முகம்மது மீர் ஜவாது புலவர்
முகம்மது மீர் ஜவாது புலவர் (பிறப்பு 1745) என்பவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் புலவராவார்.
வரலாறு
முகம்மது மீர் ஜவாது தற்போதைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியை அடுத்த எமனேஸ்வரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். தமிழில் புலமை மிக்க இவர். இராமநாதபுரத்தை ஆண்ட புகழ்மிக்க கிழவன் சேதுபதி என்ற செல்ல முத்து ரகுநாத சேதுபதி மன்னரின் அரசவைக் கவிஞராகவும், அரசியல் ஆலோசகராகவும் திகழ்ந்தவர். இவருக்கு சேதுபதி மன்னர் பரமக்குடி அருகே சுவாத்தன், வண்ணவயல் ஆகிய இரண்டு கிராமங்களை நிலக்கொடையாக வழங்கினார்.
படைத்த இலக்கியங்கள்
இவர் தமிழில் பல இசுலாமிய மற்றும் இந்து ஆண்மீக இலக்கியங்களைப் படைத்துள்ளார் அவை முகையதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத் தந்தாதி, ராஜராஜேஸ்வரி பஞ்சரத்ன மாலை, வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள், சித்திரக் கவிகள், மாலை, குமரையா பதிகம் போன்ற இலக்கியங்களைப் படைத்துள்ளார். மேலும் ரகுநாத சேதுபதி, பிரம்பூர் ஆனந்த ரங்கதுரை, முத்துகிருஷ்ணன், கச்சி செல்லப்பன் உள்ளிட்ட வள்ளல்களையும் பாடியுள்ளார்.
கோயிலில் சிலை
இராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் என்ற சுப்பிரமணியசுவாமி கோயில் மீது ஜவாது புலவர் பல பதிகங்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய பதிகங்களை கல்வெட்டாக செலுக்கி கோயிலினுள் பதித்துள்ளனர். மேலும் புலவரை கவுரவப்படுத்தும் விதமாக, கோயிலின் விமானத்தில் அவரது சிலையை சுதையில் அமைத்து பெருமைபடுத்தியுள்ளனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ எஸ்.முஹம்மது ராஃபி (22 அக்டோபர் 2016). "முருகன் கோயிலில் முஸ்லிம் புலவருக்கு சிலை: மத நல்லிணக்கத்துக்கு சான்றாக விளங்கும் மேலக்கொடுமலூர்". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2016.