மொழியிறுதி எழுத்துக்கள்
மொழியிறுதி எழுத்துகள் எனப்படுவது தமிழ்ச் சொற்களில் எந்த எந்த எழுத்துகள் இறுதியாகக் கொண்டு முடிய வேண்டும் என்பதைத் தொல்காப்பியம், நன்னூல் குறிப்பிட்டவற்றை தமிழ் எழுத்திலக்கணத்தில் பயன்படுத்தும் முறையாகும்[1].
தொல்காப்பியம்
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இரண்டாவது இயல் மொழிமரபைப் பற்றி விளக்கும்போது சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் எவை என்றும், இறுதியில் வரும் எழுத்துகள் எவை என்றும் வரையறுக்கிறது. இது காலத்தின் கோலத்தால் விரிகிறது.
தமிழ் எழுத்துகள் 33. மொழிமுதல் எழுத்துகள் 22, மொழியிறுதி எழுத்துகள் 24 (புணரியல் நூற்பா 1)
உயிரெழுத்து 12, ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள ஆகிய 11 எழுத்துக்களின் மெய்யெழுத்துக்கள், குற்றியலுகரம் ஒருவகை. ஆக 24 எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும் மொழியிறுதி எழுத்துகள் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
நன்னூல்
உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும், மெய்யெழுத்துக்கள் ‘ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள’ ஆகிய பதினொன்றும், குற்றியலுகரம் ஒன்றும் என மொத்தமாக இருபத்து நான்கு எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும் என நன்னூல் குறிப்பிடுகிறது.
ஆவி, ஞணநமன யரல வழள மெய்,
சாயும் உகரம் நால்ஆறும் ஈறே. (நன்னூல், 107)
உயிரெழுத்துகள்
உயிரெழுத்துகள் தனித்தும் மெய்யுடன் இணைந்தும் மொழியிறுதியில் வரும். உயிரெழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும். சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வராது. மெய்யெழுத்துடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகவே சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும். உயிரெழுத்துகளில் எகரக் குறில் அளபெடையாக மட்டுமே சொல்லுக்கு இறுதியில் வரும்.
எடுத்துக்காட்டு: சில (அ), நிலா (ஆ), நரி (இ), தீ (ஈ), மிளகு (உ), பூ (ஊ), சேஎ (எ), எங்கே (ஏ), மழை (ஐ), நொ (ஒ), மலரோ (ஓ), கௌ (ஔ)
உயிரிறுதி - 12
ஆஅ, ஆ, ஈஇ, ஈ, ஊஉ, ஊ, ஏஎ, ஏ, ஐ, ஓஒ, ஓ, - 11 எழுத்துகள்
விள, பலா, கிளி, குரீ, பனை -என்பன போல் உயிர்மெய் எழுத்துடன் வரும்.
இவற்றுள் குற்றெழுத்துக்கள் ஐந்தும் அளபெடை எழுத்துக்களாக ஈறாயின.
கௌ, வௌ - (ஔகாரம்) - 1
எ என்னும் உயிர் எந்தச் சொல்லிலும் ஈறு ஆகாது.
ஒ என்னும் உயிர் 'நொ' என்னும் சொல்லில் மட்டும் ஈறு ஆ1கும்.
ஏ, ஓ என்னும் உயிர் எழுத்துகள் ஞ வரிசையில் ஈறு ஆகா. (ஞே, ஞோ - என ஈறு ஆகாது)
உ, ஊ என்னும் உயிர் எழுத்துகள் ந வரிசையில் ஈறு ஆகா. (நு, நூ எழுத்தில் எந்தச் சொல்லும் முடியாது)
உ எழுத்து ச வரிசையில் இரண்டு சொற்களில் வரும். (உசு, முசு - என வரும்)
உ எழுத்து ப வரிசையில் ஒரு சொல்லில் மட்டும் இரு பொருளில் வரும். (தபு - என வரும்)
பிறவற்றிற்கு வரையறை இல்லை.
மெய் எழுத்துகள்
வல்லின மெய்யெழுத்துகள் சொல்லின் இறுதியில் வரமாட்டா. மெல்லின மெய்யெழுத்துகளில் 'ஞ், ண், ந், ம், ன்' ஆகிய ஐந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும். இடையின மெய்யெழுத்துகள் 'ய், ர், ல், வ், ழ், ள்' ஆகிய ஆறும் சொல்லுக்கு இறுதியில் வரும்.
எடுத்துக்காட்டு (மெல்லின மெய்): உரிஞ், பெண், வெரிந், அறம், மான்
எடுத்துக்காட்டு (இடையின மெய்): பொய், பார், பால், தெவ், பாழ், வாள்
மெய்யிறுதி - 11
ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் - 11
உரிஞ், மண், பொருந், திரும், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வேள் - என வரும்.
ந் எழுத்து பொருந், வெரிந் - என்னும் இரண்டு சொற்களில் மட்டும் முடியும்.
ஞ் எழுத்து உரிஞ் - என்னும் ஒரு சொல்லில் மட்டும் முடியும்.
வ் எழுத்து அவ், இவ், உவ், தெவ் - என்னும் நான்கு சொற்களில் மட்டும் முடியும்.
குற்றியலுகரம்
குற்றியலுகரமும் சொல்லுக்கு இறுதியில் வரும். எல்லாக் குற்றியலுகரங்களும் புணர்ச்சிப் பாங்கில் ஒரே நெறியைப் பின்பற்றுவதால் ஒன்று என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டு: காடு, மூழ்கு, அஃது
இக்கால நிலை
வேற்றுமொழிச் சொற்களை ஒலிபெயர்த்து எழுதும்போது பிற மெய்யெழுத்துகளும் சொல்லின் இறுதியில் பிழையாக எழுதப்பட்டு வருகின்றன.
பார்க், பீச், ரூட், ஐதராபாத், போப், (ற் - தமிழுக்கே உரிய ஒலி), சிங் - என வருகின்றன. இவை முறையாக, பார்க்கு, பீச்சு, உரூட்டு, ஐதராபாத்து, போப்பு, சிங்கு என்று வரும்.
பாஸ், பிரஷ், ஜார்ஜ், நமஹ், உக்ஷ் - என வருகின்றன. இவை முறையாக, பாசு, பிரசு, சார்ச்சு, நமக, உட்சு என்று வரும்.
"கடிசொல் இல்லை காலத்துப் படினே".
(தொல்காப்பியம்)
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- ↑ "மொழி இறுதி எழுத்துகள்". பார்க்கப்பட்ட நாள் 3 திசம்பர் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]