ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அர்த்த நாரீசுவரர் கோயில்
படிமம்:Arthanareswarar temple rishivanthiyam அர்த்தநாரீஸ்வரர் கோவில் ரிசிவந்தியம்.jpg
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கள்ளக்குறிச்சி
அமைவிடம்:ரிஷிவந்தியம், சங்கராபுரம் வட்டம்
சட்டமன்றத் தொகுதி:ரிஷிவந்தியம்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:அர்த்த நாரீசுவரர்
தாயார்:முத்தாம்பிகை
சிறப்புத் திருவிழாக்கள்:ஆனியில் 10 நாள் தேர்த்திருவிழா, கார்த்திகை மூன்றாவது திங்களில் 108 சங்கு அபிடேகம்

ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்க்யோல் தலமரமாக புன்னை உள்ளது.

வரலாறு

இந்தக் கோயில் தோற்றம் குறித்து வழங்கப்படும் தகவல்; விஜயநகரப் பேரரசு காலத்தில் வேளாண்மை செய்வதற்காக வன்னிய மரபினர் காட்டை அழிக்கும்போது, மண்வெட்டியால் வெட்டுபட்டு ஒரு சுயம்புலிங்கம் கிடைத்தது. இந்த லிங்கமே அர்த்தநாரீசுவரர் கோயில் மூலவராவார். தற்போதும்கூட இந்த லிங்கத்தில் வெட்டுத் தழும்பைக் காண இயலும்.

தொன்மம்

இக்கோயில் குறித்து நிலவும் தொன்மம்: இந்தல இறைவனுக்கு நாள்தோறும் இந்திரன் 108 குடம் பாலை அபிசேகம் செய்துவந்தான். என்றாலும் பார்வதி அம்மையை வழிபடாமல் வந்தான். இதனால் கோபமுற்ற பார்வதி இந்திரனுக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்தாள். அதன்படி ஒருநாள் இந்திரன் பாலபிசேகம் செய்யும் குடங்களை மறைத்துவைத்தாள். அபிசேகம் செய்யவந்த இந்திரன் குடங்களைக் காணாது தவித்தான். சிவனுக்கு அபிசேகம் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று மனம் கலங்கினான். இதனால் கோயில் பலிபீடத்தில் தன் தலையை முட்டிக்கொண்டு இறந்நுவிட முடிவு செய்து அவ்வாறே முட்டிக் கொண்டான். இதைக்கண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனைத் தடுத்தார். மேலும் அம்மனுக்கு அபிசேகம் செய்யுமாறு கூறினார். மேலும் இத்தல சுயம்பு லிங்கத்துக்கு தேன் அபிசேகம் செய்யும்போது தான் உமையொருபாகராக எழுந்தருள்வதாக அறிவிதார். பிற வழிபாடுகளின்போது சிவனாகவே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.[1] இதன்படி இக்கோயில் கருவறையிலுள்ள சிவலிங்கத்தின் மீது தேனை ஊற்றினால், இறைவன் அதில் உமையொருபாகராய் வீற்றிருப்பது தெரியும்.[2]

கோயில் கட்டடக்கலை

இக்கோயில் திருமலை நாயக்கரால் புதுப்பித்துக் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதற்கு வரலாற்று சான்றாக இந்தக் கோயிலில் திருமலை நாயக்கரின் உருவச்சிலை உள்ளது. கோயிலின் முதல் பெருவாயிலின் வலப்புறத்தில் சிற்ப வேலைப்பாடு மிக்க மண்டபம் உள்ளது. தட்டினால் பண் இசைக்கும் தூண்கள் இங்கே உள்ளன. இந்தக் கோயிலின் சிற்ப வேலைப்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு உண்டு; அஃதாவது, இங்கே உள்ள ஒரு யாளிச் சிலையின் திறந்த வாய்க்குள் ஒரு கல் உருண்டை உள்ளது; பந்து போன்ற அவ் வுருண்டையை நம் கைவிரலால் எப் பக்கம் வேண்டுமானாலும் உருட்டலாம்; ஆனால், வெளியில் எடுக்க முடியாது; இது சிறந்த சிற்ப வேலைப்பாடாகும்.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் 10 நாள் விழாவின் முடிவில் தேர்த்திருவிழா நடக்கிறது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூன்றாவது திங்களில் 108 சங்கு அபிடேகம் செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. அருள்மிகு அர்த்த நாரீசுவரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  2. 2.0 2.1 புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன் தமிழாய்வகம். p. 288. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020. {{cite web}}: line feed character in |publisher= at position 11 (help)