ராச நடனம்

ராஸ் மேலா என்னும் திருவிழாவில் ஆடப்படும் ஆடல் ராச நடனம் ஆகும். பங்களாதேஷ் பகுதியில் கொண்டாடப்படும் பாரம்பரிய மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவாக ராச பூர்ணிமா கருதப்படுகிறது. இந்த திருவிழா ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்தில் வரும் பௌணர்மியின் போது கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின்போது ராச நடனம் ஆடப்படுகிறது.பார்வைக்குப் புலப்படாத உணர்வுகளின் வடிவங்களைச் சித்திரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்நடனம் மணிப்புரி பண்பாட்டின் உன்னதமான செவ்வியல் படைப்பாக உள்ளது.[1][2]
பின்னணி
இந்த ராச நடனம் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மகா ராஸ், பஸந்த ராஸ், குஞ்ச ராஸ், திவ்ய ராஸ் ஆகியவை அப்பிரிவுகள் ஆகும். இவற்றுள் மகா ராஸ் மிகவும் விரிவான நடனமாகும். பாகவதப் புராணத்தின் ஐந்தாம் பாகத்தில் விளக்கப்பட்டுள்ள புராணக்கதையின்படி இந்நடனம் மேடையில் நிகழ்த்தப்படுகிறது. கிருஷ்ணர் - ராதை சந்திப்பு, கோபிகையரின் கூட்டம் , கோபிகைகளின் உணர்வு வெளிப்பாடு, கிருஷ்ணர் மற்றும் ராதையின் நடனம், கோபிகைகளின் நடனம், கிருஷ்ணர் மறைந்து கொள்ளுதல், மீண்டும் தோன்றுதல், புல்லாங்குழல் இசை மற்றும் அனைவரும் வீடு திரும்புதல் ஆகியவை இந்நடனத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன. பொதுவாக இந்நடனத்தில் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடங்களை ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஏற்று நடிப்பது வழக்கமாக இருக்கிறது. h[3] ஐந்து வயதிற்கு மேல் குழந்தைகளின் தெய்வத்தன்மை இழக்கப்படுவதாக மணிப்புரி மக்கள் நம்புகின்றனர்.இருப்பினும், முதன்மை நாடக நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்கள் ராதாவின் தோழர்களை சித்தரிக்கும் இளம் பெண்களால் வழங்கப்படுகின்றன.[4]ராச லீலா கோவிந்தரின் பெரிய கோவில் பந்தலில் உள்ள தெய்வத்தின் சிலைக்கு முன்னால் கலைஞர்களால் நிகழ்த்தப்படும் நாத சங்கீர்த்தனம் என்னும் இசை வழிபாட்டுடன் தொடங்குகிறது. மிருதங்கம் மற்றும் சங்குகளுடன், கலைஞர்கள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரித்து சங்கீர்த்தனம் செய்கிறார்கள். ராச நடனத்தின் மையப்பகுதியாக பாங்கி பரேங் அமைகிறது. இந்த நடனம் ஐந்து மணிநேரங்களுக்கு மேலாக நிகழ்த்தப்படும். இந்த நடனத்தின் மூலம் பக்தர்கள் உணர்வுரீதியாக கிருஷ்ணருடன் ஒன்றிணைகிறார்கள். இந்த நடனத்திற்கான பாடல்கள் வங்காளம், மைதிலி, மேய்தி ஆகிய மொழிக் கவிதைகளிலிருந்து எடுக்கப்படுகின்றன.[5][6]
அங்கீகாரம்
மணிப்புரி நடனம் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் வெளி உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. 1926ஆம் ஆண்டு அவர் ஸைல்ஹெட் என்னும் இடத்திற்குச் சென்றிருந்தபோது இந்நடனத்தின் நுட்பமான அசைவுகளால் கவரப்பட்டார். அதன்பிறகு இந்நடனத்தின் முதன்மைக் கூறுகளைத் தனது நாட்டிய நாடகங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார். [7] மணிப்புரி இன மக்கள் ஆண்டுதோறும் நாத சங்கீர்த்தனம் மற்றும் ராச நடனத்தைப் பக்தியுடனும் கலாச்சார ஈடுபாட்டுடனும் கொண்டாடி வருகின்றனர்.[2][8]
மேற்கோள்கள்
- ↑ "'Maha Raas Leela' Festival in Indigenous Villages". Manab Zamin. Retrieved 2024-11-24.
- ↑ 2.0 2.1 "Lai Haraoba Practices 1". www.e-pao.net. Retrieved 2024-11-24.
- ↑ "Raas Dance, Manipuri Dance, Raas Leela". www.onushilon.org. Retrieved 2024-11-24.
- ↑ Report, Star (2024-11-17). "Raas festival ends amid festivity". The Daily Star (in ஆங்கிலம்). Retrieved 2024-11-24.
- ↑ Tarafdar, Shimul (2022-11-09). "Maha Raas Leela". Prothomalo (in Bengali). Retrieved 2024-11-24.
- ↑ "Raas Dance: Bringing the finest of Indian Culture to America!". thecultureties.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-07-08. Retrieved 2024-11-24.
- ↑ "Manipuri's Maha Raas Leela to be held on November 2 in Kamalganj". 22 November 2009. Archived from the original on 31 October 2009. Retrieved 22 November 2009.
- ↑ "Manipuri community's Raas Festival begins in Moulvibazar". The Business Standard (in ஆங்கிலம்). 2023-11-28. Retrieved 2024-11-24.