மு. தளையசிங்கம்
மு. தளையசிங்கம் (பிறப்பு 1935. இறப்பு: ஏப்ரல் 2, 1973) இலங்கை எழுத்தாளர். 1956 துவங்கி, அவர் மறைந்த 1973 வரை எழுதியிருகிறார். அவர் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் எனத் தரமான இலக்கியப் படைப்புகளைத் தந்துள்ளார். தளையசிங்கம் தமிழின் முக்கியமான மீபொருண்மைச் சிந்தனையாளர். மானுடகுலத்தின் அறிவார்ந்த பரிணாமத்தைப்பற்றிய கருத்தாக்கங்களை உருவாக்கினார்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் புங்குடு தீவு பகுதியில் பிறந்த தளையசிங்கம் இளம் வயதிலேயே சிந்தனையாளராகவும் சமூகப்போராளியாகவும் அறியப்பட்டவர். பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். ஆரம்பத்தில் புனைகதைகளையும் இலக்கியவிமர்சனங்களையும் எழுதினார். பின்னர் மெய்யியல் ஆய்வுகளை நோக்கி சென்றார்
மார்க்சிய ஈடுபாடுள்ளவராக இருந்த தளையசிங்கம் பின்னர் சர்வோதய இயக்கத்து போராளியானார். 1966ல் மு.தளையசிங்கம் தனது ஆன்மீக குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியில் சந்தித்தார். அது அவரை அரவிந்தரை நோக்கி கொண்டுசென்றது. புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாற்றலானார்.
1968 ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து தனது சமூகப் பணிகளைப் பரவலாக்கும் கருவியாக அரசியலைப் பிரயோகிக்கும் நோக்கத்தில் குறுகிய கால அரசியற் பிரவேசம் செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார். 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு இவர் நடத்திய போராட்டத்தின்போது காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் நோய்வாயப்பட்டு 1973ம் ஆண்டு மறைந்தார்
பங்களிப்பு
தளையசிங்கம் தன் காலகட்டத்தை இவ்வாறு வகைப்படுத்துகிறார்
‘தற்காலம் ஒரு புது யுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது மற்றது பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது” அதற்கேற்ப உருவாக்கிய தனது கலைப்பார்வையைப் பிரபஞ்ச யதார்த்தம் என்று சொன்னார்
தளையசிங்கத்தின் பங்களிப்பை இலக்கியவிமர்சகரான எம். வேதசகாயகுமார் இவ்வாறு இனம்காண்கிறார் ’பூரண இலக்கியம் என்னும் கோட்பாட்டை விளக்க முயல்கிறார். பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் இவை இரண்டிற்கும் அப்பாலான மெய்முதல் வாதத்தை முன்வைக்கிறார். மெய்யுள் என்னும் புதிய இலக்கிய வடிவையும் சமகாலத்திற்கான வடிவமாகக் காண்கிறார். ஈழத் தமிழ் இலக்கிய விமர்சகர்களுள் தளையசிங்கத்தையே பெரும் சிந்தனையாளராக இனம் காணவேண்டும்’.[1]
புதுயுகத்துக்கான இலக்கியத்தை தளையசிங்கம் ‘மெய்யுள்’ என அழைத்தார். அதை ஒரு மாதிரி வடிவில் தானே எழுதியும் பார்த்தார்.
தளையசிங்கத்தின் நூல்கள்
- ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி
- முற்போக்கு இலக்கியம்
- போர்ப்பறை
- புதுயுகம் பிறக்கிறது
- கலைஞனின் தாகம்
- மெய்யுள்
- ஒரு தனி வீடு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மு. தளையசிங்கம் - ஒரு அறிமுகம் - நூலகம் திட்டம்