வி. இக்குவனம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
வி. இக்குவனம் |
---|---|
பிறந்ததிகதி | அக்டோபர் 18 1923 |
பிறந்தஇடம் | பட்டமங்கலம் சிவகங்கை தமிழ்நாடு |
அறியப்படுவது | எழுத்தாளர் |
வி. இக்குவனம் (பிறப்பு: அக்டோபர் 18 1923), தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில் பட்டமங்கலம் எனுமிடத்தில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை திரு. பொன்னுச்சாமிப் பிள்ளை திண்ணைப் பள்ளியிலும், பின்னர் பட்டமங்கலம் தொடக்கப் பள்ளியிலும் பெற்றார். தொடர்ந்து கண்டரமாணிக்கம் உயர்நிலைப் பள்ளி, திருப்புத்தூர் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் உயர்நிலைக்கல்விப் பெற்று தேர்ச்சி பெற்றார்.
தொழில் நடவடிக்கைகள்
1941ல் திண்ணைப் பள்ளி ஆசிரியராக இணைந்த இவர் 1946ம் ஆண்டில் இலங்கை எம்.பி.ஆர்.ஏ. நிறுவனத்தின் எழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் சென்னை திரும்பி சென்னையிலும் எழுத்தராக தனது பணியைத் தொடர்ந்தார்.
1952ல் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து 1957 வரை சிங்கப்பூரின் கணக்குத் தணிக்கையாளராகப் பணியாற்றிப் பின்பு சிங்கப்பூரிலிருந்த மலாய்ப் பல்கலைக்கழகத்தின் இந்தியப் பகுதியில் சுருக்கெழுத்தாளராக 1958 வரை கடமை புரிந்தார். 1958ல் மலாயப் பல்கலைக்கழகம் மலேசியா கோலாலம்பூர் மாற்றப்பட்ட பின்பு 1975 வரை மலாய்ப் பல்கலைக்கழக நூல் நிலையத் தமிழ்ப் பிரிவின் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். மலேசியாவில் பணியாற்றிய காலத்தில் 1959 முதல் 1975 வரை மலேசிய வானொலி, தொலைக்காட்சியில் செய்தி மொழிபெயர்ப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
பத்திரிகைத்துறை
1976 மே முதல் 1978 மார்ச் வரை தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியராகவும், பின்பு 1978 மே முதல் 1979 சூன் வரை தமிழ்மலர் நாளேட்டின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
வகித்த பதவிகள்
மலேசியாவில் பணியாற்றி காலத்தில் மலாயாப் பல்கலைக்கழக பொதுத்துறை ஊழியர் சங்க துணைப் பொதுச் செயலாளராகவும், மலாயா பிராமணர் சங்கச் செயலாளராகவும் பின்பு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும், பொருளாளராகவும், சிங்கப்பூர் இந்து சபையின் துணைத் தலைவராகவும், ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயத் துணைத் தலைவராகவும், பல சங்கங்களின் வாழ்நாள் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
இலக்கியப் பணி
1952ல் எழுதத் தொடங்கிய இவர் கவிதை, கட்டுரைகளை அதிகமாக எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் தமிழ்நேசன், தமிழ்முரசு, தமிழ் மலர் போன்ற மலேசிய இதழ்களில் வெளிவந்துள்ளன.
கவியரங்கு
கவியரங்குகளில் பங்கேற்பதில் கூடிய ஆர்வம் காட்டிவந்த இவரின் முதல் கவியரங்கம் 1961ல் மலாயா வானொலியில் ஒலிபரப்பானது. அதைத் தொடர்ந்து வானொலி, தொலைக்காட்சிகளின் 50க்கும் அதிகமான கவியரங்குகளில் பங்கேற்றுள்ளார்.
எழுதியுள்ள நூல்கள்
- கவிதைக் கனிகள்
- கவிதைக் கதம்பம்
- இராஜீவ் இரங்கல் அந்தாதி
- வாரியார் இரங்கல் அந்தாதி
- இன்பநலக்காடு
- சித்திரப்பாக் கொத்து
- வேதமும் வேள்வியும் அந்தாதி
- ஸ்ரீ ருத்ரகாளி அந்தாதி
- ஸ்ரீ அழகு சௌந்தரி அந்தாதி
- நான் கண்ட இங்கிலாந்து நாடு
- சித்திரச் செய்யுள்
- வாழும் கவியரசு வைரமுத்து
- திருமுறை அந்தாதி 1
- திருமுறை அந்தாதி 2
- திருமுறை அந்தாதி 3
- வெண்பாவில் சிலேடைகள் - 108
- காரம் இனித்திடுமே காண் - ஈற்றடி வெண்பாக்கள்
- பைந்தமிழ் தேனீ பத்ம ஸ்ரீ வாலி அந்தாதி
- நாமகள் அந்தாதி
- அன்னையைப் போற்றும் அருந்தமிழ் ஆயிரம்
- ஆறுமுகன் போற்றி ஆயிரம்
- ஐங்கரன் போற்றி அருந்தமிழ் ஆயிரம்
- நச்சுக்கண் (மொழிபெயர்ப்பு நூல்)
- தமிழ் நெஞ்சர் என்.ஆர். கோவிந்தன் அந்தாதி
ஆகிய நூல்கள் உட்பட 'வேங்கடவன் பள்ளியெழும் பா' எனும் ஒலிநாடாவையும் வெளியிட்டுள்ளார்.
விருதுகளும் பரிசுகளும்:
திரு. இக்குவனம் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பெருந்தொண்டினைப் பெருமைபடுத்தும் விதமாக அவருக்குப் பல்வேறு பரிசுகளும், விருதுகளும் அளிக்கப்பட்டுள்ளன.
- 1962 ஆம் ஆண்டு 'பேரறிஞர் அண்ணா' விருது அளிக்கப்பட்டது.
- 1965 ஆம் ஆண்டு ‘ஏழையா? கோழையா? கூட்டுறவா?’ எனும் தலைப்பில் நடத்திய அனைத்துலக மலேசியக் கவிதைப் போட்டியில் தங்கப் பதக்கம்.
- 1993 ஆம் ஆண்டு கவிஞரின் வெண்பா எழுதும் ஆற்றலைச் சிறப்பிக்கும் விதமாக ‘வெண்பாச் சிற்பி’ என்ற பட்டம் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வட்டத்தால் வழங்கப்பட்டது.
- 1994 ஆம் ஆண்டு 'வெண்பா வேந்தன்' என்ற பட்டம் சென்னை தமிழ்ச் சங்கத்தால் வழங்கப்பட்டது.
- 2002 ஆம் ஆண்டு 'அருள் கவி செல்வர்' என்ற பட்டம் காஞ்சி காமகோடி பீடாதிபதிகளால் வழங்கப்பட்டது.
- 2003 ஆம் ஆண்டு 'சித்திரக் கவிஞர்' என்ற பட்டம் சிங்கப்பூரில் நிகழ்ந்த தேவார மாநாட்டில் வழங்கப்பட்டது.
- 2004 ஆம் ஆண்டு 'அந்தாதி அரசன்' என்ற பட்டம் சென்னை செம்மொழி நிலையத்தால் வழங்கப்பட்டது.
- 2005 ஆம் ஆண்டு 'சித்திரப் பாவலர்' என்ற பட்டம் ஜூரோங் இந்திய நற்பணி மன்றத்தால் வழங்கப்பட்டது.
- 2006 ஆம் ஆண்டு 'கணையாழி விருது' சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்பான கவிமாலை வழங்கியது.
- 2007 ஆம் ஆண்டு 'பாரதி, பாரதிதாசன் விழா விருது' தமிழ் மொழி & கலாச்சார கழகத்தால் வழங்கப்பட்டது. அதே ஆண்டு, சென்னை செம்மொழி நிலையத்தால், 'அந்தாதி காவலர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
- 2008 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நுண்கலைக் கழகத்தால், 'கலா ரத்னா விருது' வழங்கப்பட்டது.
- 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 'தமிழவேள் விருது' வழங்கிச் சிறப்பித்தது.
உசாத்துணை
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு