வண்டு
வண்டு புதைப்படிவ காலம்: Late கார்பனிபெரசுக் காலம்–Holocene | |
---|---|
Clockwise from top left: பெண் தங்க மான் வண்டு (Lamprima aurata), காண்டாமிருக வண்டு (Megasoma sp.), ஒருவகை நீள்மூஞ்சி வண்டு (Rhinotia hemistictus), cowboy beetle (Chondropyga dorsalis), மற்றும் ஒரு வகை Amblytelus. | |
உயிரியல் வகைப்பாடு e | |
Unrecognized taxon (fix): | கோலியாப்டீரா |
Suborders | |
வண்டு என்பது ஆறு கால்கள் கொண்ட ஒரு பறக்கும் பூச்சியினம். இவற்றிற்கு, முன் இறக்கைகள் இரண்டும் பின் இறக்கைகள் இரண்டும் ஆக நான்கு இறக்கைகள் உண்டு. முன்னால் தலைப்பகுதியில் இரண்டு உணர்விழைகள் உண்டு. வண்டுகளின் முன் இறக்கைகள் கெட்டியானவை, பின் இறக்கைகள்தான் பறக்கப் பயன்படும் மென்மையான படலத்தால் ஆனவை. முன் இறக்கைகள் வண்டு பறக்காமல் இருக்கும் பொழுது பறக்கப் பயன்படும் மெல்லிய பின் இறக்கைகளை மூடிக் காக்கும் உறை போல பயன்படுகின்றது. இந்த முன் இறக்கைகளுக்கு வன்சிறகு அல்லது காப்புச்சிறகு (elytra) என்று பெயர். இவை வளைந்து குமிழி போல இருக்கும். இப்படிக் வளைந்து குமிழி போல் இருப்பதால் இவற்றிற்கு வண்டு என்று பெயர் (வண்டு என்றால் வளைந்தது). உலகில் ஏறத்தாழ 350,000 வண்டினங்கள் உள்ளன. பூச்சி இனங்களிலேயே சற்றேறக்குறைய 40% வண்டுகள்தான் என உயிரியல் அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். அவ்வப்பொழுது புதுப் புது வண்டினங்ளை அறிஞர்கள் கண்டுபிடிக்கிறார்கள். இன்றுவரை அறிவியல் முறைப்படி விளக்கப்பட்டவையும், இன்னும் விளக்கப்படாமலோ, கண்டறியப்படாமலோ உள்ள வண்டினங்களையும் சேர்த்து 5 முதல் 8 மில்லியன் வரை இருக்கும் என கருதுகின்றார்கள். வண்டினங்களின் அறிவியல் பெயர் கோலியாப்டெரா (Coleoptera) என்பதாகும். கோலியாப்டெரா என்னும் சொல் இரண்டு கிரேக்க மொழிச் சொற்களால் சேர்ந்த கூட்டுச்சொல். இதில் கோலியாஸ் (koleos) என்றால் காப்புறை என்று பொருள். ப்டெரா (ptera) என்றால் இறக்கைகள் என்று பொருள். எனவே வண்டுகளின் அறிவியல் பெயரானது காப்புறை இறகிகள் என்பதாகும்.
வண்டுகள் உலகில் ஏறத்தாழ எல்லா இயற்கைச் சூழல்களிலும் வாழ்கின்றன. பனி மிகுந்த பகுதிகளாகிய வட-தென் முனைப் பகுதிகளைத்தவிரவும், கடல்களைத் தவிரவும் மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. இவை நிலத்தடியிலும், நீரடியிலும் (கடலைத் தவிர) வாழ்கின்றன. வண்டுகள் மரஞ்செடிகளின் பகுதிகளையும் காளான்களின் உறுப்புகளையும் உணவாக உண்ணுகின்றன. இதனால் பயிர்களுக்கும், பருத்திச்செடி, உருளைக்கிழங்குச் செடி, தென்னை மரம் முதலிய பல தாவரங்களுக்கும் பெரும் சேதம் விளைவிக்கின்றன. ஆனால் எல்லா வண்டுகளும் கேடு விளைவிப்பதில்லை.
வண்டுகளின் வகைகள்
வண்டுகளில் சிறிதும் பெரிதுமாய் பல பருமன் உள்ளவை உண்டு. பல நிறங்கள் கொண்டவை உண்டு. நச்சுத்தன்மை உள்ள வண்டுகளும், பறக்காத வண்டுகளும் உண்டு. ஒளிரும் வண்டுகள் உண்டு. பெருவலு கொண்ட வண்டு உண்டு. உலகிலேயே யாவற்றினும் மிகப் பெரிய வண்டாகிய இசுக்காரபேயிடே (Scarabaeidae) குடும்பத்தைச் சேர்ந்த அரக்க வண்டு 10-17 செ.மீ நீளம் கொண்டது. வளர்ந்த மனிதனின் விரல்கள் மூடிய கைமுட்டளவு இருக்கும். இவ் அரக்க வண்டின் அறிவியல் பெயர் கோலியாத்தசு சைகாண்ட்டியசு (Goliathus giganteus) என்பதாகும். உலகிலேயே யாவற்றினும் மிகச் சிறிய வண்டு தில்லிடே (Ptiliidae) குடும்பத்தைச் சேர்ந்த நானோசெல்லா ஃவங்கை (Nanosella fungi) என்னும் வண்டாகும். இவ்வண்டு 0.25 மில்லி மீட்டர் அளவே கொண்டது. ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது வண்டினத்தில் உள்ள மிகப்பெரிய வண்டாகிய அரக்க வண்டு, மிகக்குட்டி வண்டாகிய நானொசெல்லா ஃவங்கை வண்டைவிட 16 மில்லியன் மடங்கு பருமன் (கன அளவு) பெரியது[2]. உலகில் உள்ள உயிரினங்கள் யாவற்றினும் மிகவும் வலிமை (எடையை இழுக்கும் திறன்) கொண்ட உயிரினம் வண்டுதான். தன் எடையைப்போல 850 மடங்கு எடையை தூக்க அல்லது இழுத்துச் செல்ல வல்லது [3][4]. ஒப்பிட்டுப் பார்க்க ஒரு யானையோ, மனிதனோ தன் எடையை ஒத்த 850 யானையையோ, மனிதனையோ தூக்குவதென்றால் எப்படிப்பட்ட வலிமை என்று உணரலாம். மூக்குக்கொம்பன் (காண்டாமிருகம்) போன்ற ஒரு ஒற்றைக் கொம்புள்ள இந்த வலிமையான வண்டுக்குக் முக்குக்கொம்ப வண்டு (அறிவியல் பெயர் டைனாசிட்டசு எர்க்குலீசு (Dynastes hercules) என்பதாகும்)
மேற்கோள்கள்
- ↑ Bouchard, P.; Bousquet, Y.; Davies, A.; Alonso-Zarazaga, M.; Lawrence, J.; Lyal, C.; Newton, A.; Reid, C. et al. (2011). "Family-group names in Coleoptera (Insecta)". ZooKeys 88 (88): 1–972. doi:10.3897/zookeys.88.807. பப்மெட்:21594053.
- ↑ http://www.cals.ncsu.edu/course/ent425/compendium/coleop~1.html வண்டினங்களில் சிறியதும் பெரியதும்
- ↑ Kram, R. (1996) Inexpensive load carrying by rhinocerous beetles. J. Exp. Biol. 199, 609-612.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-06-22. பார்க்கப்பட்ட நாள் 2007-06-08.