வனுசி வால்ட்டர்சு
வனுசி வால்ட்டர்சு (Vanushi Walters, வனுஷி வோல்ட்டர்ஸ்; பிறப்பு: ஆகத்து 1981) நியூசிலாந்து வழக்கறிஞரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நியூசிலாந்து தொழிற்கட்சியின் உறுப்பினர் ஆவார். நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவான முதலாவது இலங்கையர் இவராவார்.
வனுசி வால்ட்டர்சு Vanushi Walters நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
படிமம்:Vanushi Walters.jpg | |
2020 இல் வனுசி | |
நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 17 அக்டோபர் 2020 | |
பிரதமர் | யசிந்தா ஆடர்ன் |
முன்னவர் | பவுலா பெனட் |
தொகுதி | மேல் துறைமுகம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | வனுசி சீதாஞ்சலி இராசநாயகம் ஆகத்து 1981 (அகவை 43) கொழும்பு, இலங்கை |
அரசியல் கட்சி | நியூசிலாந்து தொழிற் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | ரிஸ் வால்ட்டர்சு |
பிள்ளைகள் | 3 |
பெற்றோர் | ஜனா இராசநாயகம், பிரித்திவா மேத்தர் இராசநாயகம் |
இருப்பிடம் | தித்திராங்கி, ஓக்லாந்து |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆக்லாந்து பல்கலைக்கழகம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
தொழில் | வழக்கறிஞர் |
வாழ்க்கைக் குறிப்பு
வனுசி வால்ட்டர்சு (இராசநாயகம்) இலங்கைத் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த நியூசிலாந்தவர் ஆவார். இவர் ஆகத்து 1981 இல் ஜனா இராசநாயகம், பிரித்திவா மேத்தர் இராசநாயகம் ஆகியோருக்கு கொழும்பில் பிறந்தார்.[1][2] இவர் இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் கொழும்பு முதல்வருமான சேர் இரத்தினசோதி சரவணமுத்து, நேசம் சரவணமுத்து ஆகியோரின் மகள் சீதா இராசநாயகத்தின் பெயர்த்தி ஆவார்.[3][4][5] இவரது குடும்பம் இலங்கையில் இருந்து சாம்பியாவிற்கும், அங்கிருந்து இசுக்காட்லாந்துக்கும் குடிபெயர்ந்து, பின்னர் 1983 இல் நியூசிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறியது.[6] வனுசி ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டத்தில் இளநிலைப் பட்டமும், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[7][8]
பணி
வனுசி மனித உரிமைகளுக்கான வழக்கறிஞராக உள்ளார்.[4][9] பன்னாட்டு மன்னிப்பு அவையின் பன்னாட்டு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[2][4] தற்போது நியூசிலாந்து மனித உரிமைகள் ஆணையத்தின் மூத்த முகாமையாளராகப் பணியாற்றுகிறார்.[4][9]
அரசியலில்
2020 அக்டோபர் 17 இல் நடைபெற்ற நியூசிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் மேல் துறைமுகத் தொகுதியில் கட்சிப் பட்டியலில் 23-ஆவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு,[9] 14,142 வாக்குகள் பெற்று தேசியக் கட்சி வேட்பாளர் ஜேக் பெசாண்டைத் தோற்கடித்து,[10] முதற் தடவையாக நாடாளுமன்றம் சென்றார். இவர் இலங்கையில்-பிறந்த முதலாவது நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[11][12]
தேர்தல் வரலாறு
தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
2020 நியூசிலாந்து நாடாளுமன்றம் | மேல் துறைமுகம் | தொழிற்கட்சி | [10] | தெரிவு |
குடும்பம்
வனுசி ரிஸ் வால்ட்டர்சு என்பாரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு எலியட், லூக்கா, சாச்சா என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.[4][6][13] இவர் மேற்கு ஓக்லாந்து, தித்திராங்கி என்ற ஊரில் வசித்து வருகிறார்.[4][6]
மேற்கோள்கள்
- ↑ "Vanushi Sitanjali RAJANAYAGAM WALTERS". Cardiff, U.K.: Companies House. https://find-and-update.company-information.service.gov.uk/officers/plIdULfMpihuvGUvBd4STHs0bZQ/appointments. பார்த்த நாள்: 18 October 2020.
- ↑ 2.0 2.1 "SL born lawyer Vanushi elected New Zealand MP". Daily Mirror. Stuff (Colombo, Sri Lanka). 17 October 2020. http://www.dailymirror.lk/breaking_news/SL-born-lawyer-Vanushi-elected-New-Zealand-MP/108-198141. பார்த்த நாள்: 18 October 2020.
- ↑ "நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்". Num Tamil. 18 அக்டோபர் 2020. https://www.facebook.com/NumTamilRadio/videos/375439310480904. பார்த்த நாள்: 18 அக்டோபர் 2020.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "Introducing Vanushi Walters – First Sri Lankan-born Labour List member". LankaNZ (New Zealand). June 2020. https://www.srilankanz.co.nz/2020/06/introducing-vanushi-walters-first-sri.html. பார்த்த நாள்: 18 October 2020.
- ↑ "SL born Vanushi elected New Zealand MP". Asian Mirror. 18 October 2020 இம் மூலத்தில் இருந்து 21 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201021050920/https://asianmirror.lk/news/item/32292-sl-born-vanushi-elected-new-zealand-mp. பார்த்த நாள்: 18 October 2020.
- ↑ 6.0 6.1 6.2 "Spotlight on: Vanushi Walters". Office of Ethnic Communities. 10 June 2019. https://www.ethniccommunities.govt.nz/news/spotlight-on-vanushi-walters/. பார்த்த நாள்: 15 June 2020.
- ↑ "Our Director". Auckland, New Zealand: The Current Limited இம் மூலத்தில் இருந்து 15 ஜனவரி 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200115040427/http://thecurrent.nz/about-us/our-director/. பார்த்த நாள்: 18 October 2020.
- ↑ "Steering Committee Executive". Auckland, New Zealand: Action for Children and Youth Aotearoa இம் மூலத்தில் இருந்து 20 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201020180246/https://www.acya.org.nz/chair-and-deputy-chair.html. பார்த்த நாள்: 18 October 2020.
- ↑ 9.0 9.1 9.2 Coughlan, Thomas (15 June 2020). "Ayesha Verrall leads fresh-faced Labour party list for 2020". Stuff.co.nz. https://www.stuff.co.nz/national/300034942/ayesha-verrall-leads-freshfaced-labour-party-list-for-2020. பார்த்த நாள்: 15 June 2020.
- ↑ 10.0 10.1 "Election 2020: Human rights lawyer Vanushi Walters is new Upper Harbour MP". Stuff.co.nz. 18-10-2020. https://www.stuff.co.nz/national/politics/300131315/election-2020-human-rights-lawyer-vanushi-walters-is-new-upper-harbour-mp. பார்த்த நாள்: 18-10-2020.
- ↑ Collins, Simon (18 October 2020). "Election 2020: Forty newcomers include our first African, Latin American and Sri Lankan MPs". New Zealand Herald (Auckland, New Zealand). https://www.nzherald.co.nz/nz/election-2020-forty-newcomers-include-our-first-african-latin-american-and-sri-lankan-mps/WAU467WZ6Q2FSJ4MEUOE5BQDSQ/. பார்த்த நாள்: 18 October 2020.
- ↑ "First Sri Lanka born MP in New Zealand Parliament". Daily News. Stuff (Colombo, Sri Lanka). 18 October 2020. http://www.dailynews.lk/2020/10/18/local/231722/first-sri-lanka-born-mp-new-zealand-parliament. பார்த்த நாள்: 18 October 2020.
- ↑ "Meet Vanushi". Wellington, New Zealand: New Zealand Labour Party. https://www.labour.org.nz/vanushiwalters. பார்த்த நாள்: 18 October 2020.