வனராஜ கார்ஸன்
வனராஜ கார்ஸன் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | ஹோமி வாடியா நாரி கதியாலி |
தயாரிப்பு | வாடியா மூவிடோன், பம்பாய் |
கதை | ஜே. பி. எச். வாடியா |
இசை | யானை வைத்தியநாத ஐயர் ஆனந்த ராம ஐயர் |
நடிப்பு | ஜோன் காவாஸ் டி. கே. டி. சாரி எம். கே. வெங்கடபதி கே. ஆர். செல்லம் லீலா |
வெளியீடு | சூன் 4, 1938 |
ஓட்டம் | . |
நீளம் | 16353 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வனராஜ கார்சன் (Vanaraja Karsan) 1938 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். ஹோமி வாடியா, இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜோன் காவாஸ், கே. ஆர். செல்லம், டி. கே. டி. சாரி மற்றும் பலர் நடித்திருந்தனர். டார்சான் பாத்திரப் படைப்பில் வெளிவந்த முதல் தென்னிந்தியத் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படம் 1938 சூன் 4 இல் வெளிவந்து வணிகரீதியில் வெற்றிகரமாக ஓடியது. தமிழ்ப் பெண்ணான கே. ஆர். செல்லம் இத்திரைப்படத்தில் வன உடைகளில் நடித்திருந்தது அக்காலத்தில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.[1] அடுத்த ஆண்டில் இத்திரைப்படம் இந்தியிலும் வெளிவந்தது.
திரைக்கதை
டாக்டர் குணசேகரன் தன் தகப்பனாருடன் சண்டையிட்டுக் கொண்டு அமிர்தரச இரகசியத்தைக் கண்டறிவதற்காக வனராஜபுரக் காட்டிற்கு தன் மனைவி, மகனுடன் வருகிறான். பலநாள் முயற்சியின் பின்னர் அமிர்தரசத்தின் இரகசியத்தைக் கண்டுபிடித்து அதை ஒரு கடிதத்தில் எழுதி ஒரு தாயத்தில் வைத்து தன் குழந்தையின் கழுத்தில் போடுகிறான். பின்னாளில் ஒருநாள் சிங்கங்கள் வந்து குணசேகரனைக் கடித்துக் கொன்று விடுகின்றன. அவனுடைய மனைவியும் இறந்து விடுகிறாள். அவர்களுடன் இருந்த தாதா என்ற காட்டு மனிதன் குழந்தையை எடுத்துக் கொண்டு பலூனில் செல்கிறான். இடி, மின்னல் முதலியவற்றால் பலூன் வெடித்து தாதாவும், குழந்தையும், மோதி என்ற நாயும் காட்டின் வேறோர் இடத்தில் வீழ்கிறார்கள். 15 ஆண்டுகள் கழிந்தன.
குணசேகரனுடைய தகப்பனார் வீரசிங்கம் தன் மகனின் முடிவைத் தெரிந்து வருந்தி பேரனைக் கன்டுபிடிப்பதற்காக தனது வளர்ப்பு மகள் லீலாவுடன் (கே. ஆர். செல்லம்) காட்டிற்கு வருகிறார். வழியில் அமிர்தரச இரகசியத்தைத் தேடித்திரிந்த சபாபதி என்பவனைச் சந்தித்து, மூவருமாகக் காட்டினுள் செல்கிறார்கள். அவர்களைக் காட்டுமிரான்டிகள் தாக்கவே, கார்சன் வந்து அவர்களைக் காப்பாற்றுகிறான். சபாபதி கார்சனின் கழுத்தில் உள்ள தாயத்தைப் பார்த்து அதனை அடைவதற்காக கார்சனை சுட முயல்கிறான். ஆனால் மற்றவர்கள் அவனைத் தடுத்து விடுகிறார்கள். மறுநாள், சபாபதி தாதாவை சுட்டுக் காயப்படுத்துகிறான். கார்சன் லீலாவைத் தூக்கிச் செல்கிறான். லீலா தாதாவின் காயத்தில் இருந்து குண்டை எடுத்து அவனைக் குணப்படுத்துகிறாள். பின்னர் கார்சனும் லீலாவும் காட்டில் மகிழ்ச்சியாகக் காலத்தைக் கழிக்கிறார்கள். வீரசிங்கம், லீலாவைப் பிரிந்து வருந்தியிருக்கும் போது, காட்டுமிராண்டிகள் வந்து வீரசிங்கம், சபாபதி ஆகியோரைப் பிடித்துச் செல்கிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பது கதை.[1][2]
தயாரிப்பு
வனராஜா கார்ஸன் வாடியா மூவிடோன் மற்றும் மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் இடையேயான ஒரு கூட்டு முயற்சியாக தயாரிக்கப்பட்டது.[3] ஹோமி வாடியா, நாரி காடியாலி ஆகியோர் இணைந்து இயக்கினர். இது டார்சன் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் தமிழ் திரைப்படமாகும்.[4] ஜான் காவாஸ் கார்ஸன் பாத்திரத்தில் நடித்தார். கே. ஆர். செல்லம் லீலாவாகவும், டி. கே. டி. சாரி வீரசிங்கமாகவும் (கர்சனின் தந்தைவழி தாத்தா), சபாபதியாக எம். கே. வெங்கடபதியாகவும் நடித்தனர்.[2] கதையை ஜே. பி. எச். வாடியாவும், திரைக்கதையை எஸ். ஆர். கிருஷ்ணசாமி ஐயங்காரும்ம் எழுதினர். ஒளிப்பதிவை ருஸ்தம் மேபரும் பாலி மிஸ்ட்ரியும் கையாண்டனர்.[4] வனராஜா கார்ஸன் முதல் தென்னிந்திய "காடு" தொடர்பான திரைப்படம்,[5] மேலும் காடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படமுமாகும்.[6] இப்படம் இந்தியிலும் ஜங்கிள் கிங் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யபட்டது.[7][4]
இசை
இப்படத்திற்கு "யானை" அனந்தராம ஐயர் மற்றும் வைத்தியநாத ஐயர் ஆகியோர் இசையமைத்தனர்.
வெளியீடும் வரவேற்பும்
வனராஜ கார்ஸன் 4 ஜூன் 1938 இல் வெளியானது.[4] மேலும் ஜங்கிள் கிங் அடுத்த ஆண்டு வெளியிடப்பட்டது.[7] இப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்றது.[5] இப்படத்தின் நாயகி செல்லம் அதிக கவர்ச்சியாக நடித்தது பரபரப்பை உண்டாக்கியது.[8][9]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 பிரதீப் மாதவன் (15 திசம்பர் 2017). "குடும்பத்தைக் காப்பாற்ற திரை நடிப்பு! - கே.ஆர் செல்லம்". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/cinema/cinema-others/article21669579.ece. பார்த்த நாள்: 15 திசம்பர் 2017.
- ↑ 2.0 2.1 G. Dhananjayan (2011). The Best of Tamil Cinema, 1931 to 2010: 1931–1976. Galatta Media. பக். 32–33. இணையக் கணினி நூலக மையம்:733724281.
- ↑ Pillai 2015, ப. 89.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "1938 – வனராஜ கார்ஸன் – வாடியா மூவிடோன் – எம்.யு.எ.சி. ஜங்கிள் கிங் (இ)" (in Tamil) இம் மூலத்தில் இருந்து 3 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170903085532/http://www.lakshmansruthi.com/cineprofiles/1938-cinedetails29.asp.
- ↑ 5.0 5.1 Vijaykumar, B. (24 October 2010). "Vanamala-1951" இம் மூலத்தில் இருந்து 3 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170903102536/http://www.thehindu.com/features/metroplus/Vanamala-1951/article15790869.ece.
- ↑ நெல்பா (26 December 2011). "4 வருடம் ஓடிய படம்" (in ta). Kungumam இம் மூலத்தில் இருந்து 14 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180714052310/http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=1102&id1=39&issue=20111226.
- ↑ 7.0 7.1 Pillai 2015, ப. 33.
- ↑ Randor Guy. "From Silents to Sivaji Ganesan!" இம் மூலத்தில் இருந்து 14 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180714081856/http://www.appusami.com/HTML/htmlv125/main/RANDORGUY.asp.
- ↑ "When Tamil Actress K.R. Chellam Had to Apologise For This Scene in Vanaraja Karzan". 1 July 2022 இம் மூலத்தில் இருந்து 8 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220708145920/https://www.news18.com/news/movies/when-tamil-actress-k-r-chellam-had-to-apologise-for-this-scene-in-vanaraja-karzan-5474743.html.