மிருதுளா கார்க்
இயற்பெயர் | மிருதுளா கார்க் |
---|---|
பிறந்ததிகதி | 25 அக்டோபர் 1938 |
பிறந்தஇடம் | கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியா |
தேசியம் | இந்தியன் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (2013) |
மிருதுளா கார்க் (பிறப்பு 25 அக்டோபர் 1938) இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதுகிறார். [1][2]புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், நாடகங்கள் மற்றும் கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 30 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். ஆங்கில மொழியில் மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ளார். மிருதுளா கார்க் சாகித்திய அகாதமி விருதைப் பெற்ற எழுத்தாளர் ஆவார்.
வாழ்க்கை
மிருதுளா கார்க் 1938 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவில் கொல்கத்தாவில் பிறந்தார். இவர் இந்தி மொழியின் பிரபலமான எழுத்தாளர் ஆவார். இவர் இந்தியில் புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், நாடகங்கள் மற்றும் கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 27 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் மூன்று புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவர் 1960 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் முதுகலைப் பெற்றார். மேலும் டெல்லி பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகள் பொருளாதாரம் கற்பித்தார்.
இவரது புதினங்கள் வழக்கத்திற்கு மாறான எழுத்து நடை, கருப் பொருட்களின் துணிச்சல் என்பன விமர்சகர்களாலும், இரசிகர்களாலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. மிருதுளாவின் புதினங்கள் மற்றும் சிறு கதைகள் ஜெர்மன், செக், சப்பானிய மற்றும் ஆங்கிலம் போன்ற பல வெளிநாட்டு மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளன. கட்டுரையாளரான இவர் சுற்றுச்சூழல், பெண்களின் பிரச்சினைகள், குழந்தை அடிமைத்தனம் மற்றும் இலக்கியம் குறித்து எழுதுகின்றார். 1985 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டிற்கு இடையில் கொல்கத்தாவில் இருந்து வெளிவந்த ரவிவர் இதழில் பரிவர் என்ற பதினைந்து வார கட்டுரையும், 2003 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆண்டுக்கு இடையில் இந்தி மொழியில் வெளியான இந்தியா டுடே பத்திரிகையில் கட்டாக் என்ற மற்றொரு கட்டுரையும் எழுதினார்.
1990 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கலிபோர்னியா-பெர்க்லி பல்கலைக்கழகத்தில் உள்ள தெற்காசிய ஆய்வுகள் மையத்தின் ஆராய்ச்சியாளராக இருந்தார். பல்கலைகழகங்களிக்கும், மாநாடுகளுக்கும் இந்தி இலக்கியம் மற்றும் விமர்சனம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து பேச யூகோஸ்லாவியா (1988), ஐக்கிய அமெரிக்கா (1990 மற்றும் 1991), செருமன் (1993) ஆகிய நாடுகளுக்கு சென்றார். யப்பான் (2003), இத்தாலி (2011), டென்மார்க் மற்றும் உருசியா (2012) ஆகிய நாடுகளுக்கும் அழைக்கப்பட்டார். இவரது விரிவுரைகள், ஆவணங்கள் மற்றும் கதைகள் பல்வேறு பன்னாட்டு பத்திரிகைகளில் தொகுக்கப்பட்டுள்ளன.
விருதுகளும், மரியாதைகளும்
1988 ஆம் ஆண்டில் சாகித்ய சன்மன் விருது இந்தி அகாதமியினால் வழங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டில் சாகித்ய பூசன் விருது, 2001 ஆம் ஆண்டில் நியூயார்க் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் துணிச்சலான எழுத்துக்கான ஹெல்மேன்-ஹேமெட் கிராண்ட் மரியாதை என்பன வழங்கப்பட்டன. 2003 ஆம் ஆண்டில் சுரினாமில் உள்ள விஸ்வ இந்தி சம்மேளத்தினால் இலக்கியத்திற்கான வாழ்நாள் பங்களிப்புக்காக கௌரவிக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் இந்தியில் சிறந்த புனைக் கதைக்கான வியாஸ் சன்மன் விருது, 2013 ஆம் ஆண்டில் மில்ஜுல் மான் என்ற புதினத்திற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றுக் கொண்டார்.[3] 2016 ஆம் ஆண்டில் ராம் மனோகர் லோஹியா சம்மன் விருது, குவாலியர் ஐடிஎம் பல்கலைக்கழகத்திலிருந்து "ஹானோரிஸ் கவ்சா" விருது என்பன வழங்கப்பட்டன.
சான்றுகள்
- ↑ "AGNI Online: Author Mridula Garg". http://www.bu.edu/agni/authors/M/Mridula-Garg.html.
- ↑ "Oxford University Press: Anitya: Mridula Garg" இம் மூலத்தில் இருந்து 2012-10-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121019002515/http://www.oup.com/us/catalog/general/subject/LiteratureEnglish/WorldLiterature/India/?view=usa&ci=9780198065258&view=usa.
- ↑ ""Poets dominate Sahitya Akademi Awards 2013"" இம் மூலத்தில் இருந்து 2013-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131219002741/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/award2013-e.pdf.