மோசிகீரனார்
மோசிகீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரைச் சேர்ந்தவராகவோ அல்லது தொண்டை நாட்டில் உள்ள மோசூர் என்னுமிடத்தைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவரது பெயரைக் (மோசி + கீரன்) கொண்டு இவர் கீரன் குடியைச் சேர்ந்தவராயிருத்தல் கூடும் என்ற கருத்தும் உள்ளது. சேர மன்னனான தகடூர் எறிந்த இரும்பொறையையும், கொண்கானங் கிழானையும் இவர் பாடியுள்ளார். இவர் பாடியதாக அகநாநூற்றிலும், நற்றிணையிலும் ஒவ்வொரு பாடலும், குறுந்தொகையில் இரண்டு பாடல்களும், புறநானூற்றில் நான்கு பாடல்களும் உள்ளன.
புறம் 50[1] சேரன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கவரி வீசியது
இந்தப் பொறையனின் முரசுக்கு நீராட்டு விழா. விழாவுக்குப் பின் அது மயில் பீலியும், பொன்னால் செய்யப்பட்ட உழிஞைப் பூவும் சூட்டப்பெற்று மீளும். முரசு நீராட்டு விழாவுக்குச் சென்றுவிட்டதால் முரசு வைத்திருந்த கட்டில் வெறுமனே இருந்தது. எண்ணெய் ஊற்றும்போது அதில் எழும்பும் நுரை போல அந்தக் கட்டிலின்மேல் மெத்தை போடப்பட்டிருந்தது. மோசிகீரனார் இந்தப் பொறையனைக் காண வந்தார். நடந்துவந்த களைப்பு. அந்த முரசுக்கட்டிலின் மேல் படுத்து உறங்கிவிட்டார். விழா முடிந்து முரசு திரும்பி வந்தது. கட்டிலின் மேல் அரசன் புலவரைக் கண்டான். தனக்கு மகளிர் வீசும் கவரியை எடுத்துப் புலவருக்கு வீசிக்கொண்டிருந்தான். புலவர் எழுந்து பார்த்தபோது துடித்துப்போனார்.
தவறு செய்த என்னைத் உன் வாளால் இரு துண்டாக்கிப் போடாமல் இவ்வாறு செய்கிறாயே! இந்த உலகில் புகழ் உடையவருக்குத்தான் மறுமையில் உயர்நிலை உலகம் கிட்டும் என்று முன்னோர் கூறியதைப் பின்பற்றுகிறாயோ! என்று கூறி வியந்து பாடுகிறார்.
புறம் 154 கொண்கானங்கிழானிடம் பரிசில் வேண்டியது
கடல் தாண்டிச் சென்றவர் அங்குத் தெரிந்தவர் இருந்தால் மட்டுமே குடிக்க நீர் கேட்டுத் தன் தாகத்தைத் தணித்துக்கொள்வர். நான் வாழுமிடத்தில் அரசர் இருந்தாலும் அவரிடம் நான் சென்று எதுவும் கேட்கமாட்டேன். நீ எனக்குத் தெரிந்தவன் ஆகையால் உன்னிடம் வந்து பரிசு கேட்கிறேன். நீ கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உன் கொடிப்படையின் துணி போல அருவி பொங்கி வழியும் உன் கொண்கான மலையைப் பாடுவேன். அது எனக்கு எளிது என்கிறார் புலவர்.
புறம் 155 கொண்கானங் கிழானிடம் பாணனை ஆற்றுப்படுத்தியது
பாணன் ஒருவன் தன் சீறியாழைக் கக்கத்தில் தழுவிக்கொண்டு என்னை உணர்ந்து என் துன்பத்தைப் போக்குபவர் யார் என்று இந்தப் புலவரைக் கேட்டான்.
நெருஞ்சிப் பூ எப்போதும் சூரியனை எதிர்நோக்கிக்கொண்டே இருக்கும். (தாமரைப் பூவைப் போல) அதுபோலக் கொண்கானங் கிழான் புலவரின் வறுமையைப் போக்கி அவர்களின் கொள்கலனை நிரப்புவதற்காக எதிர்பார்த்துகொண்டே இருக்கிறான் என்கிறார் புலவர்.
புறம் 156 கொண்கானங் கிழான் இயல்பு
பிற அரசர்களின் குன்றம் ஒரே ஒரு பெருமையை மட்டுந்தான் கொண்டிருக்கும். கொண்கானங் கிழானின் குன்றம் இரண்டு பெருமைகளைக் கொண்டது. ஒன்று அங்குச் சென்ற இரவலர் தன் வறுமை நீங்கி அங்கேயே தங்கிவிடுவர். மற்றொன்று பிற அரசர்களின் திறைப்பொருள் அங்கு வந்து குவிந்துகொண்டே இருக்கும்.
புறம் 186 பொருண்மொழிக்காஞ்சி
உண்மையை விளம்புவது பொருண்மொழி.
பாடல்
நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே,
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்,
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.
செய்தி
ஒருவரது உடலுக்கு உயிரைத் தருவது நெல்லும் நீருமாக இருக்கலாம். ஆனால் உலகில் மலரும் மக்களுக்கு மன்னன்தான் உயிர். வேலை வைத்துக்கொண்டு போரில் ஈடுபடும் மன்னன் தான்தான் மக்களுக்கு உயிர் என்பதை உணர்ந்துகொள்வது அவனது கடமையாகும்.