வில்லியநல்லூர் காளீசுவரர் கோயில்
வில்லியநல்லூர் காளீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், நாகப்பட்டினம் மாவட்டத்தின், குத்தாலம் வட்டம், வில்லியநல்லூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் வில்லியநல்லூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1] இந்த தலமானது காவிரி ஆற்றுக்கு வடக்கிலும், கொள்ளிடம் ஆற்றுக்கு தெற்கிலும் அமைந்துள்ளது.[2]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக காளீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி சிவகாமசுந்தரி என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தல மரம் வில்வம் ஆகும்.[1]
அமைப்பு
தேவகோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சுப்பிரமணியர் சன்னதியும், சதுர்முக சண்டிகேசுவரர் சன்னதியும் உள்ளன. சண்டிகேசுவரர் கிருத யுகத்தில் நான்கு முகங்களுடனும், திரேதா யுகத்தில் மூன்று முகங்களுடனும், துவாபர யுகத்தில் இரண்டு முகங்களுடனும், கலி யுகத்தில் ஒரு முகத்துடனும் காணப்படுவார். அந்நிலையில் கலி யுகத்தில் ஒரு முகத்துடன் இருக்க வேண்டியவர் இங்கு நான்கு முகங்களுடன் காணப்படுவது இக்கோயிலின் சிறப்பாகும். இவரை வழிபட்டால் நான்கு தலைமுறைப் பாவங்கள் தம்மை விட்டுச் செல்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். முதல் யுகத்தில் சிவன் பார்வதி திருமணத்தை திருமணஞ்சேரி என்னுமிடத்தில் விநாயகரே நடத்திவைத்ததாகக் கூறுவர். அவ்வாறு நடத்திவைக்கும்போது இங்கு விநாயகர் வந்துள்ளார். [1]
திருவிழாக்கள்
பிரதோஷம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[1]