முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி (ஆட்சிக் காலம் கி.பி. 1762- 1772 பின்னர் 1780 - 1795 ) என்பவர் இராமநாதபுரம் சமஸ்தான மன்னராவார். இவர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியை அடுத்து மன்னரானார்.[1] செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி மறைந்தபோது அவருக்கு ஆண்வாரிசு இல்லாததால் அவரது தங்கை முத்துத் திருவாயி நாச்சியார் மகனான முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி 11 மாதப் பாலகனாக இருந்தபோதே சேதுபதியாகப் பட்டம் சூட்டப்பெற்றார். இவரது அரசப் பிரதிநிதியாக இவரது தாயார் முத்துத் திருவாயி நாச்சியார் பொறுப்புகளை ஏற்று நிர்வாகத்தை நடத்தி வந்தார். இவருக்குப் பிச்சை பிள்ளை. தாமோதரன் பிள்ளை என்ற இரு பிரதானிகள் உதவியாகச் செயல்பட்டு வந்தனர்.

தஞ்சாவூர் மராத்தியப் படையெடுப்பு

கி.பி. 1771 இல் தஞ்சை மராத்திய மன்னர் துளஜாஜியின் படைகள் சேது நாட்டின் வடபகுதியைக் வேகமாகக் கடந்து வந்து அனுமந்தக்குடி கோட்டையைக் கைப்பற்றி விட்டன. இந்தத் தஞ்சைப் படைகளை இராமநாதபுர அரியணைக்கு உரிமை கோரிய மாப்பிள்ளைத் தேவர் முன் நடத்தி வர இராமநாதபுரம் கோட்டையும் முற்றுகையிடப்பட்டது. தஞ்சாவூர் மராட்டிய மன்னர் துளாஜாஜியும் இந்தப் போரில் நேரிடையாகக் கலந்து கொண்டார். இரு தரப்பினருக்கும் வெற்றி தோல்வி ஏற்படா நிலையில், இந்த முற்றுகைப் போர் 30 நாட்கள் நீடித்தன. இந்த முற்றுகையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இராமநாதபுரம் தரப்பினர், இராமநாதபுரத்திற்கு மேற்கே உள்ள பெரிய கண்மாய் நீர்த்தேக்கத்தில் ஒரு உடைப்பை ஏற்படுத்தினர். இதனால் கண்மாயில் நிறைவாக இருந்த நீரானது மிகுந்த வேகத்துடன் ஓடிவந்து இராமநாதபுரம் கோட்டையை வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் சூழ்ந்திருந்த தஞ்சைப் படைகளை முழுமையாக அழித்தது. இதனால் வேறு வழியில்லாமல் தஞ்சை அரசர் சேதுபதி அரசியுடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டு ஓரளவு இழப்பீடை பெற்றுக்கொண்டு தஞ்சை திரும்பினார்.

ஆற்காடு நவாப்பின் படையெடுப்பு

தஞ்சாவூரின் படையெடுப்பு நிகழ்ந்த ஒராண்டுக்குப் பிறகு ஆற்காடு நவாபின் படைகளும், அவர்களுக்கு உதவியாக பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகளும் இணைந்து இராமநாதபுரத்தின்மீது படையெடுப்பை மேற்கொண்டு, 29. மே 1772 அன்று இராமநாதபுரம் கோட்டையை முற்றுகையிட்டன. இந்தப் படையெடுப்புக்கு ஆற்காடு நவாபின் மைந்தர் உம் தத்துல் உம்ராவும், தளபதி ஜோசப் ஸ்மித்தும் கூட்டுத்தலைமை ஏற்றனர். தொடர்ந்து மூன்று நாள்கள் இராமநாதபுரம் அரசியுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் ஆற்காடு நவாபிற்குக் கப்பம் கட்ட அரசி மறுத்துவிட்டார். இதனால் சீற்றம் கொண்ட நவாபின் மைந்தரின் ஆணைப்படி இராமநாதபுரம் கோட்டை மீது பீரங்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு கோட்டையில் உடைப்பை ஏற்படுத்தினர். பின்னர் உள்ளே படைகளை அனுப்பி போர் புரிந்தனர். போரின் முடிவில் 3000 மறவர்களை இழந்து இராமநாதபுரம் தோல்வியுற்றது. இதையடுத்து 03. சூன் 1772 அன்று அரசியும் பாலகனான சேதுபதியும் இரண்டு பெண்மக்களும் பாதுகாப்புக் கைதியாக திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். அங்கு சிறை வாழ்க்கையின்போது அரசியும் அவரது இளைய மகளும் காலமானார்கள்.

ஆற்காடு நவாபின் ஆட்சி

இதன் பிறகு சேது நாடு ஆற்காடு நவாபின் நிர்வாகத்தின் கீழ் 8 ஆண்டுகள் இருந்தது. இந்தக் கால கட்டத்தில் ஏற்கனவே தஞ்சை மன்னரது உதவியும் இராமநாதபுரம் சீமையைத் தாக்கிய ஆறுமுகம் கோட்டை மாப்பிள்ளைச்சாமித் தேவர் மைசூர் மன்னர் ஐதர் அலியின் உதவி பெற்றுச் சேதுபதிச் சீமையில் ஆற்காடு நவாபு நிர்வாகத்தை எதிர்த்துப் போரிட்டார். அவருக்கு மக்களின் ஆதரவும் பெருகிவந்தது.

மீண்டும் சேதுபதி ஆட்சி

இந்தச் சூழ்நிலையில் ஆற்காடு நவாபும் சேதுபதியும் ஒரு திட்டத்துக்கு ஒத்துவந்தனர். இதன்படி சேதுபதி மன்னர் ஆற்காடு நவாபின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு ஆண்டுதோறும் கப்பத் தொகையாக (பேஷ்குஷ்) ஒரு இலட்சம் ரூபாய் வரை நவாபிற்கு செலுத்துவது என முடிவானது. இதன் மூலம் சேது மன்னரின் சிறை வாழ்க்கையை 1780இல் முடிவுக்கு வந்து மீண்டும் மன்னரானார். மன்னர் தன் அமைச்சரான முத்திருளப்ப பிள்ளையையின் உதவியுடன் ஆட்சிபுரிந்துவந்தார்.

மோதல்கள்

சேதுபதியின் ஆட்சியின்போது கிழக்கிந்திய கம்பெனிக்கும் மன்னருக்கும் இடையில் மனத்தாபங்கள் தோன்றத் தொடங்கின. மேலும் சிவகங்கைச் சீமைக்கும் இராமநாதபுர நாட்டுக்கும் இடையில் எல்லைச் சிங்கல்களும் பகையும் தோன்றி இரு அரசுகளுக்கும் இடையில் மோதல்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. முடிவில் ஆனந்துரை அடுத்த பகுதியில் இரு சீமைப்படைகளும் நேருக்கு நேர் மோதின. இதனையறிந்த கும்பெனிக் கலெக்டரும் நவாபும் இருதரப்பினருக்கும் போர் நடவடிக்கையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். சிவகங்கை சீமையினர் இதற்கு உடன்பட்டாலும் சேதுபதி மன்னர் போர் நிறுத்தத்திற்கு உடன்படாமல் போரை நீடித்து வந்தார். இதனால் கும்பெனியாருக்கு மன்னர் மீது கோபம் ஏற்பட்டது.

இதற்கிடையில் கி.பி. 1792இல் சேதுநாட்டில் கடும் வறட்சி ஏற்பட்டது. இச்சூழ்நிலையை பயன்படுத்தி கும்பெனியார் சேதுநாட்டில் தானியங்களை விற்பனை செய்வதற்கு முன் வந்தனர். விற்பனையாகும் தானியங்களுக்குச் சுங்க விலக்கு அளிக்குமாறும் சேதுபதியை கேட்டுக்கொண்டனர். இக்கோரிக்கையை மன்னர் ஏற்க மறுத்தார். இச்சூழலில் கும்பெனியாரைச் சார்ந்து நடந்து கொள்ளுமாறு பிரதானி முத்திருளப்ப பிள்ளை, மன்னரை வற்புறுத்தி வந்தார். இதற்கு உடன்படா மன்னர் பிரதானியைப் பதவி நீக்கம் செய்தார்.

அடுத்து இராமநாதபுரம் சீமையில் உற்பத்தியாகும் கைத்தறித் துணிகள் அனைத்தையும் ஏகபோகமாக கும்பெனியாரே வாங்குதற்கும், கொள்முதல் செய்வதற்கும் மன்னரது அனுமதியைக் கோரினர். மன்னர் இந்தக் கோரிக்கையையும் மறுத்தளித்து விட்டார்.

கைது

இந்த சம்பவங்களால் மன்னரைத் ஒழித்துக் கட்டுவது என கும்பெனித் தலைமை முடிவு செய்தது. இதை செயல்படுத்த. கி.பி. 1795-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் நாள் வைகறையில் பாளையங்கோட்டை, கயத்தாறு ஆகிய ஊர்களிலிருந்து வந்த கும்பெனியாரின் பெரும்படை இராமநாதபுரம் கோட்டைக்குள் புகுந்து, அரண்மனையைச் சுற்றி வளைத்து மன்னரைக் கைது செய்தது. அடுத்தநாள் மன்னர் திருச்சிக் கோட்டைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிறை வைக்கப்பட்டார்.

இதற்கிடையில் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் தளபதிகளில் ஒருவரான மயிலப்பன் சேர்வைக்காரர் மன்னரை மீண்டும் பதவியில் அமர்த்த பல முயற்சிகளில் ஈடுபட்டு மக்களைத் திரட்டி புரட்சியில் ஈடுபட்டார். இவற்றை கும்பெனியார் முறியடித்தனர்.

மறைவு

இதற்கிடையில் சேதுபதி மன்னரை திருச்சிக் கோட்டையில் இருந்து சென்னைக் கோட்டைக்கு மாற்றி சிறைவைத்தனர். இதன் தொடர்ச்சியாக 23- சனவரி -1809 ஆம் நாள் இரவு மன்னர் காலமானார்.[2]

இவரது வரலாறு குறித்து வரலாற்றாளர் எசு. எம். கமால் விடுதலைப்போரில் சேதுபதி மன்னர் என்ற நூலை விரிவாக எழுதியுள்ளார்.


மேற்கோள்கள்

  1. டாக்டர் எஸ். எம். கமால் (1997). விடுதலைப்போரில் சேதுபதி மன்னர். இராமநாதபுரம்: ஷர்மிளா பதிப்பகம். pp. 10.
  2. டாக்டர். எஸ். எம். கமால் (2003). சேதுபதி மன்னர் வரலாறு. இராமநாதபுரம்: சர்மிளா பதிப்பகம். pp. 59 - 70.