விசய் சேசாத்திரி
விசய் சேசாத்திரி (Vijay Seshadri பிறப்பு 1956) என்பவர் ஓர் ஆங்கிலக் கவிஞர். 2014 ஆம் ஆண்டுக்குரிய புகழ் வாய்ந்த புலிட்சர் பரிசு[1] பெற்றவர். இவர் ஒரு கட்டுரையாளராகவும் இலக்கியத் திறனாய்வாளராகவும் கல்லூரி ஆசிரியராகவும் விளங்கி வருகிறார். அமெரிக்காவில் வாழும் ஓர் இந்தியர் ஆவார்.
பிறப்பும் படிப்பும்
இந்தியாவில் பெங்களூருவில் பிறந்த விசய் சேசாத்திரி தம் 5 ஆம் அகவையில் அமெரிக்காவுக்கு வந்தார். இவருடைய தந்தை இவரை ஒரு அறிவியல் மேதையாக உருவாக்க விரும்பினார். ஆனால் கவிதை இவரை ஆட்கொண்டது. இளைஞராக இருக்கும்போது கொலம்பசு, ஓகியோ ஊர்களில் வசித்தார். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் எம்.எப். ஏ. என்னும் உயர் கல்வி பயின்றார். உருது மொழியைப் பயில இந்தியாவின் லாகூருக்குச் சென்றார். மிர்சா காலிப் என்னும் கவிஞரின் இலக்கியப் படைப்புகளை ஆர்வத்துடன் பயின்றார்.
கவிதை நூல்கள்
- ஒயில்ட் கிங்டம் (Wild Kingdom) 1996
- தி லாங்க் மெடோ ( The Long Meadow) 2003
- 3 செக்சன்ஸ் (3 Sections) 2013
கவிதைச் சிறப்பு
ஆடன், யீட்ஸ், ராபர்ட் ப்ராஸ்ட், வால்ட் விட்மன் போன்ற ஆங்கிலக் கவிஞர்களை நேசிக்கும் இவர் பெற்ற மீனவத் தொழில் அனுபவங்களையும் சுமையுந்துகள் ஒட்டிய அனுபவங்களையும் இவருடைய கவிதைகளில் காணலாம். 2013 ஆம் ஆண்டில் வெளி வந்த 3 செக்சன்ஸ் என்னும் கவிதை நூலின் சிறப்பைப் பாராட்டிப் புலிட்சர் பரிசு 2014 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
பணி
பென்னிங்க்டன் கல்லூரியிலும் சாரா லாரன்சு கல்லூரியிலும் ஆசிரியராகப் பணி புரிகிறார். நியூயார்க்கர் போன்ற இலக்கிய இதழ்களில் இலக்கியக் கட்டுரைகளை எழுதி வருகிறார். நூல்களைத் திறனாய்வு செய்தும் எழுதி வருகிறார்.