ரெங்கநாதன் சீனிவாசன்
ரெங்கநாதன் சீனிவாசன் (Renganaden Seeneevassen, 11 ஏப்ரல் 1910 – 5 சூன் 1958)[1] மொரிசியசு தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும் ஆவார்.[2][3]
வாழ்க்கைச் சுருக்கம்
ரெங்கநாதன் 1910 ஆம் ஆண்டில் போர்ட் லூயிஸ் நகரில் பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாட்டில் பிறந்து மொரீசியசில் குடியேறியவர். தாயார் மொரிசியசுத் தமிழர். தனது ஆரம்பப் படிப்பை தலைநகரில் உள்ள இங்கிலாந்து திருச்சபையின் ஆதரவில் இயங்கி வந்த பாடசாலை, மத்திய ஆண்கள் அரசுப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று, பின்னர் இடைநிலைக் கல்வியை ரோயல் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[2]
1935 இல் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் சேர்ந்து சட்டம் பயின்றார். பள்ளியில் படிக்கும் போது இவருக்கு பிரபலமான அரசியல்வாதிகளின் தொடர்பு ஏற்பட்டது. 1940 ஆம் ஆண்டில் இவர் சட்டத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். அதே ஆண்டு டிசம்பரில் மொரிசியசு திரும்பி உள்ளூரில் வழக்கறிஞராகப் பணியாற்ற ஆரம்பித்தார். போர்ட் லூயிசு மாநகரசபையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
அரசியலில்
1944 ஆம் ஆண்டில் ஆளுனர் சேர் டொனால்டு மெக்கன்சியினால் சட்டசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மொரிசியசின் 1948 ஆம் ஆண்டு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பங்களிப்பு செய்தார். 1948 சட்டசபைத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1953 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் மொரிசியசு அரசு சார்பில் பங்கெடுத்தார்,[2] 1955 இல் லண்டனில் நடைபெற்ற மொரிசியசு தொழிற் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டார்.
1957 சூலையில் மொரிசியசின் முதலாவது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்டார்.[2]
மறைவு
ரெங்கநாதன் சீனிவாசன் 1958 ஆம் ஆண்டில் போர்ட் லூயிசில் காலமானார். மொரிசியசு அரசு இவரது படம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத் தாளை வெளியிட்டது. ரெங்கநாதன் சீனிவாசனின் பெயரில் அரசு உயர்நிலைப் பள்ளியும் போர்ட் லூயிசு நகரில் இயங்குகிறது.[2] இவரது நூற்றாண்டு நினைவாக மொரிசியசு அரசு முதல்நாள் அஞ்சலுறையையும் வெளியிட்டது.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Birth Centenary of Renganaden Seeneevassen (1910-2010)". 22 நவம்பர் 2010. http://mauritianphilatelicblog.blogspot.com.au/2010/11/birth-centenary-of-renganaden.html. பார்த்த நாள்: 30 மே 2014.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Life of Late Renganaden Seeneevassen". ரெங்கநாதன் சீனிவாசன் அரசு உயர்நிலைப் பள்ளி. http://rssss.edu.gov.mu/English/About%20Us/Pages/Our-History.aspx. பார்த்த நாள்: 30 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "RENGANADEN SEENEEVASSEN: An Architect of the Mauritian Nation" இம் மூலத்தில் இருந்து 2015-07-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150730040402/http://www.lemauricien.com/article/renganaden-seeneevassen-architect-mauritian-nation. பார்த்த நாள்: 30 மே 2014.