முகவை பொன்னுசாமித் தேவர்
முகவை பொன்னுசாமித் தேவர் (1837-1870) தமிழறிஞர் ஆவார். இவர் பாண்டித்துரைத் தேவரின் தந்தையாவார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
முகவை பொன்னுசாமித் தேவர் |
---|---|
பிறந்ததிகதி | 1837 |
பிறந்தஇடம் | புதுமடம், இராமநாதபுரம் |
இறப்பு | 1870 (அகவை 32–33) |
அறியப்படுவது | தமிழறிஞர் |
பெற்றோர் | சிவஞானத் தேவர் முத்துவீராயி |
பிள்ளைகள் | பாண்டித்துரைத் தேவர் |
வாழ்க்கைக் குறிப்பு
பொன்னுசாமித் தேவர் இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள புதுமடம் எனும் சிற்றூரில் 1837 ஆம் ஆண்டில் பிறந்தவர். இவரது பெற்றோர் சிவஞானத் தேவர்- முத்துவீராயி ஆகியோர் ஆவர்.
19-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சேது நாட்டை ஆண்ட இராமசாமி சேதுபதி 1830-இல் காலமானார். அதற்குப் பின்னர் சில காலம் ஆட்சி செய்த அவருடைய மனைவிக்கு வாரிசு இல்லாததால், அவருடைய தங்கை மகன் ஐந்து வயதுப் பாலகர் முத்துராமலிங்கத்தை 1847-இல் வாரிசாக ஏற்றார். அப்போது பொன்னுசாமித் தேவர், தம் பதினேழாம் வயதில் தந்தை சிவஞானம் பொறுப்பேற்றிருந்த பதவியை ஏற்கும் நிலை ஏற்பட்டது. முத்துராமலின்கம் வயதுக்கு வரும் வரை ஆட்சிப் பொறுப்பைப் பார்த்துக்கொண்டு அரண்மனை நிர்வாகத்தை மேற்கொண்டார். சமஸ்தான அரசியல் காரியங்களைத் திறம்பட நிர்வகித்து பெரும் புகழ் பெற்றார். தமது இருபதாம் வயதில் தம் இளவல் முத்துராமலிங்க சேதுபதியின் வேண்டுதலுக்கு இணங்க அமைச்சர் ஆனார்.[1]
எழுத்துப் பணிகள்
இவர் தமிழ் நூல்களை நன்கு கற்றிருந்தார். தமிழ்ப் புலமையிலும், தமிழ் நூல்களை ஆதரிப்பதிலும், அரசியலறிவிலும் அவர் நிகரற்று விளங்கியதோடு சிறந்த இசை மேதையாகவும் திகழ்ந்தார்.[1] தில்லையம்பூர் சந்திரசேகர கவிராயர், ஆறுமுக நாவலர் ஆகியவர்களின் நூல்களை அச்சிடுவதற்குப் பொருளுதவி செய்தார். சேது புராணம், பரிமேலழகர் உரை, இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம் முதலான பல நூல்களை ஆறுமுக நாவலரின் ஆய்விலும், பார்வையிலும் அச்சிடுவதற்கு ஏற்பாடுகள் செய்தவர் இவரே. பல்வேறு புலவர்கள் பாடிய தனிப் பாடல்களைத் தில்லையம்பூர் சந்திரசேகர கவிராயரின் துணைகொண்டு தொகுத்ததோடு, பலகவித் திரட்டு என்ற பெயரில் வெளியிட்டார். தமிழில் வெளியான முதல் தனிப்பாடல் தொகுதி என்ற பெருமையை அது பெற்றது.[1] இவரது பேச்சு, எழுதிய கடிதங்கள் அனைத்தையும் தொகுத்து, தனிச்செய்யுள் சிந்தாமணி எனும் பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
மறைவு
மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் உருவாகக் காரணமாக இருந்தவர் பாண்டித்துரைத் தேவர். அப்பாண்டித்துரைத் தேவர் இவரின் புதல்வர் ஆவார். 33 ஆண்டுகள் வாழ்ந்த பொன்னுச்சாமித் தேவர் 1870 ஆம் ஆண்டு மறைந்தார்.
மேற்கோள்கள்
- மயிலை சீனி.வேங்கடசாமி, " பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்"- மெய்யப்பன் தமிழாய்வகம்-2001.
- பெரியபெருமாள்," தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்"- மதிநிலையம -2001.