மோசசு மைக்கேல் பாரடே
மோசசு மைக்கேல் பாரடே என்பவர் தமிழ்க் கவிஞர் ஆவார். 1980 முதலாக பல இதழ்களில் கவிதைகள் படைத்துள்ளார்.
பிறப்பும் இளமையும்
காஞ்சிபுரத்தில், ஜேசுதாஸ் இராமச்சந்திரன்- கிருபாவதிக்கு மகனாகப் பிறந்தவர். தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். தமிழ்ச் சித்தர் பாடல்களும் விவிலியமும் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
தமிழ்ப் பணிகள்
மதுரையில் 1981 இல் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டிலும், உலகக் கிறித்தவத் தமிழ்ப் பேரவை மாநாட்டிலும் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகள் படைத்துள்ளார். நியூயார்க், கனடா, கோலாலம்பூர், கொழும்பு ஆகிய நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்து கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.
படைப்புகள்
- சிலுவையினடியில் சிந்திய மலர்கள்
- சிலுவைவழிச் சிந்தனைகள்
- ஞான நொண்டி நாடகம்
- ஏட்டில் வடித்த தேன்
- கிறித்தவத் தமிழியல் ஆய்வுக்கோவை
- ஒரு கிறித்தவ ஆசிரியர் உருவாகிறார்
- தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் படைப்புகள்- ஓர் ஆய்வு
முதலான பல நூல்களைப் படைத்துள்ளார்.
விருதுகள்
1986 ஆம் ஆண்டு, உலகக் கிறித்தவத் தமிழ்ப் பேரவையில், அருட்கலைஞர் எனும் விருதையும்,1996 இல் நியூயார்க் தமிழ்க் கிறித்தவக் கோயிலில், தகுதிமிகு சேவையாளர் எனும் பட்டத்தையும்,உலகத் தமிழ்ப் பேரவையில், தமிழ்மாமணி எனும் விருதையும் பெற்றுள்ளார்.
உசாத்துணை
1) www.Tamil virtual university. com பார்த்த நாள் 19-7-17. 2) ப.முத்துக்குமாரசுவாமி, இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள் பழனியப்பா பிரதர்ஸ். 2004.