இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாட்டூர் என்றழைக்கப்பட்ட மாத்தூர் என்னுமிடத்தில், திருக்கடையூருக்கு அருகில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயர் திசை தெரியாமல் வந்தபோது சிவன் அவருக்கு இவ்விடத்தைக் காட்டி அருள் செய்துள்ளார். இறைவனின் அருளானது சத்தியவாக்கு போல மார்க்கண்டேயருக்கு அமைந்ததால் மூலவர் அதனை நினைவுகூறும் வகையில் சத்திய வாசகர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.[2]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக சத்திய வாசகர் உள்ளார். இங்குள்ள இறைவி சௌந்தரநாயகி ஆவார். இக்கோயிலின் தீர்த்தம் மகாலட்சுமி தீர்த்தமாகும். ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் வைப்புத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும்.[2]
அமைப்பு
விநாயகர், முருகன், கண்வ மகரிஷி, பைரவர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன.
[2]
வரலாறு
சோழ மன்னர்
சோழ மன்னர் ஒருவர் தோல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்காக ஒரு வண்டிக்காரர் தினமும் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து தந்துள்ளார். நெடுநாளாக இந்த முறை தொடர்ந்தபோதிலும் மன்னரின் நோய் தீரவில்லை. அவ்வாறு எடுத்து வருகின்ற ஒரு நாளில் அவர் எடுத்துவந்த தண்ணீர் கொட்டிவிட்டது. செய்வதறியாது திகைத்த அந்த வண்டிக்காரர் அருகேயிருந்த வில்வவனத்திலிருந்து தண்ணீரை எடுத்துச் சென்றார். அதில் மன்னர் குளித்ததும், நோய் முற்றிலும் நீங்கிவிட்டது. அவ்விடத்தின் பெருமையை உணர்ந்த மன்னர் தன்னுடைய நன்றிக்கடனை வெளிப்படுத்தும் வகையில் அங்கு ஒரு கோயிலை அமைத்தார்.
கண்வ மகரிஷி
கண்வ மகரிஷி மயிலாடுதுறையில் காவிரியாற்றில் குளித்துவிட்டு தில்லையம்பதி நோக்கிப் பயணமானார். அப்போது அவருக்குக் காவிரிப்பூம்பட்டினத்தில் குளிக்கும் எண்ணம் தோன்றியது. காவிரி கலக்கும் இடம் என்ற நிலையில் அங்கு குளிக்கச் சென்றார். அப்போது அவர் சிவபூசை செய்வதற்கான நேரம் வரவே, அங்கிருந்த வில்வ மரங்களுக்கிடையே சிவனை அமைத்து வழிபடத் தொடங்கினார். இறைவனின் அருளைப் பெற்று அவ்விடத்தின் பெருமையை நன்கு உணர்ந்தார்.
திருவிழாக்கள்
சிவராத்திரி, பௌர்ணமி, பிரதோஷம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009