மூர் விதி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
நுண்செயலிக்கான திரிதடையங்கள், ஒவ்வொரு இரண்டு ஆண்டிற்க்கும் இருமடங்க்காக அதிகரிக்கறிது.

மூர் விதி (Moore's law) என்பது கணினியியலில், ஒரு ஒருங்கிணைந்த மின்சுற்றில் உள்ள திரிதடையங்களின் எண்ணிக்கை தோராயமாக ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் இருமடங்காக அதிகரிக்கும் என்ற கவனிப்பைக் குறிக்கிறது.[1]இது உறுதியான இயற்பியல் விதியோ அல்லது இயற்கை விதியோ அல்ல; மாறாக, இது கடந்தகாலத் தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்ட, வரலாற்றுப் போக்காகும். தகவல் தொழில்நுட்பத் துறையின் அசுர வளர்ச்சிக்கு இந்த விதியே அடித்தளமாக அமைந்துள்ளது.

தோற்றம்

1965 ஆம் ஆண்டில், இன்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனரான கார்டன் மூர் என்பவர் "எலெக்ட்ரானிக்ஸ்" என்ற இதழில், ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில், குறைக்கடத்தித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் கணித்து, ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு சில்லில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.[2] ஆரம்பகாலத்தில் இது வெறுமனே ஒரு தொழில்முறை ஊகமாகவே பார்க்கப்பட்டது.

பின்னர், 1975 ஆம் ஆண்டில் கார்டன் மூர் தனது கணிப்பைச் சற்று மாற்றி, ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும், இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும் எனத் திருத்தியமைத்தார். இந்தத் திருத்தப்பட்ட கணிப்பிற்கு, கால்டெக் பல்கலைக்கழகப் பேராசிரியரான கார்வர் மீட் என்பவர் தான் முதன்முதலில் "மூரின் விதி" என்று பெயரிட்டார். இந்த விதியே, தற்கால நுண்செயலிகளின் கட்டமைப்பை வரையறுக்கும் ஒரு முதன்மை விதியாக மாறியது.

தொழில்நுட்பத் தாக்கம்

இந்த விதி வெறும,னே ஒரு கணிப்பாக மட்டும் நின்றுவிடாமல், ஒட்டுமொத்த மின்னணுவியல் துறையின் இலக்காகவும், உந்துசக்தியாகவும் மாறியது. கணினிகளின் செயலாக்கத் திறனும், நினைவகத்தின் அளவுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய புரட்சிக்கு, மூரின் விதியே அடிப்படை வழிகாட்டியாக அமைந்தது.[3] டென்னார்ட் அளவீடு (Dennard scaling) என்ற கோட்பாட்டின்படி, திரிதடையங்கள் சிறிதாகும்போது அவற்றின் மின் நுகர்வும் குறைந்து செயல்திறன் கூடியதாக உள்ளது.

இயற்பியல் வரம்புகள்

எத்தனை ஆண்டுகளுக்கு, இந்த விதி தொடரும் என்ற கேள்வி பல பத்தாண்துகளாக கலந்துரையாடலாக இருந்து வருகிறது. 2000-களின் தொடக்கத்தில், சிற்றாக்கத்தின் (Miniaturization) காரணமாகச் சிலிக்கான் சில்லுகளில், பல்வேறு இயற்பியல் சிக்கல்கள் தோன்றத் தொடங்கின. திரிதடையங்கள் அணுக்களின் அளவை நெருங்கும்போது, குவாண்டம் சுரங்க விளைவு ஏற்பட்டு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது.[4] மேலும், மிகச் சிறிய பரப்பளவில், பில்லியன் கணக்கான திரிதடையங்கள் செயல்படுவதால், அதிகப்படியான வெப்ப ஆற்றல் உற்பத்தியாகி, சில்லுகள் உருகும் அபாயம் ஏற்படுகிறது.

இயற்பியல் வரம்புகள் ஒருபுறமிருக்க, பொருளாதார அடிப்படையிலும், இது பெரும் சவாலைச் சந்தித்து வருகிறது. மூரின் இரண்டாம் விதி அல்லது இராக்கின் விதி (Rock's law) என்பதன்படி, சில்லுகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் மூலதனச் செலவு, ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் இருமடங்காகிறது. இதனால், பல்லாயிரம் கோடி உரூபாய் முதலீடு தேவைப்படுவதால், உலகில் மிகச் சில உற்பத்தியகங்கள் மட்டுமே, இன்று இந்தப் போட்டியில் நிலைத்து நிற்க முடிகிறது.

காட்சியகம்

  • விதிகளை உருவாக்கியவர்கள்.

மேற்கோள்கள்

  1. "Gordon Moore: He Stood Alone Among Tech Titans". Intel. Retrieved 2023-11-01.
  2. Moore, Gordon E. (April 19, 1965). "Cramming more components onto integrated circuits". Electronics 38 (8): 114–117. 
  3. Brock, David C. (2006). Understanding Moore's Law: Four Decades of Innovation. Chemical Heritage Foundation. p. 87. ISBN 978-0941901413.
  4. Waldrop, M. Mitchell (February 2016). "The chips are down for Moore's law". Nature 530 (7589): 144–147. doi:10.1038/530144a. 

இதையும் காணவும்

"https://tamilar.wiki/w/index.php?title=மூர்_விதி&oldid=473942" இலிருந்து மீள்விக்கப்பட்டது