ரோகிணி (நடிகை)
ரோகிணி | |
---|---|
பிறப்பு | 15 திசம்பர் 1969 அனகாபள்ளி விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை, தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1976–தற்போது வரை |
பெற்றோர் | ராவு நாயுடு, சரஸ்வதி |
வாழ்க்கைத் துணை | ரகுவரன் (1996-2004) மணமுறிவு |
பிள்ளைகள் | ரிஷிவரன் (பி. 1998) |
ரோகிணி (Rohini) (பிறப்பு: திசம்பர் 15, 1969) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1] இவர் குறிப்பிடத்தக்க தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 1976-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தற்போது தமிழ்த் திரையுலகக் கதாநாயகிகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்து வருகிறார். இவர் ஜோதிகா, தபூ, ரஞ்சிதா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலருக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார். பின்பு 2017ஆம் ஆண்டு வனிதா விருது பெற்றார்.[2]
இளமைக்காலம்
ரோகிணி திசம்பர் 15, 1969 ஆம் ஆண்டு ராவு நாயுடு, சரஸ்வதி ஆகியோருக்கு பிறந்தார். இவர் நடிகர் ரகுவரனை 1996ஆம் ஆண்டு மணந்தார். ரகுவரன் பல தமிழ்த் திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவர்களுக்கு ரிஷிவரன் என்ற ஒரு மகன் உள்ளார்.[3]
மணமுறிவு
ரகுவரன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை ரோகிணியும் இவரை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது. 2004ஆம் ஆண்டில் சட்டப்படி இருவரும் மணமுறிவு பெற்றுக்கொண்டனர். ரகுவரன் அவரது போதை பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது. பின்பு மார்ச்சு 19, 2008ஆம் ஆண்டு ரகுவரன் உடல்நலக் குறைவால் காலமானார்.[4]