ரா. கணபதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரா. கணபதி
பிறப்பு(1935-09-01)1 செப்டம்பர் 1935
இறப்பு20 பெப்ரவரி 2012(2012-02-20) (அகவை 76)
தேசியம்இந்தியன்

ரா. கணபதி ( Ra Ganapati) (1 செப்டம்பர் 1935 – 20 பெப்ரவரி 2012) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆன்மிக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார்.

குடும்பம்

ரா. கணபதியின் தந்தையாருக்கு சொந்த ஊர் சிதம்பரம். பெயர் சி. வி. இராமச்சந்திர ஐயர். இவர் கணிதத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர், வேத விஞ்ஞானி, மற்றும் வர்த்தக வரித்துறை அதிகாரியாக பிரித்தானிய மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசாங்கங்களில் பணிபுரிந்தவர். தாய் ஜெயலட்சுமி கடலூரைச் சேர்ந்த வக்கீல் குடும்பத்திலிருந்து வந்தவர். கணபதியின் சகோதரி திரிபுரசுந்தரி சுப்பிரமணியன் ஆவார்.

கல்வி & தொழில்

கணபதி, சென்னையிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் பிரசிடென்சி கல்லூரியிலும் படித்தார். இவர் ஆங்கில இலக்கியத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். மெயில் பத்திரிகையில் செய்தியாளராகப் பணியாற்றி இருக்கிறார். கல்கி ஆசிரியக் குழுவில் பணியாற்றியவர். இசை அரசியான எம். எஸ். சுப்புலட்சுமியின் பரிந்துரைக் கடிதம் இவரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. "கல்கி" இதழின் ஆசிரியர், சதாசிவம், இக் கடிதத்தைப் படித்து, கணபதியை "கல்கி" குழுவில் இணைத்துக் கொண்டார். மேலும், இராஜாஜியின் "ஸ்வராஜ்ய" இதழில் தலையங்கம் எழுதியுள்ளார். "கன்யா" என்கிற புனைபெயரில் கல்கி இதழுக்கு, தலையங்கம் மற்றும் இசை விமர்சனங்கள் எழுதியுள்ளார். இவர், சமயம், கோவில்கள் மற்றும் புராணத் தொடர்களை எழுதியுள்ளார். இவற்றில் காஞ்சி மகா சுவாமிகள், அரியக்குடி இராமானுஜ ஐயங்காருக்கு விளக்கவுரை எழுதிய முத்துசுவாமி தீக்‌ஷிதரின் "ஸ்ரீ சுப்ரமண்ய நமஸ்தே", காற்றினிலே வரும் கீதம், ஜய ஜய சங்கர போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பணிகள்

இவரது முதல் பெரிய தொடர் "ஜய ஜய சங்கர" "கல்கி" இதழில் 1962இல் வெளிவந்தது.[1] இத் தொடரில் வரும் ஆதி சங்கரர் மற்றும் அவரின் தத்துவமான அத்வைத வேதாந்தம் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு விடை தேடி மக்கள் கணபதியைக் காண வருவார்கள். அச்சமயத்தில் இளைஞரான இவர் எவ்வாறு கடினமான தத்துவங்களை மக்களுக்கு புரியும் வகையில் எழுதுகிறார் என்று வியந்து போவார்கள். "கல்கி" இதழில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த பிறகு, மற்ற துறவிகளான இராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், சாரதா தேவி மற்றும் மீரா போன்றோரின் வாழ்க்கை வரலாற்றினை எழுதினார்.

25 ஆண்டுகளுக்குப் பின்னர், 'கல்கி' குழுமத்திலிருந்து வெளியேறி பல நூல்களை எழுதியுள்ளார். இவர் காஞ்சி சங்கர மடத்தின் பக்தராகத் திகழ்ந்தவர். காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவருடைய கருத்துகள் மற்றும் உபந்நியாசங்களைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற தலைப்பில் நூல் எழுதியுள்ளார். இது 7 பாகங்களாக வெளிவந்தது. மேலும் 'சத்ய சாய் பாபா', 'சுவாமி விவேகானந்தர்', 'ரமண மகரிஷி' மற்றும் 'யோகி ராம்சுரத்குமார்' போன்ற துறவிகள் குறித்து நூல்கள் எழுதியுள்ளார்.[2]

எழுதிய நூல்கள்

  • தெய்வத்தின் குரல் (7 பாகங்கள்)
  • ஜய ஜய சங்கர
  • காமகோடி ராமகோடி
  • காமாக்ஷி கடாக்ஷி
  • அம்மா (தூய அன்னை ஸ்ரீ சாரதாமணி தேவியாரின் நெஞ்சையள்ளும் சரிதையை வெகு விரிவாக அழகுற வருணிப்பது)
  • காற்றினிலே வரும் கீதம் (பக்த மீராவின் வாழ்க்கை வரலாறு)
  • அறிவுக்கனலே அருட்புனலே (ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சரிதத்தையும் ஸ்ரீவிவேகானந்தரின் சரிதத்தையும் ஒருங்கே இணைத்துக் கூறுவது)
  • நவராத்திரி நாயகி (ஸ்ரீதுர்காதேவியின் சரிதை - மகிமைகளை விரிவாக விளக்குவது)
  • அன்பு வேணுமா அன்பு
  • சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு
  • ஸ்ரீமாதா (ஸ்ரீலலிதா தேவியின் சரிதை - மகிமைகளை வருணிப்பது)
  • "ஜய ஹனுமான்!" (ஸ்ரீஆஞ்சேநேய சுவாமியின் அருமை பெருமை கூறுவது)
  • இறைவன் அவதாரம் இருவத்தி நான்கு
  • ரமண மணம் (இரு பாகங்கள்)
  • மஹா பெரியவாள் விருந்து
  • காஞ்சி முனிவர் - நினைவுக்கதம்பம்
  • கருணைக் காஞ்சி கனகதாரை
  • மைத்ரீம் பஜத!
  • சங்கரர் என்ற சங்கீதம்
  • சொல்லின் செல்வர் ஸ்ரீகாஞ்சி முனிவர்
  • கருணைக் கடலில் சில அலைகள்
  • ஸ்ரீகாஞ்சி முனிவர்
  • தரிசனம்
  • ஸ்வாமி (பகுதி 1 - 2)
  • லீலா நாடக சாயி
  • தீராத விளையாட்டு சாயி
  • அன்பு அறுபது
  • அறிவு அறுபது
  • அற்புதம் அறுபது
  • ஸ்ரீசாயி 108 (சக ஆசிரியர்)
  • Baba : Satya Sai (Part 1 - 2) ("சுவாமி"யின் ஆங்கிலத் தழுவல்)
  • Avatar, Verily

இறப்பு

ரா. கணபதி 2012 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி நாளான பெப்ரவரி 20 அன்று காலமானார்.

மேலும் பார்க்க

காஞ்சி சங்கர மடம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரா._கணபதி&oldid=27546" இருந்து மீள்விக்கப்பட்டது