மலக்கியார் சுவாமிநாதர்
மலக்கியார் சுவாமிநாதர் ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். ஒலிப்பெருக்கி இல்லாத காலகட்டத்தில் தன் குரல் வளத்தாலும், நடிப்புத்திறமையாலும் ரசிக்கப்பட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
மலக்கியார் சுவாமிநாதர் இலங்கை யாழ்ப்பாணம் குருநகரில் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். அண்ணாவியார் மனுவல் இளையப்பா, அண்ணாவியார் பக்கிரி சின்னப்பாவிடம் கூத்து பழகினார். இவரது பேரன் அண்ணாவிக்குருசு இவருக்கு மிகவும் ஊக்கமளித்தார்.. தனது குடும்பத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பின் காரணமாக 1990-ம் ஆண்டுக்குப்பின் கலைப்பணியாற்றுவதை விட்டு விட்டார்.
கலை வாழ்க்கை
மலக்கியார் சுவாமிநாதர் குரல்வளம் மிக்கவர். தாளத்திலும், பின்னனி பாடுவதிலும் திறமை கொண்டவர். மாதகல், மாரிசன்கூடல், பருத்தித்துறை, முல்லைத்தீவு, செம்பியன்பற்று, மணற்காடு, குடத்தனை, கட்டக்காடு, வெற்றினைக்கேணி ஆகிய இடங்களில் கூத்து பழகி மேடையேற்றினார். 1964-ல் 'வாழ்க்கைப்புயல்' நாட்டுக்கூத்தை பெண்பிள்ளைகளுக்கு பழக்கி மேடையேற்றினார். அண்ணாவியார் பல இடங்களிலும் தானும் நடித்தும், கூத்துப் பழக்கியும் கலைப்பணி செய்தார். மூல நாட்டுக்கூத்தைப் பாடும் பொழுது அண்ணாவிமார்கள் மூல இசையுடன் பாடுவதும், சற்று கர்நாடக சாயல் கலந்த இசைகலந்து பாடுவதும் உண்டு. பெரும்பான்மை அண்ணாவிமார்கள் கர்நாடக இசை கலப்பதை விரும்புவதில்லை. இவர் இசை கலந்து பாடுவதையே விரும்பினார். இவர் தனது அனுபவங்களைக் கூறும்பொழுது, நாட்டுக்கூத்து 1940 அளவில் குருநகரில் நீண்டமேடையில் 65 அடி, 18 அடி என இரு பிரிவாக மேடை அமைத்து ஆடப்பட்டதாகவும், 1957-ம் ஆண்டு 'மீகாமன்' ஆட்ட நாட்டு நாட்டுக்கூத்து கரை ஊரில் ஆடப்பட்டதாகவும் கரப்பு உடுப்பு கெரூடம் வைத்து வட்டக்களரியில் ஆடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
நடித்த நாட்டுக் கூத்துக்கள்
- அக்கினேசுகன்னி
- தேவசகாயம்பிள்ளை
- நவீனகபத்திரா
- ஞானசீலி
- எஸ்தாக்கியார்
- கருங்குயில் குன்றத்துக் கொலை
- அந்தோனியார்
- மெய்காப்போன் தன்சுடமை
- சங்கிலியன்
- வரதமனோகரி
- நொண்டி
- போருக்குப்பின்
- வீராமாதேளி
- வேலங்கன்னி
- மனம்போல்மாங்கல்யம்
- பங்கிராசா
பழக்கிய நாட்டுக்கூத்துக்கள்
- ஜெனோவா
- சுபத்திரா
- எஸ்தாக்கியார்
- நொண்டி
- கண்டியரசன்
- துன்பத்தின் பின்
- வீரமாதேவி
- படைவெட்டு
- அமலமரித்தியாகிகள்
- அக்கினேசுகன்னி
- கருங்குயில் குன்றத்துக் கொலை
- போருக்குப்பின்
- ஞானசீலி
- மரிசிலியன்
- வாழ்க்கைப்புயல்
- புரட்சித்துறவி
- பங்கிராசா
- பூதகுமாரன்