பேராக் போர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Blue-jackets and marines poling the British expedition up the Perak river, 1876.jpg
பேராக் ஆற்றில் பிரித்தானிய பயணத்தை மேற்கொள்ளும் கடற்படையினர்.

பேராக் போர் (1875–1876) (ஆங்கிலம்; Perak War; மலாய்: Peperangan Perak; சீனம்: 霹雳战争) என்பது வடமேற்கு மலாயாவில் உள்ள பேராக் மாநிலத்தில் பிரித்தானிய படைகளுக்கும்; மற்றும் உள்ளூர் படைகளுக்கும் இடையே நடந்த போரைக் குறிப்பிடுவதாகும்.[1]

கீழ் பேராக் மாநிலத்தில் வெளிநாட்டினர் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வருவது; மற்றும் பிரித்தானிய ஆளுநர், ஜேம்ஸ் பர்ச்சை அகற்றுவது; ஆகியவற்றின் அடிப்படையில்; கீழ் பேராக் மாநிலச் சுல்தானும் பிற உள்ளூர் தலைவர்களும் முயற்சி செய்தனர். இவற்றின் தொடர்ச்சியில், 1875-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்ச் எனும் பிரித்தானிய ஆளுநர் கொல்லப் பட்டார். அதைத் தொடர்ந்து ஓர் உள்நாட்டுப் போர் உருவானது. அதில் பிரித்தானிய படைகள் மகாராஜா லேலாவின் ஆதரவாளர்களைத் தோற்கடித்தன.

பின்னணி

படிமம்:CO 1069-484-121 (7886263242).jpg
டத்தோ சாகோர்; மற்றும் ஜேம்ஸ் பர்ச் ஆகியோருடன் சுல்தான் அப்துல்லா, 1874.

19-ஆம் நூற்றாண்டில், மலாய் சுல்தான்கள் படிப்படியாக பிரித்தானியப் பேரரசின் காலனிய கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். 1833-ஆம் ஆண்டு அடிமைத்தன ஒழிப்புச் சட்டத்திற்குப் பிறகு (Slavery Abolition Act 1833), பிரித்தானியர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் அடிமைத்தன ஒழிப்புக் கொள்கையை அதிகாரப்பூர்வமாகப் பின்பற்றினர்.[2]

1870-களில் இருந்து, தங்களின் அதிகாரம் போதுமான அளவு பாதுகாப்புடன் இருப்பதாக பிரித்தானியர் உணர்ந்த பின்னர், பிரபலமற்ற கொள்கைகளை அறிமுகப்படுத்தத் தொடங்கினர். மலாயாவில் வழக்கத்தில் இருந்த அடிமைத் தனத்திற்கு எதிரான ஓர் ஒழிப்புக் கொள்கையைப் பிரித்தானியர் தீவிரமாகப் பின்பற்றத் தொடங்கினர்.[3]

1875-ஆம் ஆண்டில், பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர், ஜேம்ஸ் பர்ச் என்பவர் மகாராஜா லேலா எனும் பேராக் சுல்தானின் ஆதரவாளரால் கொல்லப்பட்டார். 1875-ஆம் ஆண்டில், பேராக் சுல்தான் அப்துல்லா முகமது சா II அரச அரண்மனையிலிருந்த அடிமை அகதிகள் விடுதலை பெறுவதற்கு ஜேம்ஸ் பர்ச் உதவினார். அந்தக் காரணத்தின் அடிப்படையில் ஜேம்ஸ் பர்ச் கொல்லப்பட்டார்.[4]

பண்டார் பாரு தாக்குதல்

படிமம்:Kompleks Sejarah Pasir Salak, Perak, Malaysia - panoramio.jpg
பாசிர் சாலாக் வரலாற்று வளாகம்

ஜேம்ஸ் பர்ச் கொலைக்குப் பிறகு, உள்ளூர் மலாய்க்காரர்கள் 1875 நவம்பர் 2-ஆம் தேதி இரவு பண்டார் பாருவைத் தாக்க திட்டமிட்டனர். ஆனால் கனமழை காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. 1875 நவம்பர் 6-ஆம் தேதிக்குள் ஆங்காங் மற்றும் பர்மாவில் இருந்து பிரித்தானிய படைகள் வரத் தொடங்கின. 1875 நவம்பர் 7-ஆம் தேதி பேராக்கின் பண்டா துவா (Bandar Tua, Perak) அருகே ஒரு மோதல் ஏற்பட்டது. சுமார் 106 பிரித்தானிய வீரர்களும் உள்ளூர் மலாய்க்காரர்களும் அந்த மோதலில் ஈடுபட்டனர்.[3][5]

பேராக் போரில் இதுவே முதல் போர் என அறியப்படுகிறது. எதிர்பாராத எதிர்ப்பைச் சந்தித்ததால், பிரித்தானிய வீரர்கள் பின்வாங்கினர். அத்துடன் அந்த முதல் போர் முடிந்தது. அந்தப் போரில் கேப்டன் இன்னஸ் (Captain Innes) என்ற தலைமை அதிகாரி உட்பட 4 பேரை பிரித்தானிய படைகள் இழந்தன. இதைத் தொடர்ந்து வலுவூட்டல் இராணுவப்படை அனுப்பப்பட்டது. 300 பேர் 80 படகுகளுடன் பேராக்கிற்கு வந்தனர். படை வீரர்களில் பெரும்பாலோர் இந்தியா மற்றும் ஆங்காங் தீவில் இருந்து அனுப்பப்பட்டனர்.[3][5]

போர்

பண்டார் துவா போர்

படிமம்:Birch-Memorial-Clock-Tower-Ipoh.jpg
ஈப்போவில் ஜேம்ஸ் பர்ச் நினைவகக் கோபுரம்

1875-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி மகாராஜா லேலாவின் சீடர்களால் ஜேம்ஸ் பர்ச் கொல்லப்பட்டார். மகாராஜா லேலாவின் சீடர்களில் ஒருவரான செபுண்டம் (Sepuntum), ஜேம்ஸ் பர்ச்சை ஈட்டியால் குத்திக் கொன்றார். அந்த நேரத்தில் ஜேம்ஸ் பர்ச், எஸ்எஸ் டிராகன் (SS Dragon) எனும் தன் படகின் குளியல் அறையில் இருந்தார். அப்போது அந்தப் படகு பேராக் ஆற்றங்கரையில் மகாராஜா லேலாவின் வீட்டிற்கு அருகில் பாசிர் சாலாக் எனும் இடத்தில் நங்கூரமிட்டு இருந்தது..

அதன் பிறகு, திசம்பர் 7, 1875 அன்று பாசிர் சாலாக்கில் இருந்த மகாராஜா லேலாவின் கோட்டையை பிரித்தானிய படையினர் தாக்கினர். ஆனால் கம்போங் பியாக் (Kampung Biak) எனும் இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்தத் தாக்குதல் பிரித்தானியர்களுக்குத் தோல்வியில் முடிந்தது. அத்துடன் அந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்து கொல்லப்பட்டனர்.[6]

கோத்தா லாமா கானான் போர்

பண்டார் துவா போருக்குப் பின்னர், மகாராஜா லேலாவின் கீழ் இருந்த வீரர்கள் சயோங் (Sayong) எனும் இடத்திற்குப் பின்வாங்கினர். பிரித்தானிய படையினர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். இடைவழியில் எதிரிக் கோட்டைகள் மற்றும் கிராமங்களை பிரித்தானிய படையினர் தாக்கி அழித்தனர். பின்னர், சனவரி 4, 1876 அன்று, கோத்தா லாமா கானான் (Kota Lama Kanan, Sayong) எனும் இடத்தில் பிரித்தானிய படையினர் தாக்கப்பட்டனர். அந்தத் தாக்குதலில் பிரித்தானிய உயர்த் தளபதி பிரிகேடியர் எச்.ஜே. ஆக்கின்ஸ் (Brigadier H.J. Hawkins) கொல்லப்பட்டார்.[3]

முடிவு

சில நாட்களில், மகாராஜா லேலாவின் கீழ் இருந்த படை வீரர்கள் செயலிழக்கத் தொடங்கினர். 1876-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பேராக் போர் முடிவுக்கு வந்தது. முக்கியத் தலைவர்களான மகாராஜா லேலா, சுல்தான் அப்துல்லா, நிகா இப்ராகீம் மற்றும் அவர்களின் வீரர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.[3]

நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் சுல்தான் அப்துல்லா, நிகா இப்ராகீம் ஆகிய இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டு, சீசெல்சு நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர்.[7]

இதற்கிடையில் ஜேம்ஸ் பர்ச் கொலை வழக்கில் மகாராஜா லேலா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தைப்பிங்கில் 1877 சனவரி 20-ஆம் தேதி மகாராஜா லேலா தூக்கிலிடப்பட்டார். இதன் பின்னர் பேராக்கின் பிரித்தானிய கட்டுப்பாட்டின் மீதான நேரடி எதிர்ப்பு ஒரு முடிவுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக, பிரித்தானிய அரசு நிர்வாகம் தைப்பிங்கிற்கு மாற்றப்பட்டது.[5]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "The sultan of Lower Perak and other local chiefs attempted to end foreign influence in the region and remove the British administrator James W. W. Birch". www.sabrizain.org. Retrieved 15 December 2025.
  2. The Palgrave Handbook of Bondage and Human Rights in Africa and Asia. (2020). Tyskland: Palgrave Macmillan US. p. 130
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "The Visual Report of The Perak War Based on Selected Newspaper Visuals from Britain and America, 1875-1876" (PDF). Malaysian Journal of Communication. Retrieved 15 December 2025.
  4. Andaya, Barbara Watson (1982). A History of Malaysia (in ஆங்கிலம்). New York, USA: St. Martin's Press. p. 161. ISBN 978-0-312-38120-2.
  5. 5.0 5.1 5.2 "The Governor of the Straits Settlements, fearing a general uprising, telegraphed India requesting 1,500 troops. India was not under obligation to assist but did so rapidly and troops were despached from the sub-continent, Burma, Singapore and Hong Kong". www.kaiserscross.com. Retrieved 15 December 2025.
  6. "The Battle of Bandar Tua". www.sabrizain.org. Retrieved 2024-05-14.
  7. "More than just about Birch and Maharaja Lela". The Star. Malaysia. 13 November 2017.
  • Swettenham, Frank Athelstane (1967), Stories and sketches. Kuala Lumpur: Oxford University Press.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பேராக்_போர்&oldid=451713" இலிருந்து மீள்விக்கப்பட்டது