -ஆம் ஆண்டு சென்னை நாத சுதா அமைப்பு இவருக்கு நாத வல்லபா பட்டம் வழங்கியது [2]
தொழி்ல்
1982-ஆம் ஆண்டிலிருந்து சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றி வரும் இவர் ஓர் ஏ-டாப் கிரேடு வயலின் கலைஞர் ஆவார். இசைஞானி இளையராஜா, வித்யா சாகர் போன்ற புகழ்பெற்ற இசை அமைப்பாளர்கள் இசை அமைத்துள்ள திரைப்படங்களிலும் இவர் வாசித்துள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ ‘Every stage is a classroom’, த இந்து. 30 சூலை 2010
- ↑ நாத வல்லபா பட்டம்