மு. சாயபு மரைக்காயர்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மு. சாயபு மரைக்காயர் |
---|---|
பிறந்ததிகதி | ஆகஸ்ட் 28, 1951 |
அறியப்படுவது | எழுத்தாளர், சொற்பொழிவாளர் |
மு. சாயபு மரைக்காயர் (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1951) தமிழ்ப் பேராசிரியர். எழுத்தாளர். சொற்பொழிவாளர். கல்வி, இலக்கியம், ஆய்வுகள் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். சிறார்களுக்காகப் பல நூல்களை எழுதினார். இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களித்தார். தனது இலக்கியப் பணிகளுக்காக தமிழக மற்றும் புதுச்சேரி அரசின் விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
மு. சாயபு மரைக்காயர், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்காலில், ஆகஸ்ட் 25, 1951-ல், ஹாஜி முகமது அப்துல் காதர்-பாத்திமா உம்மாள் இணையருக்குப் பிறந்தார். இவரது பாட்டனார் அமுதகவி சாயபு மரைக்காயர், தமிழ்ப் புலவர். பல இலக்கியங்களைப் படைத்தவர். அவர் வழி வந்த மு. சாயபு மரைக்காயர், தொடக்கக் கல்வியைக் காரைக்காலில் உள்ள முஸ்லிம் வித்யா சங்கம் பள்ளியில் படித்தார். மாடர்ன் கல்லூரிப் பள்ளியில் எட்டாம் வகுப்பையும், கோவிந்தசாமிப் பிள்ளை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரையும் பயின்றார்.
காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்தார். அங்கேயே தொடர்ந்து பயின்று வேதியியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். ’இசுலாமியச் சிறுகதைகள்' என்ற தலைப்பில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
மு. சாயபு மரைக்காயர், தமிழ்ப் பேராசிரியர் ஆகப் பணியாற்றினார். மனைவி சா. நசீமா பானு தமிழ்ப் பேராசிரியர். இவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் மகள் வழிப் பெயர்த்தி. பிள்ளைகள்: பாத்திமா யாஸ்மின், முஹம்மத் அப்துல் காதர், இக்பால்.
கல்விப் பணிகள்
மு. சாயபு மரைக்காயர், புதுச்சேரியில் உள்ள தாகூர் அரசு கலைக்கல்லூரியில் உரையாளராகப் (tutor) பணியாற்றினார். காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பேராசிரியராகவும் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
மு. சாயபு மரைக்காயர் ராணி, தினமணி, சமரசம், தமிழரசு, பூஞ்சோலை (தனித் தமிழ் இதழ்), புதுவைச் செய்திகள், புயல் எனப் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.மு. சாயபு மரைக்காயர் எழுதிய முதல் நூல் 'நபிமொழி நானூறு'. இது நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளின் தொகுப்பு. முதல் கவிதை தொகுப்பு 'எண்ணப்பூக்கள்' 1982-ல் வெளிவந்தது.
மு. சாயபு மரைக்காயரின் ‘எதற்காக?’ என்னும் சிறுகதை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டது. ’அறிவுச் சுவடி’ என்னும் நூல் மழலையர் பள்ளியில் பாடமாக வைக்கப்பட்டது. ’குழந்தை நலக் குறிப்புகள்' என்னும் நூல் கோவை அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரி பாடத்திட்டத்தில் இடம்பெற்றது. ’மொழிப்பயிற்சியும் மொழிபெயர்ப்பும்’ என்ற நூல் பல்வேறு கலைக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டது. மு.சாயபு மரைக்காயர், கவிதை, சிறுகதை, நாடகம், இலக்கிய ஆய்வு, கட்டுரை என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
நாடக வாழ்க்கை
மு. சாயபு மரைக்காயர், பல நாடகங்களை எழுதி இயக்கி நடித்தார். ‘நான் யார்’, ‘அப்பல்லோ 13’, ’கேள்விக்குறி’, ’இண்டர்வியூ’, ‘ஹலோ யாஹயா’, ’சிட்டுகுருவிக்கென்ன கட்டுப்பாடு’, ’அன்னையின் ஆணை’, ‘ஒத்திகை’, ’தம்பி நீ வாழ்க’ - போன்ற பல நாடகங்களில் நடித்தார்.
அமைப்புச் செயல்பாடுகள்
மு.சாயபு மரைக்காயர், வானொலி, தொலைக்காட்சிகளில் சிறப்புரையாற்றினார். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவாற்றினார். உலகளாவிய வகையில் 15-க்கும் மேற்பட்ட மாநாடுகளை நடத்தினார். பல மாணவர்கள் இவரது படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றனர்.
’பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர்-பேராசிரியர் சா.நசீமா பானு அறக்கட்டளை’யை நிறுவி அதன் மூலம் இலக்கியப் பணியாற்றி வருகிறார். இஸ்லாமிய இலக்கியம், வரலாறு, பண்பாடு குறித்து எழுதப்பெறும் கட்டுரைகளுக்குச் ‘செல்வன் முகம்மது அப்துல்காதர் நினைவுப்பரிசு’ வழங்கி வருகிறார். ஆய்வு மாணவர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் பயன்படும் வகையில் தனது வீட்டின் மாடியில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய நூலகம் ஒன்றைப் பராமரித்து வருகிறார்.
பொறுப்புகள்
- புதுவை மாநிலக் கல்லூரி தமிழாசிரியர் மன்றத்தின் செயலாளர்.
- கண்ணதாசன் இலக்கிய மன்றத்தின் செயலாளர்.
- தமிழ்நாடு குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்.
- புதுவை மாநில நகைச்சுவை மன்றத்தின் தலைவர்.
- இஸ்லாமிய தமிழிலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர்.
விருதுகள்
- மலேசிய இலக்கிய அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்ட ‘இலக்கியச் சுடர்’ பட்டம் .
- பாங்காக் தமிழ் முஸ்லிம்கள் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட ‘எழுத்து வேந்தர்’ பட்டம்.
- இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் வழங்கிய தமிழ் மாமணி பட்டம்.
- காஞ்சி பெரியவர் நூற்றாண்டு அறக்கட்டளை வழங்கிய சேவா ரத்னா விருது.
- பன்னாட்டுத் தமிழ் உறவு மன்றம் வழங்கிய தமிழ்ப்பணிச் செம்மல் விருது.
- புதுவை அரசின் கலைமாமணி விருது.
- திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் வழங்கிய ஔவை விருது.
- குன்றக்குடி அடிகளார் சமய நல்லிணக்க விருது.
- சென்னை கம்பன் கழகம் அளித்த சீறாப்புராண விருது.
- நெய்வேலி புத்தக கண்காட்சியில் வழங்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருது. (2010)
- புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் சார்பில் வழங்கப்பட்ட உமறுப் புலவர் விருது.
- சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் கழகம் வழங்கிய நகைச்சுவைக் காவலர் பட்டம்.
- பாரதிய தலித் சாகித்திய அகாதமி வழங்கிய அம்பேத்கர் தேசிய விருது.
- சென்னை கம்பன் கழகம் வழங்கிய தமிழ் நிதி பட்டம்.
- புதுச்சேரி தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் இயல் இசை நாடக சபா சார்பில் வழங்கப்பட்ட அண்ணா விருது.
- தமிழக அரசு சிறந்த தமிழ் அறிஞர்க்கான உமறுப் புலவர் விருது (2015).
- தமிழ்நாடு குழந்தை எழுத்தாளர் சங்கமும், ஏ.வி.எம்.அறக்கட்டளையும் இணைந்து நடத்திய குழந்தை இலக்கிய போட்டியில் ’வெற்றி யாருக்கு?’ என்ற நாடகத்திற்கு வெள்ளிப் பதக்கம்.
- ‘பாரதிதாசன் வாழ்விலே’ என்ற நூலுக்காகத் தங்கப் பதக்கம்.
- ‘அறிவியல் அறிஞர்கள்’ நூலுக்காகத் தங்கப் பதக்கம்.
- சிறுகதைக்காக ‘இலக்கிய வீதி’ பரிசு
- தாஜூல் கலாம் பட்டம்
- இறையருள் உரைமணி பட்டம்
- தர்காப் புலவர் பட்டம்
மு. சாயபு மரைக்காயர் பற்றிய நூல்கள்
- பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் (எழுதியவர்: பேராசிரியர் மு.ஜாபர் சாதிக் அலி)
- சாயபு மரைக்காயர் சதகம் (எழுதியவர்: அருட்கவி மு. முஹம்மது தாஹா)
- இலக்கிய இணையர் காவியம் (எழுதியவர்: அருட்கவி மு. முஹம்மது தாஹா)
- சாதனைச் செம்மல் சாயபு மரைக்காயர் அந்தாதி (எழுதியவர்: உணர்வுப் பாவலர் உசேன்)
- இன்முகச் செல்வர் சாயபு மரைக்காயர் இரட்டைமணிமாலை (எழுதியவர்: உணர்வுப் பாவலர் உசேன்)
- பல்கலைச் செல்வர் சாயபு மரைக்காயர் பதிகம் (எழுதியவர்: உணர்வுப் பாவலர் உசேன்)
- சாதனையாளர் சாயபு மரைக்காயர் (எழுதியவர்: பேராசிரியர் நசீமா பானு)
- சாதனையாளர் சாயபு மரைக்காயரின் புலமைநலம் (எழுதியவர்: முனைவர் பா.வளன் அரசு)
- சான்றோர் நெஞ்சில் சாயபு மரைக்காயர்
இலக்கிய இடம்
மு. சாயபு மரைக்காயர், தமிழ்ப் பேராசிரியர். இலக்கிய ஆய்வாளர். சிறார் இலக்கியம் சார்ந்தும் இயங்கினார். சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். பல மாநாடுகளை, கருத்தரங்குகளை, இலக்கியக் கூட்டங்களை ஒருங்கிணைத்தார். இஸ்லாமிய இலக்கியம் சார்ந்து இவர் எழுதியிருக்கும் ஆய்வு நூல்கள் முக்கியமானவையாக ஆய்வாளர்களால் கருதப்படுகின்றன. அறவுரைத்தன்மை கொண்ட படைப்புகளின் ஆசிரியர்.
சிறார் நூல்கள்
- அறிவியல் ஆத்திசூடி
- அறிவுச் சுவடி
- அறிவியல் அறிஞர்கள்
- அறிவுரைக் கதைகள்
- குழந்தைக் குறள்
- குழந்தை நலக் குறிப்புகள்
- சிறுவர் பாட்டுத் தோட்டம்
- திருநபி வாழ்விலே
- பாரதிதாசன் வாழ்விலே
- பொன்மொழிகளில் குழந்தை
- நபி வழிக் கதைகள்
- விடுகதை விருந்து
இலக்கிய ஆய்வு நூல்கள்
- ஆய்வுச் சோலை
- ஆய்வுப் பேழை
- ஆய்வு மாலை
- இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கோவை
- இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணியச் சிந்தனைகள்
- கண்ணதாசன் ஆய்வுக் கோவை
- கம்பர் ஆய்வுக் கோவை
- கம்பர் கருவூலம்
- கம்பர் வரலாறு
- காரைக்கால் அம்மையார் கருவூலம்
- பன்முகப் பார்வையில் பாரதி
- பாரதியார் ஆய்வுக்கோவை
- பாரதிதாசன் ஆய்வுக்கோவை
கவிதை நூல்கள்
- எண்ணப்பூக்கள்
- புதியதோர் உலகம் செய்வோம்
- மானுடம் போற்றுவோம்
கட்டுரை நூல்கள்
- இனிக்கும் இலக்கியம்
- இலக்கியச் சுடர்
- இலக்கியப் பேழை
- தமிழ்த் தேன்
- சொல்லின் செல்வன்
சிறுகதைத் தொகுப்புகள்
- பருவம்
- இளைய பாரதக் கதைகள்
- மணமகள் யாரோ?
நாடகங்கள்
- வெற்றி யாருக்கு?
- சொத்தா சொந்தமா?
- வள்ளுவர் வந்தால்!
- வறுமையிலும் பெருமை
- ஞானப் பேரொளி நாகூரார்
இஸ்லாமிய இலக்கிய நூல்கள்
- இஸ்லாமிய நோக்கில் கம்பர்
- கம்பனில் சமய நல்லிணக்கம்
- சைவ இலக்கியச்சோலை
- திருக்குர்ஆன் சிந்தனைகள்
- இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு
- நபிகள் நாயகம் வாழ்வும் வாக்கும்
- நபிமொழி நானூறு
- பாரதி கண்ட இஸ்லாம்
- தமிழ் இலக்கிய வரலாற்றில் இஸ்லாமியர் காலம்
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
- காரை மஸ்தான் சாகிபு வரலாற்றுப் பேழை
- தவப்புதல்வர் தவசு நாடார்
உசாத்துணை
- முனைவர் மு. இளங்கோவன் தளம்
- பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் வாழ்க்கைக் குறிப்பு
- மு. சாயபு மரைக்காயர் நாடகப் பங்களிப்பு
- மு. சாயபு மரைக்காயர் நூல்கள்
- கண்ணதாசன் கண்ட இஸ்லாம்: மு.சாயபு மரைக்காயர்
- இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு: மு.சாயபு மரைக்காயர்: தமிழ் இணைய மின்னூலகம்
- எழுதுவது எப்படி? - தொகுதி-5, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011