ராம் தங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராம் தங்கம்
Ram Thangam
எழுத்தாளர் ராம் தங்கம்
பிறப்புதமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துறைகவிதை, சிறுகதை, நாவல்
பணியிடங்கள்ஆனந்த விகடன், தினகரன்
விருதுகள்சாகித்திய அகாதெமியின் யுவபுரசுகார் விருது, அசோகமித்திரன் விருது, படைப்பிலக்கிய விருது, சௌமா இலக்கிய விருது, கவிஞர் மீரா விருது

ராம் தங்கம் (Ram Thangam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளராவார். தொடர் வாசிப்பின் காரணமாக எழுதத் தொடங்கிய இவர், தினகரன், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். முழுநேர எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் தனது எழுத்துப் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். தன்னுடைய நிலம் சார்ந்த மனிதர்களுடைய வாழ்க்கையை எழுதுவது இவருடைய பலமாகும். கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வியலை, வரலாறை, தொன்மத்தை எழுதிக் கொண்டிருக்கும் ராம் தங்கத்துக்கு திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் இளம் எழுத்தாளர் விருதான யுவ புரசுகார் விருது வழங்கப்பட்டது.[1] [2]

வாழ்க்கைக் குறிப்பு

1988 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[3] த. ராமு என்பது இவருடைய இயற்பெயராகும். விகடன் இதழில் வேலை செய்த போது த.ராம் என்கிற பெயரில் எழுதினார். பள்ளிக்கல்வியை சமாதானபுரம் அரசு தொடக்கப் பள்ளியிலும், அகசுதீசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் கற்றார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் இளங்கலை வரலாறு பட்டமும், ஊடகக் கலையில் பட்டயமும் பெற்றுள்ளார். 2016-17 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நண்பர்களுடன் இணைந்து திரிவேணி இலக்கியச் சங்கமம் என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் பல இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தும் வருகிறார்.[4]

இலக்கியச் செயற்பாடுகள்

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவரது முதல் புத்தகமான காந்திராமன் வெளிவந்தது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் நாகர்கோவிலில் இந்நூலை வெளியிட்டார். வாழ்க்கை வரலாறான இந்தப் புத்தகத்திற்குச் சிறந்த வரலாற்றுப் புத்தகத்திற்கான தெற்கு எழுத்தாளர் இயக்க விருது கிடைத்தது. கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு மற்றும் அந்தப் பகுதியில் வாழ்ந்த தியாகிகள், எழுத்தாளர்கள் பற்றி பயணம் சார்ந்த கதை சொல்லல் முறையில் எழுதப்பட்ட ஊர்சுற்றிப் பறவை 2015 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வெளிவந்தது.[5] காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் நாகர்கோவிலில் இந்நூலை வெளியிட்டார். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு தொடர்பான நூலாக இவர் எழுதிய மீனவ வீரனுக்கு ஒரு கோவில் என்ற நூலை 2016 ஆம் ஆண்டு சனவரி மாதம் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குருசு வெளியிட்டார்.

2017 ஆம் ஆண்டு ஆனந்தவிகடனில் இவரது திருக்கார்த்தியல் என்கிற முதல் சிறுகதை வெளிவந்தது. தமிழ் இலக்கியப் பரப்பில் பரவலான கவனத்தைப் பெற்ற இந்தச் சிறுகதைக்கு அசோகமித்திரன் விருது கிடைத்தது.

2018 ஆம் ஆண்டில் திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பை வம்சி வெளியிட்டது. தமிழ் இலக்கியப் பரப்பில் ராம் தங்கத்துக்கு தனித்துவ அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த திருக்கார்த்தியல் தொகுப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ‘சுஜாதா விருது, வடசென்னை தமிழ் இலக்கிய விருது, சௌமா இலக்கிய விருது, படைப்பு இலக்கிய விருது, அன்றில் இலக்கிய விருது, 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவ புரசுகார் விருது எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றது.

2019 ஆம் ஆண்டில் தமிழின் மூத்த எழுத்தாளரான பொன்னீலனின் வாழ்நாள் இலக்கிய செயல்பாட்டையும் அவரின் படைப்புலகம் குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளை தொகுத்து பொன்னீலன்-80 என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

2020 ஆம் ஆண்டு சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்டம் நடத்திய குறுநாவல் போட்டியில் ராம் தங்கம் எழுதிய ராஜவனம் என்ற குறுநாவலுக்கு பரிசு கிடைத்தது. [6]படைப்பு இலக்கிய விருதும், விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கவிஞர் மீரா விருதும் இந்நூலுக்காக வழங்கப்பட்டன.

2021 ஆம் ஆண்டு இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான புலிக்குத்தி வம்சி வெளியீடாக வெளிவந்தது.[7] 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சௌமா இலக்கிய விருதையும், படைப்பு இலக்கிய விருதையும் இந்நூல் பெற்றது.

தான் சென்று வந்த பயண அனுபவங்களை மையமாக வைத்து கடவுளின் தேசத்தில் என்ற பெயரில் ஒரு புத்தகமாக கொண்டு வந்துள்ளார்.[8] படைப்பு இலக்கியக் குழுமத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த கட்டுரை நூலுக்கான விருது இந்நூலுக்கு கிடைத்தது.

சூரியனை எட்ட ஏழு படிகள், காட்டிலே ஆனந்தம், ஒரு சுண்டெலியின் கதை ஆகிய சிறுவர் கதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு ராம் தங்கம் மொழி பெயர்த்துள்ளார்.

ராம் தங்கம் எழுதிய குமரிமாவட்டம் சார்ந்த வரலாற்றுக் கட்டுரைகள் ‘சிதறால்’ என்ற பெயரில் அமேசான் கிண்டிலில் மின்நூலாக வெளிவந்துள்ளது.[9]

விருதுகள்

  • தெற்கு எழுத்தாளர் இயக்க விருது
  • சுஜாதா விருது
  • படைப்பு இலக்கிய விருது.
  • அசோகமித்திரன் விருது
  • வடசென்னை தமிழ்ச்சங்கம் இலக்கிய விருது
  • சௌமா இலக்கிய விருது
  • அன்றில் வளர் தமிழ் சிறுகதையாளர் விருது
  • கவிஞர் மீரா விருது
  • சாகித்திய அகாதெமியின் யுவபுரசுகார் விருது

நூல்கள்

நாவல்

1. ராஜவனம் (குறுநாவல்)

சிறுகதைத் தொகுப்புகள்

1. திருக்கார்த்தியல்
2. புலிக்குத்தி

கட்டுரைத்தொகுப்புகள்

1. சிதறால்
2. பொன்னீலன் 80

வரலாற்று நூல்கள்

1. காந்திராமன்
2. ஊர்சுற்றிப் பறவை
3. மீனவ வீரனுக்கு ஒரு கோவில்

பயண நூல்கள்

1. கடவுளின் தேசத்தில் – பாகம் 1
2. கடவுளின் தேசத்தில் – பாகம் 2

மொழி பெயர்ப்பு நூல்கள்

1. சூரியனை எட்ட ஏழு படிகள்
2. காட்டிலே ஆனந்தம்

மேற்கோள்கள்

  1. "எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவபுரசுகார் விருது". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2023/jun/23/yuva-puraskar-award-for-writer-ram-thangam-4026360.html. பார்த்த நாள்: 25 December 2023. 
  2. காமதேனு (2023-06-23), "எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமி; ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு", காமதேனு, retrieved 2023-12-25
  3. "ராம் தங்கம்", www.goodreads.com, retrieved 2023-12-25
  4. "பொன்னீலன்: மூன்று முகம் கொண்ட எழுத்தாளர்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/nov/24/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-3288828.html. பார்த்த நாள்: 25 December 2023. 
  5. "எனக்கும் ஊர் பத்தி எழுத ஆசை வந்துருச்சு! - `ஊர்சுற்றிப் பறவை’ விமர்சனம்". ஆனந்த விகடன். https://www.vikatan.com/literature/arts/my-vikatan-article-about-author-ram-thangam. பார்த்த நாள்: 25 December 2023. 
  6. "எனது எழுத்துப் பணிக்கு கிடைத்த ஊக்கம்: எழுத்தாளர் ராம் தங்கம் பேட்டி". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2023/jun/23/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4026574.html. பார்த்த நாள்: 25 December 2023. 
  7. Admin (2022-02-24), "நூல் அறிமுகம்: ராம் தங்கத்தின் புலிக்குத்தி - (சிறுகதைத் தொகுப்பு) - விஜயராணி மீனாட்சி", Bookday, retrieved 2023-12-25
  8. "கடவுளின் தேசத்தில்". தினமணி. https://www.dinamani.com/specials/nool-aragam/2023/may/02/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3999374.html. பார்த்த நாள்: 25 December 2023. 
  9. "Books by ராம் தங்கம் (Author of திருக்கார்த்தியல் [Thirukkarthiyal])", www.goodreads.com, retrieved 2023-12-25
"https://tamilar.wiki/index.php?title=ராம்_தங்கம்&oldid=19000" இருந்து மீள்விக்கப்பட்டது