ப. முத்துக்குமாரசுவாமி (இசைக்கலைஞர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ப. முத்துக்குமாரசுவாமி (இசைக்கலைஞர்)
ப. முத்துக்குமாரசுவாமி (இசைக்கலைஞர்)
இயற்பெயர்/
அறியும் பெயர்
ப. முத்துக்குமாரசுவாமி (இசைக்கலைஞர்)
பிறந்ததிகதி 23 ஆகஸ்ட் 1932
இறப்பு 26 ஜூன் 2019

ப. முத்துக்குமாரசுவாமி (23 ஆகஸ்ட் 1932 - 26 ஜூன் 2019) ஒரு கருநாடக இசைக் கலைஞரும், இசை ஆசிரியரும் ஆவார். இவர் 1950 களில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம். எம். தண்டபாணி தேசிகரின் பிரதான மாணாக்கராக இருந்தார்.[1]

ஆரம்ப வாழ்க்கை

இலங்கை, யாழ்ப்பாணத்தில் பரமசாமி குருக்கள், இரத்தினம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். பள்ளிப் படிப்பை யாழ்ப்பாணத்தில் முடித்தபின்னர், 1950 களின் பிற்பகுதியில் இந்தியாவுக்குச் சென்று அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் இசைத்துறையில் மாணவராகச் சேர்ந்தார். அங்கே எம். எம். தண்டபாணி தேசிகர் இவருக்கு ஆசிரியராக வாய்த்தார். தண்டபாணி தேசிகர் இந்து சமய துதிப்பாடல்களையும் தமிழ் கிருதிகளையும் பாடுவதில் வல்லவராக இருந்தார். முத்துக்குமாரசுவாமி தனது குருவைப் பின்பற்றி தமிழ்ப் பாடல்கள் பாடுவதில் நல்ல தேர்ச்சி பெற்றார்.

இசைப் பயணம்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் முத்துக்குமாரசுவாமி திரும்ப யாழ்ப்பாணம் சென்று அங்கே அரசுப் பள்ளிகளில் இசை ஆசிரியராக நியமனம் பெற்றார். யாழ்ப்பாணத்தில் பல பள்ளிக்கூடங்களில் அவர் இசை ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கையில் இனக்கலவரங்கள் ஏற்பட்டதையடுத்து 1986 ஆம் ஆண்டு அவர் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்தார். அவரது முன்னோர்கள் காஞ்சீபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் சென்று குடியேறியவர்கள் என்பதால் இவரது இப்போதைய வருகையை தாயகம் திரும்பினார் என்று சொல்லலாம்.

சென்னை சங்கீத சபாக்களிலும், தனி நிகழ்ச்சிகளிலும் இசைக் கச்சேரிகள் செய்து வந்தார். அத்துடன் மாணவர்களுக்கு இசைப்பயிற்சி அளித்து வந்தார். சுதா ரகுநாதன் உட்பட்ட சில பிரபல இசைக் கலைஞர்கள் இவரிடம் தமிழ் கிருதிகள் பயின்றனர்.[1] தனது 86 ஆவது வயது வரை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இசை ஆசிரியராகப் பணி புரிந்தார்.

தண்டபாணி தேசிகரின் பிரதம சீடர் என்ற வகையில் 2008 ஆம் ஆண்டு தேசிகரின் நூற்றாண்டு சமயத்தில் சென்னையில் பல சபாக்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும் தேசிகரின் நினைவு நாளன்று சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வார். தேசிகர் மதுரை மீனாட்சி அம்மன் மீது பாடிய பாடல்களை முத்துக்குமாரசுவாமி பிரபலப்படுத்தினார்.

சுதா ரகுநாதன் இவரைப் பற்றிக் கூறுகையில், "எப்போதாவது நான் ஒரு தமிழ்க் கிருதியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தால் முத்துக்குமாரசுவாமி உடனே உதவுவார். தனது அறிவைப் பகிர்ந்துகொள்வதில் அவரைப் போலத் தாராள மனம் கொண்ட இசைக் கலைஞர்களை நான் கண்டதில்லை" என்று சொன்னார்.[1]

குடும்பம்

முத்துக்குமாரசுவாமி நளினரஞ்சனி என்பவரைத் திருமணம் செய்தார். இத் தம்பதியருக்கு கலாதரன், ஓவியர் பத்மவாசன், சாரங்கதரன், குமரன் ஆகிய மகன்களும் கீதா என்ற மகளும் உள்ளனர்.[2]

வெளியீடுகள்

இசை அருவி, கலை அருவி, இசை ஏடு ஆகிய இதழ்களை வெளியிட்டு வந்தார்.[2]

இறப்பு

வயது மூப்பு காரணமாக முத்துக்குமாரசுவாமி சிலகாலம் உடல்நலம் குன்றியிருந்தார். 2019 ஜூன் 25 ஆம் நாள் சென்னை கொட்டிவாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 87. 26 ஆம் நாள் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்