மாசி சடையன்
மாசி சடையன் (Masi Sadaiyan) என்பவர் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தினைச் சேர்ந்த புகழ்பெற்ற பாம்பு பிடிப்பவர். 2023-ஆம் ஆண்டில் சமுதாயப் பணியாற்றியமைக்காக வடிவேல் கோபாலுடன் இணைந்து இந்திய அரசு குடிமக்களுக்கு வழங்கும் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதினைப் பெற்றவர். இருளர் சமூகத்தினரான இவர், இருளர் பாம்புப் பிடிப்புக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளார். இவர் நச்சுப் பாம்பு உள்ளிட்ட பலவகைப் பாம்புகளையும் இருளர்களின் பாரம்பரிய முறைப்படி பிடிப்பவர்.[1]
பல ஆண்டுகளாக பல்வேறு மனித வாழிடங்களில் காணப்படும் நச்சுப் பாம்புகளை பிடித்து மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியுள்ளார். இப்பாம்புகளிலிருந்து நச்சினை எடுத்து மருந்தாகப் பயன்படுத்த உதவியதோடு, பிடிக்கும் பாம்புகளை வனத்தில் இட்டு பல்லுயிர் பெருக்கத்திற்கும் தனது பங்களிப்பினைப் பதினாறாவது வயது முதல் செய்து வருகின்றார். இவரது பணியினைப் பாராட்டும் வகையில் இவருக்கு 2023ஆம் ஆண்டிற்கான பத்மசிறீ விருதினை இந்திய அரசு வழங்கியுள்ளது. இவருடன் பாம்புகளைப் பிடிக்கும் வடிவேல் கோபாலும் இந்த விருதினைப் பெறுகிறார்.[2] இவர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் பலபகுதிகளிலும் பல ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்துள்ளனர்.
உரோமுலசு விட்டேக்கரின் உதவியுடன் 2016ஆம் ஆண்டு தாய்லாந்துக்குச் சென்று ராஜநாகங்களையும் 2017ஆம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்குச் சென்று, பிடிப்பதற்கு அரிய பர்மிய பைத்தான் வகை பாம்புகளையும் பிடித்துள்ளனர்.[3][4]
மேற்கோள்கள்
- ↑ Srimathi, Geetha (2023-02-02). "Bravehearts Vadivel and Sadaiyan shine a light for Irula cooperative" (in en-IN). https://www.thehindu.com/news/national/tamil-nadu/bravehearts-vadivel-and-sadaiyan-shine-a-light-for-irula-cooperative/article66464742.ece.
- ↑ சுகுமாறன் (2023-01-25). "இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாசி சடையன், வடிவேல் கோபாலுக்கு பத்மஸ்ரீ விருது - மக்கள் மகிழ்ச்சி" (in ta). https://tamil.abplive.com/news/tamil-nadu/padma-awards-2023-masi-sadaiyan-vadivel-gopal-from-tamil-nadu-to-receive-padma-shri-award-98254.
- ↑ https://tamil.oneindia.com/news/chennai/padma-shri-award-for-snake-catchers-vadivel-gopal-and-masi-sadaiyan-from-tamilnadu/articlecontent-pf851861-495910.html
- ↑ ""பத்மஸ்ரீ விருதுன்னா என்ன?" விஷ பாம்புகளை பிடிக்கும் இந்த தமிழர்கள் இப்படி கேட்டது ஏன்?" (in ta). 2023-01-26. https://www.bbc.com/tamil/articles/c84ezvv3w2no.