யாழன் ஆதி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

யாழன் ஆதி தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர்களில் ஒருவர். தலித் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாக செயல்பட்டுவரும் யாழன் ஆதி தலித் முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதி இருக்கின்றார். அக்கவிதைகள் மிகுபுகழ் பெற்றவை.பல்வேறு இதழ்களில் படைப்புகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. தலித் கவிதைகளில் நவீன கவிதைகளின் போக்கை இணைத்து ஒரு புதுமாதிரி இவரால் உருவாக்கப்பட்டது என்று கூறலாம்.

இவருடைய கவிதைகள் ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் இவருடைய செவிப்பறை நூலை பாடப்புத்தகமாக வைத்திருந்தது. சென்னைப் பல்கலைக் கழகம், எத்திராஜ் மகளிர் கல்லூரி, போன்றவற்றிலும் இவர் கவிதைகள் பாடமாக்கப்பட்டுள்ளன. இலயோலா கல்லூரி சென்னை, தூய இருதயக் கல்லூரி திருப்பத்தூர், ஆகிய நிறுவனங்களிலும் இவர் கவிதைகள் பாடமாக உள்ளன. கவிதை மட்டுமில்லாமல் அனைத்து இலக்கிய வகைமைகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கின்றது.சிறுகதைகள் கட்டுரைகள் என அவர் படைப்புகள் வெளியாகின்றன. புதிய தலித் எழுத்தாளர்களைப் பற்றி தலித் முரசில் மாற்றுப் பாதை என்னும் கட்டுரைத்தொடரை எழுதி உள்ளார். பௌத்தம் குறித்த நீண்ட உரையாடல்களை நிகழ்த்தி வருபவர் இவர். புத்தரின் கோட்பாடுகளின் தத்துவங்களை மிக எளிமையானக் கட்டுரைகளாக எழுதுகிறார். போதி முரசு இதழில் இவர் திரிபிடகம் குறித்துத் தொடர் ஒன்றை எழுதினார். புத்தரின் போதனைகள் குறித்த நெடுந்தொடர் ஒன்று நீலம் இதழில் வந்து கொண்டிருக்கிறது.

சாம்பல் என்னும் குறும்படத்தையும் இவர் இயக்கி இருக்கின்றார். திரைக்கதைகள் எழுதுவதில் திறன்பெற்றவர்.

இசையுதிர்காலம், செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா, போதலின் தனிமை, காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும், யாருமற்ற சொல், ஒளியிருள், தொலைதலின் ரகசியங்கள் அடர்ந்த காடு, கால்களின் கதை, நெடுநல்வாடான்,போராசிரியர், தன்னீர்மை, போன்ற கவிதை நூல்கள், மனிதம் கொன்ற சாதியம், ஆம்பூர் (ஊர் வரலாற்று நூல்) ஆகிய படைப்புகளை வெளியிட்டுள்ளார். யானைக்காடு, அழகிய காற்று ஆகியவை அவர் எழுதியிருக்கும் கட்டுரை நூல்கள். தம்மபதம் என்னும் புத்தரின் போதனைகளை ஆங்கிலம் வழி தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நூல் அவரின் முக்கிய நூலாக நாம் கருதலாம். இரட்டைமலை சீனிவாசன் விருது, திருவள்ளுவர் பல்கலைக் கழக விருது, இந்தியக் குடியரசுக் கட்சி விருது, என பல மக்கள் இயக்கங்களின் விருதுகளைப் பெற்றிருக்கிறார். தொடர்ந்து உரைகளை நிகழ்த்துவதும் அவரின் முக்கிய பங்களிப்பாக நாம் கருதலாம். இலக்கிய சமூக கருத்தரங்களில் அவர் உரையாற்றுகிறார். திரைப்படங்களுக்கு திரைக்கதைகளை எழுதுகிறார்.

விடுதலைக் கலை இலக்கியப் பேரவை என்னும் மாநிலம் தழுவிய இலக்கிய அமைப்பிற்கு அவர் செயலாளராகவும் பணியாற்றுகிறார். திரிபீடக தமிழ் நிறுவனம் என்னும் அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார்.

"https://tamilar.wiki/w/index.php?title=யாழன்_ஆதி&oldid=479921" இலிருந்து மீள்விக்கப்பட்டது