மா. இளையபெருமாள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாணிக்கவாசகம் இளையபெருமாள் (1924 பிப்ரவரி 291984, இந்தியா, தாழக்குடி) என்னும் மா. இளையபெருமாள் தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வல்லவர். தமிழ்ப் பேராசிரியர். கவிஞர், மொழிபெயர்ப்பாளர்.

பிறப்பு

மா. இளையபெருமாள் தமிழ்நாட்டின் தென்முனையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் தாழக்குடி என்னும் ஊரில் மாணிக்கவாசகம் – மாரியம்மாள் இணையருக்கு மகனாக 1924 பிப்ரவரி 29 ஆம் நாள் பிறந்தார்.[1]

கல்வி

இவர் தனது உயர்நிலைக் கல்வியை சே. இ. பா. உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். திருநெல்வேலியில் அமைந்துள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரியில் இடைநிலை வகுப்புப் (Intermediate) பயின்றார். சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழிலக்கியத்தில் சிறப்பு கலை இளவர் (B.A Honours) பட்டம் பெற்றார். பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து 1954 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]

பணி

மா. இளையபெருமாள் முனைவர் பெற்ற உடனேயே கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் எனப் படிப்படியாக உயர்ந்து 1984 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.[2]

மொழிபெயர்ப்பு

மும்மொழி அறிஞரான மா. இளையபெருமாள் தமிழிலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம், நேமிநாதம் ஆகியவற்றை மலையாளத்தில் மொழிபெயர்த்து இருக்கிறார்.[1]

மலையாள இலக்கியங்களான லீலாதிலகம், கேரளபாணினீயம், முனைவர் கெர்மன்குட் எழுதிய மலையாள மொழி இலக்கணம் – சொற்றொடர் காண்டம்,[2] நாராயணகுரு அடிகளாரின் தேவாரப் பாடல்கள், வள்ளத்தோள் படைப்புகள் ஆகியற்றை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.[1]

படைப்புகள்

மா. இளையபெருமாள் 150க்கும் மேற்பட்ட கவிதைகளை இயற்றி இருக்கிறார். இக்கவிதைகள், வாழ்க்கை வண்ணம் என்னும் கவிதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளன.[2]

பொறுப்புகள்

தமிழ்ப் பேராசிரியரான மா. இளையபெருமாள் பணிவழிப் பொறுப்பாக பாரதிய ஞானபீட விருது தேர்வுக்குழு, தென்னாட்டுப் பல்கலைக் கழகப் பாடத்திட்டக் குழு, திராவிட மொழியியல் கழகம், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார்.[1]

மறைவு

மா. இளையபெருமாள் தனது 60ஆம் அகவையில் 1984 ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.[2]

சான்றடைவு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 அமுதம் தகவல் களஞ்சியம்
  2. 2.0 2.1 2.2 2.3 வைத்தியநாதன் கே., தினமணி செம்மொழிக் கோவை: உலகச் செம்மொழி மாநாடு 2010 சிறப்பு மலர், சூலை 2010, பக்.296

வெளியிணைப்பு

"https://tamilar.wiki/index.php?title=மா._இளையபெருமாள்&oldid=26114" இருந்து மீள்விக்கப்பட்டது