மாஷா நஸீம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாஷா நஸீம்
Masha Nazeem

கண்டுபிடிப்பாளர்
தனிநபர் தகவல்
பிறப்பு 1993 (அகவை 31–32)
இரவிபுதூர் கடை,
கன்னியாகுமரி மாவட்டம்
தேசியம் இந்தியர்
கல்வி
இணையம் www.mashanazeem.in

மாஷா நஸீம் (Masha Nazeem) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இளம் விஞ்ஞானியாவார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள இரவிபுதூர்கடை இவருடைய சொந்த ஊராகும்.[1] 1993 ஆம் ஆண்டு மாஷா பிறந்தார். ஓவியம் வரைவதிலும் பரதநாட்டியம் ஆடுவதிலும் ஈடுபாடு கொண்டிருந்த மாஷாவின் ஆர்வம் ஒன்பதாவது வயதில் அறிவியலின் பக்கம் திரும்பியது. பள்ளிப் பருவம் முதல் மாஷா பல புதிய கருவிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கிவிட்டார். பயனுள்ள இக்கண்டுபிடிப்புகள் மாஷாவுக்கு விருதுகள் பலவற்றைப் பெற்றுக் கொடுத்துள்ளன. 14 புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய மாஷா முதலமைச்சர் முதல் குடியரசுத் தலைவர் வரையிலான பல தலைவர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மாணவர்கள் மத்தியில் அறிவியலை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் மாஷா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் நகரத்தில் 1993 ஆம் ஆண்டு காஜா நஸீமுக்கும் சுமையா பேகத்திற்கும் மகளாக மாஷா பிறந்தார். தந்தை காஜா நஸீம் நாகர்கோவிலில் மாவட்டக் கருவூல அலுவலராகப் பணிபுரிகிறார்.[2] தங்கையின் பெயர் இன்ஷா நஸீம் என்பதாகும். .

கல்வி

நாகர்கோவிலுள்ள புனித ஜோசப் கான்வெண்ட்டு மேல்நிலைப் பள்ளியில் [3] படித்த மாஷா திருச்செங்கோடு வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் +2 படிப்பை முடித்தார். எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் மின்பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் இவர் சென்னையிலுள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஆற்றல் மின்னணுவியியல் பாடத்தில் முதுநிலை தொழில்நுட்பவியல் பட்டம் பெற்றார்.

2016 ஆம் ஆண்டு சிங்கப்பூரிலுள்ள உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடந்த ‘நம்பிக்கை விதை’ பயிலரங்கில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் மாணவி மாஷா நஸீம் சிங்கப்பூர் உயர்நிலை 1 மாணவர்களுடன் தனது சாதனை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.[4]

கண்டுபிடிப்புகள்

இடர் அலறி

மாஷாவிற்கு 9 வயதாக இருக்கும்போது பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி ஒன்றில் வீட்டிற்கு திருடன் வந்தால் எப்படித் தெரிந்து கொள்வது என்பதற்காக அலாரம் ஒன்றை கண்டுபிடித்தார். பர்க்ளர் அலாரம் எனப்படும் இந்த இடர் அலறி கருவியே மாஷாவின் முதல் கண்டுபிடிப்பாகும்.[5]

அதி நவீன இரயில் கழிப்பறை

இரயில் பயணிகளில் சிலர் இரயில் நிலையத்தில் வண்டி நிற்கும்போது கழிப்பறையை உபயோகிப்பார்கள். இதனால் இரயில் நிலையம் தூய்மையற்றுப் போகும். இச்சிக்கலை தீர்ப்பதற்காக அதி நவீன இரயில் கழிப்பறையை 2005 ஆம் ஆண்டில் மாஷா கண்டுபிடித்தார். நிலையத்தில் வண்டி நிற்கும்போது இரயில் பெட்டிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளின் அடியிலுள்ள திறந்த பகுதி தானாகவே மூடிக்கொள்ளும். நிலையத்தை விட்டு இரயில் புறப்பட்டவுடன் ஓட்டுநர் மீண்டும் இத்திறப்பை திறந்து விடும் வகையில் இக்கழிப்பறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு தொடக்கத்தில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் பிற்காலத்தில் பெரிய அங்கீகாரம் பெற்றது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பாராட்டையும் பெற்றது. இக்கழிப்பறைக்கான காப்புரிமையையும் மாஷா பெற்றுள்ளார்.[3][6]

இந்தக் கண்டுபிடிப்பால் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 46 நாடுகள் கலந்துகொண்ட உலக கழிவறைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அதில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கும் வாய்ப்பை மாஷா பெற்றார்.

மின் அரக்கு முத்திரை

முக்கியமான கடிதங்கள், ஆவணங்கள், காப்பறைகள் போன்ற பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை தொடர்பான நடவடிக்கைகளுக்காக பல்வேறு இடங்களில் அரக்கு முத்திரை பதித்து பாதுகாக்கும் நடைமுறை நாடெங்கிலும் பின்பற்றப்படுகிறது. இதற்காக எரியும் தீச்சுவாலையில் அரக்கை உருக்கி வைத்து அதன்மேல் முத்திரைகளை பதியச் செய்யும் நடைமுறை வழக்கத்திலிருக்கிறது. நெருப்பைப் பயன்படுத்தாமல் மின்சாரத்தைப் பயன்படுத்தி ஆபத்தில்லாமல் முத்திரையை பதியச்செய்யும் மின் அரக்கு முத்திரை முறையை மாஷா கண்டுபிடித்தார். இக்கருவிக்கான காப்புரிமையும் மாஷாவுக்கு கிடைத்துள்ளது.[7][8] தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது வாக்குச் சாவடிகளில் முத்திரை வைக்கும் நடைமுறையில் சில வாக்குச் சாவடிகளில் மின் முத்திரை கருவி பயன்படுத்தப்பட்டது.[2]

எந்திரச் சுமைதூக்கி

பேருந்து, இரயில், விமான நிலையங்களில் வயதான பயணிகள் பெரிய சுமைகளை எளிதாகக் கொண்டு செல்லும் வகையில் எந்திரச் சுமைதூக்கி ஒன்றையும் மாஷா உருவாக்கியுள்ளார். சாதாரணமாக வழக்கத்திலுள்ள சுமை கொண்டு செல்லும் வண்டிகளின் உயரத்தை மாற்ற முடியாது. சுமைகளைத் தூக்கி வண்டிகளில் வைத்துதான் அவற்றை உந்தி தள்ளிச் செல்ல வேண்டும். சுமையை தூக்கி வண்டியில் வைக்கமுடியாமல் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். இவர் கண்டுபிடித்துள்ள கருவியில் சுமை இருக்கும் உயரத்திற்கேற்ப வண்டியின் பொருள் வைக்கும் பகுதியை உயர்த்தியோ தாழ்த்தியோ பயன்படுத்தமுடியும். வீடுகளில் கூட இச்சுமைதூக்கியைப் பயன்படுத்தி எரிவாயுக் கலன், குடிநீர்க் கலன் போன்றவற்றை தேவையான உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும்.[8]

சாலையடி நகரும் பட்டை

பள்ளி மாணவர்கள் புத்தகப்பையை சுமந்துகொண்டு மேம்பாலத்தை ஏறி கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இச்சிரமத்தைக் குறைக்க சாலைக்கடியில் நகரும் பட்டை அமைப்பை மாஷா கண்டுபிடித்தார். இப்பட்டையில் புத்தகப்பையை வைத்து இயக்கிவிட்டால் புத்தகப்பையானது சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு சென்றுவிடும்.[3][6][7]

மாஷா ஆக்கத்திறன் மையம்

மாஷா ஆக்கத்திறன் மையம் என்ற பெயரில் ஓர் ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் பட்டறையை நாகர்கோவில் நகரத்திலுள்ள பார்வதிபுரத்தில் நிறுவி, அறிவியல் கண்டுபிடிப்புக்களில் மாணவர்கள் ஆர்வமுடன் ஈடுபடுவதற்காக மாஷா அவர்களை ஊக்குவித்து வருகிறார். அறிவியல் சிந்தனையுள்ள கிராமப்புற மாணவ, மாணவியர்களின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்காக இலவச பயிற்சிகளை அளிப்பது இம்மையத்தின் முக்கிய அம்சமாகும். இந்த கண்டுபிடிப்பு மையத்தின் மூலம் மாஷா நிறைய மாணவர்களின் சிந்தனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். அச்சிந்தனையாளர்களை கண்டுபிடிப்பாளர்களாக மாற்றவும் முயற்சித்து வருகிறார்.[6][9] இம்மையத்தின் மூலம் இதுவரை 7 மாணவர்கள் தேசிய விருது பெற்றுள்ளார்கள். பலர் தென்னிந்திய, மாநில, மாவட்ட விருதுகள் வென்றுள்ளார்கள்.

சிறப்புகள்

2006 ஆம் ஆண்டு மாஷா அவருடைய 12 ஆவது வயதில், இரயில்களின் வடிகால் அமைப்பைக் கண்டுபிடித்ததற்காக ஐதராபாத் இந்திய அறிவியல் காங்கிரசிற்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.[10] 2015 ஆம் ஆண்டு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி திட்டத்திற்காக அமெரிக்கா செல்வதற்கு மாஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] 2016 ஆம் ஆண்டு, 103 வது இந்திய அறிவியல் மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராக மாஷா அழைக்கப்பட்டார்.[12] தற்போது மாஷா ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பள்ளியில் ஒரு விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார்.[13]

விருதுகள்

  1. 2009- இக்னைட்டு தேசிய விருது – இரண்டாம் பரிசு [12]
  2. 2010- இக்னைட்டு தேசிய விருது –முதல் பரிசு [12]
  3. 2015- இரண்டு தேசிய விருதுகள் மற்றும் ஒரு பன்னாட்டு விருது [9]
  4. 2016- முதலமைச்சர் மாநில இளைஞர் விருது [14][15]
  5. 2018- தேசிய இளைஞர் விருது [16]

மேற்கோள்கள்

  1. "24-year-old Masha Nazeem to receive National Youth Award". shethepeople.tv. பார்க்கப்பட்ட நாள் 27 February 2020.
  2. 2.0 2.1 Iqbal, Naveed (11 March 2012). "President plays host to India's innovators - Indian Express". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 16 June 2020.
  3. 3.0 3.1 3.2 Sebastian, Don (11 September 2005). "TN girl's gadget to keep rail tracks clean". DNA India (in English). பார்க்கப்பட்ட நாள் 17 June 2020.
  4. tamilmurasuweb (2016-04-20). "'நம்­பிக்கை விதை' விதைத்த மாணவி மாஷா நஸீம்". Tamil Murasu. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05. {{cite web}}: soft hyphen character in |title= at position 5 (help)
  5. Correspondent, Vikatan. "ஜென் Z - நான் மாஷா நஸீம் ஆனது எப்படி?". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  6. 6.0 6.1 6.2 "Accolades galore for this innovator". Times of India. பார்க்கப்பட்ட நாள் 27 February 2020.
  7. 7.0 7.1 PTI (21 November 2008). "TN girl designs 'flameless sealmaker' | Chennai News - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 16 June 2020.
  8. 8.0 8.1 Behera, Bidyadhar (2016). Entrepreneurship Text and cases. MJP Publishers. pp. 71–72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8094-215-0. பார்க்கப்பட்ட நாள் 2020-06-12 – via Google Books.
  9. 9.0 9.1 "Meet Masha, social inventor chosen for CM's youth award". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 27 February 2020.
  10. Chaudhuri, Arjun (4 January 2006). "Take remedial action - National pride". Hindustan Times (in English). பார்க்கப்பட்ட நாள் 16 June 2020.
  11. "Kanyakumari student selected for EDT Programme in US". The Hindu. 4 May 2015. https://www.thehindu.com/news/national/tamil-nadu/kanyakumari-student-selected-for-edt-programme-in-us/article7169094.ece. 
  12. 12.0 12.1 12.2 "An Incredible Indian Young Scientist Masha Nazeem has Invented various Useful Products". FutureEnTech (in English). 3 January 2016. பார்க்கப்பட்ட நாள் 16 June 2020.
  13. "Khaleej Times spoke to some educators who have implemented The Genius Hour into their classrooms". Khaleej Times. பார்க்கப்பட்ட நாள் 27 February 2020.
  14. "CLRI scientist bags A P J Abdul Kalam award". The Economic Times. 15 August 2016. https://economictimes.indiatimes.com/news/science/clri-scientist-bags-a-p-j-abdul-kalam-award/articleshow/53708946.cms. 
  15. PTI (15 August 2016). "CLRI scientist bags A P J Abdul Kalam award". India Today (in English). பார்க்கப்பட்ட நாள் 16 June 2020.
  16. "TN girl to receive prestigious national award". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 27 February 2020.

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மாஷா_நஸீம்&oldid=25825" இருந்து மீள்விக்கப்பட்டது