மகாலிங்கம் கோவிந்தராசு
மகாலிங்கம் கோவிந்தராசு (Mahalingam Govindaraj) எனும் வேளாண் அறிவியலாளர் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2022ஆம் ஆண்டிற்கான போர்லாக் விருதை தனது வேளாண் அறிவியல் ஆராய்ச்சிக்காகப் பெற்றுள்ளார்.[1]
கல்வி
கோவிந்தராசு வேளாண்மையில் முது அறிவியல் மற்றும் முனைவர் பட்டத்தினை கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். முனைவர் பட்டத்திற்கு தாவர பெருக்கம் மற்றும் மரபியலில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக வேளான் இளம் அறிவியல் பட்டத்தினை தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பெற்றுள்ளார்.
ஆராய்ச்சியாளராக
2011ஆம் ஆண்டு தொடங்கி பகுதி வறண்ட வெப்பமண்டல பன்னாட்டுப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக, கோவிந்தராஜ், அதிக இரும்பு மற்றும் துத்தநாக உள்ளடக்கம் கொண்ட கம்பு பயிரை உயிரி வலுப்படுத்துவதற்கான ஒரு உத்தியை வரையறுத்து, அதிக மகசூல் தரும், வறட்சியைத் தாங்கும் வகைகளை விவசாயிகளிடம் அறிமுகம் செய்தார்.
தனது ஆய்வின் ஒரு பகுதியாக 2014ஆம் ஆண்டில், கோவிந்தராஜ் உலகின் முதல் உயிர் வலுவூட்டப்பட்ட கம்பு பயிரினை வெளியிட்டார்.
இவர், இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் பத்துக்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க உயர் இரும்பு, துத்தநாகம் கொண்ட கம்புப் பயிரினை அறிமுகப்படுத்தினார். ஆயிரக்கணக்கான விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள், உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோரைச் சென்று சேர களப்பணியாற்றினார். இவர் 2019ஆம் ஆண்டில் மேற்கு ஆபிரிக்காவில் முதல் உயிர்வழி வலுவூட்டப்பட்ட கம்புப் பயிரினை அறிமுகப்படுத்தினார். இப்பயிர் விரைவில் இப்பகுதியில் 20,000 ஹெக்டேர்களுக்கு மேல் பயிரிடப்பட்ட முக்கிய வகையாக மாறியது. கோவிந்தராஜ் தற்பொழுது ஐதராபாத்திலுள்ள பகுதி வறண்ட வெப்பமண்டல பன்னாட்டுப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் மூத்த அறிவியலாளர்ரகப் பணியாற்றி வருகின்றார்.[2]
விருதுகள்
- 2009, பன்னாடு ஆய்வாளர் விருது, பன்னாட்டுத் தாவர ஊட்டச்சத்து நிறுவனம், ஜார்ஜியா, அமெரிக்கா
- 2014 வளத் திரட்டி விருது, பகுதி வறண்ட வெப்பமண்டல பன்னாட்டுப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்
- 2016 இளம் விஞ்ஞானி விருது பகுதி வறண்ட வெப்பமண்டல பன்னாட்டு பயிர்கள்ப் ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்
- 2022 போர்லாக் விருது, உலக உணவுப் பரிசு அறக்கட்டளை