பெருங்குன்றூர் கிழார், சங்கப்புலவர்
பெருங்குன்றூர் கிழார், சங்க காலப் புலவர்களில் ஒருவராவார். இவர் பாடிய மொத்தப் பாடல்கள் 21. இவற்றில் அகம் எனப்படும் காதல் சார்ந்தவை ஆறு. அகப்பாடல்கள் ஆறில் நான்கு (5, 112, 119, 347) நற்றிணையிலும் ஒன்று அகநானூற்றிலும் (8) மற்றொன்று குறுந்தொகையிலும் (338) உள்ளன. புறநானூற்றில் ஐந்து பாடல்கள் (147, 210, 211, 266, 318) இருக்கின்றன. எஞ்சிய பத்துப் பாடல்கள் பதிற்றுப்பத்திலும் தொகை நூலில் ஒன்பதாம் பத்தாக அமைந்துள்ளன.[1]
பெயர்க் காரணம்
கிழார் என்பது உடைமைப் பொருளது. பெரும்பாலும் இது நிலவுடைமையைச் சுட்டுவதால் இவர் வேளாண்குடி சார்ந்தவர் என்ற கருத்து உள்ளது. பெருங்குன்றூர் என்பது இவரது ஊர்ப் பெயரைக் குறிப்பதாகக் கொள்வர். பெருங்குன்றூர் என்பதால் மலைப்பகுதியாக இருந்திருக்கும்.இவர் பாடிய 6 அகப் பாடல்களுள் 5 பாடல்கள் குறிஞ்சித் திணைக் குரியவை என்பதால் இவர் மலைவளம் நிறைந்த குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம் .[1]
இளஞ்சேரல் இரும்பொறை
இந்தச் சேர அரசனைப் புகழ்ந்து இவர் பாடியுள்ளார். ஒன்பதாம் பத்து
பதிற்றுப்பத்துப் பாடலுக்காக இவர் பெற்ற பரிசில்
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை இவருக்கு இந்தப் பரிசில்களை பதிற்றுப்பத்துப் பாடல்களுக்காக வழங்கினான்.
- 32,000 காணம் பணமாகக் கொடுத்தான்.
- புலவருக்குத் தெரியாமல் ஊரும், மனையும், ஏரும், இன்ப வளங்களும், எண்ணில் அடங்கா அணிகலச் செல்வமும் கொடுத்தான்.
- இவற்றையெல்லாம் பாதுகாத்து அவருக்கு நல்கத் தன் பொறுப்பில் பாதுகாவலும் கொடுத்தான்.
சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை
- இவன் இப் புலவர்க்குப் பரிசில் நல்காது காலம் தாழ்த்தினான். அவனிடம் இவர் சொன்னார்.
- உன்னைப் போன்றவர்கள் இப்படிச் செய்தால் எம்மைப் போன்றவர்கள் பிறக்கவே மாட்டார்கள் அல்லவா? உன்னை எதிர்த்தவர்கள் கையற்று வருந்துவது போல நான் வறுங்கையுடன் மீள்கிறேன், என்கிறார்.[2]
- அரசு படக் கடக்கும் தோன்றலே! நீ நினைத்ததை முடித்துவிட்டாய். முதல்நாளில் கையில் உள்ளது போலக் காட்டி, மறுநாள் பரிசில் நல்காமல் பொய்படச் செய்தாய். இதற்காக நீ நாணவில்லை. உன் செயலுக்காக நான் நாணுகிறேன். நா வருந்த நான் பாடப் பாடக் கேட்டுப் பதித்துக்கொண்ட உன் மார்பைத் தொழுதுவிட்டுச் செல்கிறேன். உணவில்லாமல் எலியே செத்துப்போன என் வீட்டுக்குச் செல்கிறேன். பால் இல்லாமையால் குழந்தை முலையைக் கடித்த துன்பத்தோடு வாழும் என் மனைவியின் இருப்பிடத்துக்குச் செல்கிறேன், என்கிறார் புலவர்.[3]
சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி
- மழை பொழியாத கோடையாயினும், கடல் வளம் சுரக்கும் தாட்டை உடையவன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி என்னும் சோழமன்னன். இவனைக் கண்டு பாடி இந்தப் புலவர் தமது வறுமையைப் போக்கிக்கொள்கிறார்.[4]
பேகன் மனைவி கண்ணகி
- இவர் கடையெழு வள்ளல்களில் ஒருவனான வையாவிக் கோப்பெரும் பேகனைக் கண்டு பாடுகிறார். பேகன் தன் மனைவி கண்ணகியைத் துறந்து வேறொருத்தியோடு வாழ்ந்துவரும் காலத்தில் அவனைக் கண்டு பாடுகிறார்.
- ஆவியர் கோவே! கற்குகைகளையும், மலைகளையும் தாண்டி உன்னிடம் வந்து என் சீறியாழில் செவ்வழிப்பண் இசைத்துக்கொண்டு பாடுகிறேன். நீ எனக்குப் பரிசில் தர விரும்பினால் ஒன்று செய். உன் மனைவி தன் கூந்தலுக்கு எண்ணெய்கூடத் தடவாமல் தனியே புலம்பிக்கொண்டிருக்கிறாள். நீ அவளிடம் சென்று அவள் கூந்தலுக்கு மலர் சூட்டுக! என்கிறார்.[5]
வல்லாண்முல்லை
- அடகுக்கீரை பறிக்காமல் வாடுகிறது. விறகு எரிக்காம் காய்கிறது. அந்த வீட்டு மாயோளைப் பசி பிய்த்துத் தின்னுகிறது. என்றாலும் வீட்டுக் கூரையில் குதிரை மயிர் மெத்தை வைத்துக் கட்டியிருக்கும் குடம்பையில் குருவி பாதுகாப்பாக உறங்குவது போல, வேந்தர் பெண் கேட்டுத் தாக்கினாலும் வள்ளாள் பாதுகாப்பாக இருக்கிறாளாம்.[6]
அகத்திணைப் பாடல்கள்
வழையொடு வாழை
- கரடி ஈயல் புற்றைக் கிண்டும்போது அதன் அதன் உள்ளே இருக்கும் பாம்பு கரடியின் நகத்தால் கீறப்பட்டு தன் வலிமையை இழக்கும் வழியில் செல்லவேண்டிய கானத்தின் நள்ளிரவு அவருடன் செல்வதென்றால் எனக்கு அரிது அன்று. அந்த வழியில் ஆண்புலி காட்டுப்பன்றியை அட்டு பலாப்பழம் நசுங்குமாறு இழுத்துச் செல்லும். மூங்கில் காட்டில் காட்டில் காயம்பட்ட களிறு வாழையொடு வாழை மயங்கிக் கிடக்கும் பக்கத்திலுள்ள தசும்பு நீரில் கிடக்கும்போது பிடி வாழைமரத்தை முறுக்கி அதன் வாயில் ஊட்டும் முழக்கம் கேட்கும். இப்படிப்பட்ட வழியில் வருவாயோ என்று அவர் என்னைக் கேட்டிருக்கவேண்டும். கேட்கவில்லை என்று சொல்லித் தலைவி தோழியிடம் சொல்லிக் கவலைப்படுகிறாள்.
- மழையில் நனைந்த என் ஐம்பால் கூந்தலைப் பின்பக்கமாக வாங்கிப் நேற்று பிழிந்துவிட்டபோதே சொல்லி வரவல்லையோ என்று கேட்டிருக்க வேண்டும், என்கிறாள்.[7]
ஆ
- அற்சிரம் வந்துவிட்டது. அவள் அசா விடுகிறாள். வெயிலுக்காக இரலை தன் பிணையோடு அரில் புதரில் படுத்துக் கிடந்துவிட்டு மாலைப்பொழுது வந்தவுடன் விளந்திருக்கும் பயறுகளை மேயும். (எனவே, காத்திரு என்று தோழி தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியை வற்புறுத்துகிறாள்.) [8]
நறைப்பவர்
- குறவர் தம் குன்றத்து வயலில் நறைப்பவர்களை அறுத்தெறிவர். என்றாலும் அது அறாது சந்தன மரத்தைச் சுற்றிக்கொண்டு ஏறும்.இப்படிப்பட்ட அற்சிரக் காலத்திலும் அவரைப் பிரிதல் அரிது. இவர் வாடைக்காலத்தில் பிரிவதாகத் தூது வந்திருக்கிறதே! - அவளுக்குக் கலக்கம்.[9]
மழைக்கு விருந்து
- அவர் வரப்போகிறார் என்பதை முன்னறிவிப்பு செய்துகொண்டு மழைமேகம் மின்னி இடிக்கின்றதே! அதற்கு என்ன விருந்து தரப்போகிறோம்? - பிரிவுத் துயரத்தைப் போக்கத் தோழி தலைவியைத் தேற்றும் புதிய உத்தி.[10]
புனவன் சிறுபொறி
- தினை மேய வரும் கேழலுக்குப் புனவன் பொறி வைத்தான். அந்தப் பொறியில் புலி மாட்டிக்கொளவது உண்டு. அவன் இத்தகைய நாட்டை உடையவன். குளவிப் பூவையும், கூதளம் பூவையும் கண்ணியாகக் கட்டிச் சூடிக்கொண்டு அவன் வருகுவன். வந்ததும் அவன் உன் முயக்கத்தைப் பெற இயலாது. காரணம் உன் புலவி. - காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்குமாறு தோழி தலைவியிடம் சொல்கிறாள்.[11]
பேரன்பினன்
- அவன் தன்னைப் பேரன்பினன் என்று என்னிடம் நிரும்பத் திரும்பக் கூறுகிறான். மழைக்காலத்தில் கத்தும் தவளை வேனில் காலத்தில் கத்துவது போல் அது இருக்கிறது. விட்டுவிட்டுச் சென்றுவிடுவான் போல இருக்கிறது. - அவன் தொலைவில் காத்திருக்கும்போது தலைவி தோழியிடம் இப்படிச் சொல்லிக் கலங்குகிறாள்.
- மாதிரம் புதைய மழை பொழிந்து கொட்டும் அருவி புலையன் பெரிய வாயையுடைய தண்ணுமையை முழக்குவது போல உள்ளது.[12]
அடிக்குறிப்பு
- ↑ 1.0 1.1 மயிலை பாலு (20 மே 2013). "சங்கப் புலவர்கள் -பெருங்குன்றூர்கிழார் ::". தீக்கதிர் தமிழ் நாளிதழ். http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=32875. பார்த்த நாள்: 20 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ புறநானூறு 210
- ↑ புறநானூறு 211
- ↑ புறநானூறு 266
- ↑ புறநானூறு 147
- ↑ புறநானூறு 318
- ↑ அகநானூறு 8
- ↑ குறுந்தொகை 338
- ↑ நற்றிணை 5
- ↑ நற்றிணை 112
- ↑ நற்றிணை 119
- ↑ நற்றிணை 347
புற இணைப்புகள்
வெளி இணைப்புகள்
- ↑ 1.0 1.1 மயிலை பாலு (20 மே 2013). "சங்கப் புலவர்கள் -பெருங்குன்றூர்கிழார் ::". தீக்கதிர் தமிழ் நாளிதழ். http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=32875. பார்த்த நாள்: 20 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ புறநானூறு 210
- ↑ புறநானூறு 211
- ↑ புறநானூறு 266
- ↑ புறநானூறு 147
- ↑ புறநானூறு 318
- ↑ அகநானூறு 8
- ↑ குறுந்தொகை 338
- ↑ நற்றிணை 5
- ↑ நற்றிணை 112
- ↑ நற்றிணை 119
- ↑ நற்றிணை 347